ஜொமாட்டோ

Zomato: `தேசிய மொழி இந்தி தெரிந்திருக்க வேண்டும்’ – ஜொமாட்டோ சர்ச்சை… என்ன நடந்தது?

உணவு டெலிவரியின்போது விடுபட்ட உணவு குறித்து கேள்வி எழுப்பிய சென்னை இளைஞருக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என ஜொமாட்டோ நிறுவன வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதி அளித்த பதில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. என்ன நடந்தது? Zomato

சென்னை இளைஞர்

சென்னையைச் சேர்ந்த விகாஸ் என்பவர் ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். ஆர்டர் செய்த உணவு வகைகளில், ஒன்று மிஸ்ஸாகவே, அதுகுறித்து ஜொமாட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகார் கூறியிருக்கிறார். `Chat Support’ எனப்படும் ஜொமாட்டோவின் சேவை மையத்தோடு அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவுகளின்படி, உணவு வகையில் ஒன்று டெலிவரி செய்யப்படாதது குறித்து விகாஸ் புகார் தெரிவித்திருக்கிறார். ஹோட்டலைத் தொடர்புகொண்டு புகார் கொடுக்கும்படியும், டெலிவரி செய்தவரிடம் பேசும்படியும் சாட் சப்போர்ட்டில் பேசும் வாடிக்கையாளர் சேவை மையப் பிரதிநிதி விகாஸை வலியுறுத்துகிறார். ஆனால், ஹோட்டல் நிர்வாகம் உங்களைத் தொடர்புகொண்டு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாக விகாஸ் தகவல் தெரிவிக்கிறார். ஆனால், ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து தங்களுக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை என ஜொமாட்டோ தரப்பில் சொல்லப்படுகிறது.

ஜொமாட்டோ பிரதிநிதியின் சர்ச்சை பதில்

ஜொமாட்டோ
ஜொமாட்டோ

ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து பதில் வரவில்லையென்றால் நீங்கள்தானே பேச வேண்டும். என்னை ஏன் பேசச் சொல்கிறீர்கள்’ என்று விகாஸ் கேட்க, சில நிமிடங்கள் நேரம் கொடுக்குமாறு ஜொமாட்டோ தரப்பில் பதில் கொடுக்கப்படுகிறது. சிறிதுநேரம் கழித்து தங்கள் தரப்பிலிருந்து 5 முறை ஹோட்டல் தரப்பிடம் பேசியதாகவும், மொழி பிரச்னையால் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் ஜொமாட்டோ பிரதிநிதி பதில் சொல்கிறார். இந்தப் பதிலை அடுத்து விகாஸ்,ஜொமாட்டோ சேவை தமிழகத்தில் இருக்கிறது என்றால், தமிழ் மொழி தெரிந்தவர்களைப் பணியமர்த்த வேண்டும். வேறு ஒருவரிடம் பேசி எனது பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொடுங்கள்’ என்று கூறியிருக்கிறார். இதற்குப் பதிலளித்த ஜொமாட்டோ பிரதிநிதி, `தங்களுடைய மேலான கவனத்துக்கு… இந்தி நமது தேசிய மொழி. அதனால், அனைவரும் கொஞ்சமாவது இந்தி தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்பது பொதுவானது’’ என்று பதிலளித்தது சர்ச்சையாகியிருக்கிறது. மேலும், இந்தியர் என்றால் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும், அந்த மொழி தெரியாததால் தன்னை பொய் பேசுபவர் என்று குறிப்பிட்ட பிரதிநிதி குறிப்பிட்டதாகவும் விகாஸ் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்தவிவகாரம் சர்ச்சையாகவே, ஜொமாட்டோவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் ட்விட்டரில் வலுத்து வருகின்றன. இதுகுறித்து பதிவிட்ட தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார், “எப்போது இந்தி தேசிய மொழியானது? தமிழகத்தில் இருக்கும் வாடிக்கையாளர் ஏன் இந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும். எதன் அடிப்படையில் உங்கள் வாடிக்கையாளர் கொஞ்சமாவது இந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். தயவுசெய்து உங்கள் வாடிக்கையாளர் பிரச்னையைத் தீர்த்து வைத்து, மன்னிப்புக் கேளுங்கள்’ என்று விமர்சித்திருக்கிறார். அதேநேரம், விகாஸின் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டதாக ஜொமாட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தால் #Reject_Zomato ட்விட்டரில் டிரெண்டானது.

Zomato விளக்கம்

ஜொமாட்டோ அறிக்கை
ஜொமாட்டோ அறிக்கை

இந்த சர்ச்சை தொடர்பாக ஜொமாட்டோ நிறுவனம் தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், குறிப்பிட்ட ஊழியரை பணிநீக்கம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கும் அந்த நிறுவனம், மக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை’ என்றும்,உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Also Read – Chris Greaves: அமேசான் டெலிவரி பாய் டு ஸ்காட்லாந்தின் ஹீரோ – கிறிஸ் கிரீவ்ஸின் கதை! #BANvSCO

1 thought on “Zomato: `தேசிய மொழி இந்தி தெரிந்திருக்க வேண்டும்’ – ஜொமாட்டோ சர்ச்சை… என்ன நடந்தது?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top