தனுஷ் நடிப்பில் வரும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பாலிவுட்டில் வெளியாகும் படம் `அட்ராங்கி ரே’. இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அக்சய் குமாருடன் தனுஷ் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ எனும் பெயரில் வெளியாகிறது. இது இல்லாமல் தனுஷ் கைவசம் இருக்கும் படங்களைப் பட்டியலிட, பத்து விரல்கள் பத்தாது. அந்தப் படங்களைப் பற்றியும் அந்தப் படங்களை இயக்குபவர்களைப் பற்றியும் பார்க்கலாமா..?
மாறன் (தமிழ்)

ஸ்டைலீஷ் மேக்கிங்குக்கு சொந்தக்காரரான இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படம்தான் ‘மாறன்’. இந்தப் படம் 2022 தொடக்கத்தில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ‘மாஸ்டர்’ புகழ் மாளவிகா மோகனன் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
தி கிரே மேன் (ஆங்கிலம்)

‘அவெஞ்சர்ஸ்’ பாகங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ், அடுத்தடுத்தாக நெட்ஃபிளிக்ஸூக்காக ஒரு நேரடி ஒடிடி படமொன்றை இயக்கிவருகின்றனர். ரியான் கோஸ்ட்லிங், க்ரிஸ் எவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹெண்ட்விக் போன்ற ஹாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து நம்ம தனுஷூம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமானது அடுத்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.
திருச்சிற்றம்பலம் (தமிழ்)

தனுஷின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர் மித்ரன் ஆர்.ஜவஹர். இவர் இயக்கத்தில் தனுஷ் ஏற்கெனவே ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு அவருடன் தனுஷ் இணையும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்திருக்கும் இந்தப் படத்தில் ராஷி கண்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படமானது அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகவிருக்கிறது.
நானே வருவேன் – (தமிழ், தெலுங்கு)

‘மயக்கம் என்ன’ படத்திற்குப் பிறகு தனது அண்ணனும் குருவுமான செல்வராகவனுடன் தனுஷ் இணையும் படம் ‘நானே வருவேன்’. தாணு தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தனுஷூக்கு இரட்டை வேடம். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்புகளில்தான் தனுஷ் பங்கேற்றுவருகிறார்.
D46 (தெலுங்கு)

மென்மையான ரொமாண்டிக் படங்களுக்குப் பெயர் பெற்றவர் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா. அவரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பானது இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவிருக்கிறது. முழுக்க முழுக்க காதல் பின்னணியைக் கொண்ட ஒரு படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிரத்தில் ஒருவன் -2 (பான் இந்தியா)
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ‘பாகுபலி’ படத்துக்கு நிகராக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் தற்போது தொடங்கப்பட்டு 2024-ல் ஷூட்டிங் நடத்தப்படவிருக்கிறது.

இவை எல்லாமே தனுஷ் தரப்பிலிருந்தே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படங்கள். இந்தப் படங்கள் இல்லாமல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ‘பியார் பிரேமா காதல்’ இயக்குநர் இளன் இயக்கத்தில் ஒரு படம், ‘ராக்கி’, `சாணி காயிதம்’ போன்ற படங்களை இயக்கியிருக்கும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் என தனுஷின் பைல் லைன் அட்டகாசமாக இருக்கிறது. இதுபோக தனது ஐம்பதாவது படத்தை, வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை-2’ படமாகவோ அல்லது வேறொரு படமாகவோ நடிக்கவும் தனுஷ் முடிவு செய்திருக்கிறார்.
இதில் எந்தப் படத்தை நீங்க ரொம்பவே எதிர்பார்க்கிறீங்க..?