மதுபோதையில் திருநங்கை காவலரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட குற்றப்பிரிவு காவலர், அவரது நண்பர்கள் என மூன்று பேர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை போலீஸில் பணியாற்றி வரும் 28 வயதான திருநங்கை காவலர் அமைந்தகரை பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவில் உணவு வாங்குவதற்காக அண்ணா ஆர்ச் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றுக்கு வந்திருக்கிறார். உணவு ஆர்டர் செய்துவிட்டு அவர் காத்திருந்தபோது அங்கு போதையில் மூன்று பேர் வந்திருக்கிறார்கள். திருநங்கை காவலரிடம் அவர்கள் ஹோட்டலின் கழிப்பறை எங்கே இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். அதற்கு, தனக்குத் தெரியாது என காவலர் பதில் சொல்லியிருக்கிறார்.
அவர் தெரியாது என்று சொல்லியும் அந்த இடத்தை விட்டு நகராத மூன்று பேரும், இடுப்பைக் கிள்ளி ஆபாசமாக நடந்துகொண்டதோடு, அநாகரிகமாகவும் பேசியிருக்கிறார்கள். இதனால், அதிர்ச்சியடைந்த காவலர், தான் காவல்துறையில் பணியாற்றுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, போதையில் இருந்தவர்களில் ஒருவர், நாங்களும் போலீஸ்தான். அமைந்தகரை குற்றப்பிரிவு காவலர்கள் என்று சொல்லியிருக்கிறார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக திருநங்கை காவலர் அமைந்தகரை போலீஸில் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரணையைத் தொடங்கியிருக்கும் போலீஸார், சம்பவம் நடந்த ஹோட்டலில் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். விசாரணையில் போதையில் வந்து காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து அநாகரிமாகப் பேசியது அமைந்தகரை குற்றப்பிரிவில் பணிபுரியும் கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read : 10 நிமிடங்கள்; 100 கி.மீ – ஜெஃப் பெசோஸின் ஸ்பேஸ் ட்ரிப்பில் என்ன ஸ்பெஷல்?