திருப்பத்தூர் ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்ற தி.மு.க பெண் கவுன்சிலர்கள் இருவர் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் மொத்தமுள்ள 18 இடங்களில் தி.மு.க 11 இடங்களிலும், அ.தி.மு.க 4 இடங்களிலும் பா.ம.க இரண்டு இடங்கள், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றிருக்கின்றனர். அவர்கள் இன்று ஆலங்காயம் ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர். தி.மு.க தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்தவரே கவுன்சிலராகத் தேர்வாகிறார். ஆனால், தி.மு.க கவுன்சிலர்களில் 7-வது வார்டில் வெற்றிபெற்றிருக்கும் ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜின் மருமகள் காயத்ரி பிரபாகரன் – 4வது வார்டில் வெற்றிபெற்றிருக்கும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆதரவாளர் பாரியின் மனைவி சங்கீதா பாரி ஆகியோர் இடையே ஒன்றியக் குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
கைகலப்பு
பதவியேற்புக்குப் பின்னர் ஒன்றிய அலுவலகத்துக்கு வெளியே கவுன்சிலர்கள் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், தலைவர் பதவி போட்டியால் இருதரப்பினரும் தங்களுடன் வருமாறு வற்புறுத்தினர். காயத்ரி, சங்கீதா ஆதரவாளர்கள் கவுன்சிலர்களைக் கையைப் பிடித்து இழுத்து,`எங்களுடன்தான் வர வேண்டும்’ என்று வலுக்கட்டாயமாக அழைத்தனர். ஒரு கட்டத்தில் இருதரப்பை சேர்ந்தவர்கள் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட போலீஸார், இரு தரப்பையும் சமாதானம் செய்ய முயன்றும் நடக்கவில்லை. இரு தரப்பினரும் வெவ்வேறு வாகனங்களில் கவுன்சிலர்களை ஏற்ற முயன்றனர். தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு கவுன்சிலருக்கு ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், ஜோலார்பேட்டை தொகுதியில் தன்னைத் தோற்கடித்த தி.மு.க எம்.எல்.ஏ தேவராஜ் தரப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செயல்பட உள்ளூர் அ.தி.மு.கவினருக்கு உத்தரவிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இரு தரப்பினர் மோதிக்கொண்ட நிலையில், கவுன்சிலர்கள் சிலரின் சட்டை கிழிந்தது. மேலும், பெண் கவுன்சிலர்கள் சிலரும் காயமடைந்த நிலையில், போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். ஒன்றியக் குழுத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் வரும் 22-ம் தேதி நடைபெறும் நிலையில், இரு தரப்பினரும் கவுன்சிலர்களை திருவண்ணாமலை, வேலூரில் இருக்கும் பெரிய ஹோட்டல்களில் தங்க வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் திருப்பத்தூர் தி.மு.கவில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
Also Read – தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் – 1937, 1948, 1965-ல் என்ன நடந்தது?