சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ் இடையிலான உரையாடல் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தவறுதலாக தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். இந்த சம்பவம் பரவலாகக் கவனம் பெற்றது. இந்தநிலையி, பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ’’கடந்த ஆண்டு இந்த அவையில் நான் பேசும்போது நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) வெளிநடப்பு செய்துவிட்டீர்கள். இன்று நான் பேசுகிறேன் என்பதற்காக வெளிநடப்பு செய்துவிடுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால், அதை செய்யாததற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநடப்பு செய்துவிட்டுச் சென்றாலும் தவறுதலாக என்னுடைய காரில்தான் ஏற முயன்றீர்கள். நீங்கள் மட்டுமல்ல, நானும்தான் 3 நாட்களுக்கு முன்னர் உங்கள் காரில் தவறுதலாக ஏற முயன்றேன். அடுத்தமுறை தாரளமாக என்னுடைய காரை எடுத்துச் செல்லலாம். ஆனால், தயவுசெய்து கமலாலயத்துக்கு மட்டும் சென்று விடாதீர்கள்’’ என்று பேசவும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
ஓ.பி.எஸ் பதில்
சென்னை தி.நகரில் இருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைமையகமான கமலாலயத்தைக் குறிப்பிட்டு உதயநிதி பேசியதற்கு ஓ.பி.எஸ், தனது இருக்கையில் இருந்து எழுந்து பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘’எங்கள் கார் எப்போதும் எம்.ஜி.ஆர் மாளிகை (அ.தி.மு.க தலைமை அலுவலகம்) நோக்கிதான் செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிலளித்தார். அதன்பின்னர், ஓ.பி.எஸ் பதிலுக்கு உதயநிதி நன்றி தெரிவித்தார். இந்த சம்பவத்தால், பேரவையில் சிரிப்பலை அடங்க சிறிதுநேரம் ஆனது.
Also Read –