சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டக் கல்லூரி மாணவர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கைலாசபுரம் பகுதியை சேர்ந்த பரந்தாமன் (30). ஆந்திரா சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு சட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கிறார். படித்துக் கொண்டே சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியிலும் பரந்தாமன் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்குக் கடந்த 18ஆம் தேதி பிறந்தநாள். இதையடுத்து கைலாசபுரம் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து வெகுவிமரிசையாக பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். நண்பர்கள் புடைசூழ பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, பரந்தாமனை மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான போலீஸார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் கைலாசபுரம் சுடுகாடு அருகே பரந்தாமன், தனது நண்பர்களுடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் பரந்தாமன்(30), நவீன்(28), கோபி(37), அஜித்(25), பிரவீன்(25) நிஷாந்குமார்(21) ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். அவர்கள் 6 பேர் மீதும் கலகம் செய்தல், பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திரா சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து வரும் மூன்றாம் ஆண்டு மாணவர் தனது பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக பட்டாக்கத்திகளைப் பயன்படுத்தி கேக் வெட்டி கைதான சம்பவம் கைலாசபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.