இன்றைய தேதியில் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் சூர்யாதான். அவர் நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் வெளியீடும், அதைத்தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வரும் ஆதரவும் எதிர்ப்பும் என கடந்த மூன்று வாரங்களாகவே தலைப்புச்செய்திகளில் தவறாமல் இடம்பெற்றுவருகிறார் சூர்யா. இருப்பினும் இதுவொன்றும் சூர்யாவுக்கு புதிதில்லை. இதற்கு முன்பாக இதேபோன்று பலமுறை ஆஃப் ஸ்கிரீனில் மாஸ் காட்டியிருக்கிறார் சூர்யா. அவைகளைப் பற்றி..
* 2019-இல் மும்மொழிக் கொள்கையை நாடு முழுக்க அமல்படுத்தும் முயற்சிகளில் ஒன்றிய அரசு இறங்கியபோது சூர்யா, “மூன்று வயதிலேயே மூன்று மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள்?, குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்திருப்பது சரியல்ல. அந்த பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள்” என அதிரடியாக தன் கருத்துக்களை முன்வைத்தார். அப்போதும் இதேபோன்று பல்வேறு ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்தார் சூர்யா.
* படப்பிடிப்பிற்காக தஞ்சை சென்றிருந்த ஜோதிகா, தஞ்சை பெரிய கோயிலையும் தஞ்சை அரசு மருத்துவமனையையும் ஒப்பிட்டு “கோயிலுக்குப் பணம் கொடுப்பதை விட மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் பணம் கொடுங்கள்” என பேசியதற்கு அவருக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தது. அந்நிலையில் தன் மனைவி பேசியது சரியே என்று அவருக்கு பக்கபலமாக இருந்ததுடன் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கி மாஸ் காட்டினார்.
* நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டபோது, சூர்யா வெளியிட்ட அறிக்கையில், `நீட் போன்ற `மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது’ என்றும் `அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாகக் கொண்டு வருகிறது’ என்று விமர்சித்தார். மேலும் அந்த அறிக்கையில், ‘மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை ’பலியிட ‘ நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்’ என காட்டமாகவே தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார் சூர்யா. மேலும், `கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ என நீதித்துறையையும் விமர்சிக்க தவறவில்லை சூர்யா.
* தனது ‘சூரரைப் போற்று’ பட வெளியீட்டிலிருந்து கிடைத்த லாபத்திலிருந்து ஐந்து கோடி ரூபாயை மக்களுக்கு தொண்டு செய்ய பயன்படுத்தப்போவதாக அறிவித்தார் சூர்யா. அதன்படி 2.5 கோடியை தனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், மீதமிருந்த 2.5 கோடியை தமிழக மாணவர்கள் விண்ணபித்து பெற்றுக்கொள்ளும்படியும் வழிவகை செய்தார் சூர்யா.
* கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த தனது ரசிகர்கள் 250 பேரைத் தேர்ந்தெடுத்து தலா 5,000 ரூபாயை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தினார் சூர்யா. மேலும் கொரோனா நிவாரான தொகையாக தனது தந்தை சிவக்குமார், சகோதரர் கார்த்தியுடன் இணைந்து தலா ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழக அரசிடம் வழங்கினார் சூர்யா.
* கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு, ‘சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020’ என்று வரைவு அறிவிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டபோது, சூர்யா ஒன்றிய அரசை எதிர்க்கும்விதமாக, “ பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..!” என ட்வீட் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.
* திரைக்கலைஞர்களின் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும்விதமாக, ஒன்றிய அரசு, ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021, கொண்டுவந்தபோது சூர்யா, “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக மட்டுமே இருக்கவேண்டும் என்பதாகவும், அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல” என பகிரங்கமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
* இவை எல்லாவற்றையும்விட, சூர்யா கலந்துகொண்ட ஒரு மேடையில் அவரது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் படித்து ஒரு நல்ல வேலையும் பெற்ற, காயத்ரி என்னும் தந்தையை இழந்த இளம் பெண், தான் வாழ்வில் எதிர்கொண்ட சவால்களைக் குறித்து உருக்கமாக பேச, மாணவியின் பேச்சைக்கேட்டு கண்கலங்க ஆரம்பித்த சூர்யா ஒருகட்டத்தில் எழுந்துவந்து அந்த மாணவிக்கு கண்ணீருடன் ஆறுதல் கூறித் தேற்றினார்.
அடுத்தவர் வலியை உணரும் அந்த கண்ணீரில் உள்ளது அத்தனை ஹீரோயிசம்..!