செத்து செத்து விளையாடுவோமா காமெடியை எப்போது பார்த்தாலும் சிரித்து ரசிப்போம். அந்தக் காமெடி மட்டுமல்ல என் புருசன் குழந்தை மாதிரி படத்தில் தொடங்கி இம்சை அரசன் வரை பல்வேறு காமெடி காட்சிகளில் நம்மைச் சிரிக்க வைத்த கலைஞர் முத்துக்காளை. தமிழ்நாடு நவ் யூடியூப் சேனலுக்கு முத்துக்காளை கொடுத்த பேட்டியில் பல்வேறு காமெடி காட்சிகளை எடுத்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் தன் பெர்சனல் வாழ்க்கை பற்றியும் நிறைய பகிர்ந்திருக்கிறார்.
எதற்கென்று தெரியாமல் துரத்தினேன்
என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் வடிவேலுவை அடிப்பதுபோல ஊர் முழுக்க துரத்திக்கொண்டே ஓடுவார் முத்துக்காளை. கடைசியில் ‘நான் உன் காதைத் தொட்டுட்டேன்ல.. நீ என் காதைத் தொடு பார்ப்போம்’ என்று சொல்லும் இடமெல்லாம் வெடித்துச் சிரித்திருப்போம். அந்தக் காமெடியை ரீ-கிரியேட் செய்து நடித்துக் காண்பித்த முத்துக்காளை சுவாரஸ்யமான ஒரு சம்பவமும் சொன்னார். ஷூட்டிங்கின்போது இந்தக் காட்சியில், `வடிவேலுவைத் துரத்திக்கொண்டு ஓடுங்கள்’ என்று மட்டும்தான் சொன்னார்கள். ஓடி நின்ற பிறகு என்ன செய்யலாம் என்பது பற்றி வடிவேலுவுக்கும் தெரியவில்லை, இயக்குநருக்கும் தெரியவில்லை. அடிக்கலாமா? கடித்து வைக்கலாமா? என்றெல்லாம் யோசித்து கடைசியில்தான் காதைத் தொடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோல இந்தப் படத்தில் முதலில் செத்து செத்து விளையாடலாம் காமெடி இல்லவே இல்லை. எடிட் செய்த பிறகு வடிவேலு – முத்துக்காளை வரும் காட்சிகள் நன்றாக இருந்ததால் இன்னமும் சில சீன்கள் எடுக்கலாம் என்று நினைத்து எடுத்ததுதான் அந்தக் காமெடி.
‘மூன்று டிகிரி’ முத்துக்காளை
குடியினால் பாதிக்கப்பட்டு மனம் திருந்திய முத்துக்காளை அதிலிருந்து விடுபட எதைக் கையில் எடுத்தார் தெரியுமா? படிப்பு. வெறும் மூன்று ரூபாய் இல்லாததால் படிக்க முடியாமல் எட்டாம் வகுப்போடு நின்றுவிட்டவர் முத்துக்காளை. சில வருடங்களுக்கு முன்பு தனது குடிப் பழக்கத்தை கைவிட்டதும் அவருக்கு படிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் பி.ஏ தமிழ், எம்.ஏ என முடித்து இப்போது மூன்றாவது டிகிரியையும் விரைவில் முடிக்க இருக்கிறார்.
இதுமட்டுமல்ல சிவாஜி படத்தில் பணியாற்றும்போது ரஜினி இவரிடம் புலிகேசி வசனங்களை பேசிக் காண்பித்தது. 150 ரூபாய்க்காக சினிமாவில் மொட்டை அடித்தவருக்கு, அப்பா இறந்தபோது மொட்டையடிக்க முடியாமல் போனது, எலி படத்திற்காக புல்லட் ஓட்டியது, கவுண்டமணி தொடங்கி விஜய் வரை பலருடன் நடித்த அனுபவங்களைப் பற்றி இந்தப் பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகர் முத்துக்காளை.
முழு பேட்டியையும் மிஸ் பண்ணாம பாருங்க…
Also Read: