இந்திய கிரிக்கெட் வீரர்கள் பன்றி, மாட்டிறைச்சிகளை எடுத்துக் கொள்ளத் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டிருப்பதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ஹலால் இறைச்சி உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹலால் சர்ச்சை
உலகக் கோப்பை டி20 தொடரில் அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் இந்திய அணி வெளியேறியது. ஆனால், சமீபத்தில் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் எழுச்சிபெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று சாதித்திருக்கிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான புதிய இந்திய அணி. கேப்டன் ரோஹித் – பயிற்சியாளர் டிராவிட் என இந்திய கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் வெற்றியோடு தொடங்கியிருப்பதாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், வீரர்கள் டயட் விஷயத்தில் பிசிசிஐ எடுத்திருப்பதாகச் சொல்லப்படும் ஒரு முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய ஆண்கள் அணி வீரர்களின் டயட் தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கியிருக்கும் பிசிசிஐ, பன்றி மற்றும் மாட்டிறைச்சியை எந்தவொரு வடிவிலும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இறைச்சி உணவுகளைப் பொறுத்தவரை ஹலால் செய்யப்பட்ட இறைச்சி உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வீரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து Sports Tak வெளியிட்டிருக்கும் தகவலில் பிசிசிஐ இவ்வாறு வீரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் முக்கியமான தொடர்களைக் கருத்தில் கொண்டு வீரர்கள் ஃபிட்டாக இருக்க இந்த டயட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் பயோ-பபுள் சூழலில் வாழ்ந்துவரும் வீரர்கள் இனிமேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
வலுக்கும் எதிர்ப்பு
மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் பிசிசிஐ எப்படி, இதுபோன்றதொரு உத்தரவைப் பிறப்பிக்கலாம் என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் வெவ்வேறு மதங்களைக் கடைபிடிப்பவர்கள், அப்படியிருக்கும் சூழலில் அனைவரையும் ஹலால் இறைச்சியை உண்ணக் கட்டாயப்படுத்துவது ஏன் என்றும் பிசிசிஐ-யிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பிசிசிஐ தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலோ அல்லது விளக்கமோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : #NZvAUS: ஆஸ்திரேலியாவின் முதல் டி20 உலகக் கோப்பை! – #T20WorldCupFinal சாதனைத் துளிகள்!