`டாவின்சியின் டிசைன் முதல் ட்ரோன் வரை’- ஹெலிகாப்டரின் 450 ஆண்டுகால வரலாறு!

இயந்திரம் ஒன்றின் உதவியோடு நின்ற இடத்தில் இருந்தே மேலெழும்பி பறக்க இயலும் என்று 1480-களில் கனவு கண்டார் இத்தாலிய மேத லியானார்டோ டாவின்சி. அன்று தொடங்கிய பயணம் மெதுவான பரிணாம வளர்ச்சியடைந்து இன்று டிரோன் வரையில் வளர்ந்து நிற்கிறது… இந்த 500 ஆண்டுகளுக்கும் மேலான இடைப்பட்ட காலத்தில் ஹெலிகாப்டர் மாடல் கடந்து வந்த வரலாற்றைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

டாவின்சியின் கனவு

Helical air screw
Helical air screw

இத்தாலிய மாமேதை லியோனார்டோ டாவின்சி 1452 – 1519 காலகட்டத்தில் வாழ்ந்தவர். தேர்ந்த ஓவியரான அவர் இயந்திரம் ஒன்றின் மூலம் பறக்க முடியும் என்று தீர்க்கமாக நம்பினார். இது அவரது குறிப்புகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது. 1480-களில் இயந்திரம் ஒன்று நின்ற இடத்தில் இருந்தே பறக்க முடியும் என்பதற்கான ஒரு வடிவமைப்பை அவர் குறித்துவைத்திருந்தார். இந்தக் குறிப்புகளைத் தனது பெர்சனல் ரெஃபரென்ஸுக்காக மிரர் ரைட்டிங் எனப்படும் வலது இடபுற வரிசை எழுத்துகளில் அவர் இதைக் குறித்து வைத்திருந்தார். ஹெலிகாப்டருக்கான வரலாற்றில் பதிவான முதல் புள்ளியான இது `Helical air screw’ என்றழைக்கப்படுகிறது.

ஜார்ஜ் கேலே

ஏரோநாட்டிக்ஸ் எனப்படும் விமான அறிவியலில் முக்கியப் பங்காற்றியது இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் ஜார்ஜ் கேலே என்பவரால், 1843-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட aerial carriage டிசைன். இயந்திரங்கள் பறப்பது பற்றிய அடிப்படையான புரிதலை ஆரம்பத்திலேயே விளக்கிச் சொன்ன இவரது ஆய்வு ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பரிசோதனை முயற்சி

Enrico Forlanini Design
Enrico Forlanini Design

இத்தாலியப் பொறியாளர் Enrico Forlanini, 1877-ல் பரிசோதனை முயற்சியாக வடிவமைத்த ஹெலிகாப்டர் டிசைன், இயந்திரம் ஒன்றால் நின்ற இடத்தில் இருந்தே செங்குத்தாக மேல்நோக்கி எழும்ப முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருந்தது. மிலன் நகரின் பூங்கா ஒன்றில் பரிசோதனை முயற்சி செய்யப்பட்டபோது, கிட்டத்தட்ட 13 மீ உயரம் வரை மேலெழும்பிய அந்த ஹெலிகாப்டர், சுமார் 20 நொடிகள் நிலையாக ஓரிடத்தில் நின்றிருந்தது.

Alphonse Pénaud

பிரெஞ்சு ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரான Alphonse Pénaud ஹெலிகாப்டர்கள் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அவற்றின் இறக்கைகளாகப் பயன்படுத்தப்படும் `Twisted Rubber’-ஐ முதல்முதலாகப் பயன்படுத்தியவர். 1877-ல் இதை செயல்படுத்திக் காட்டிய அவர், அந்த இறக்கைகள் மூலம் அவற்றுக்கு சக்தியைக் கொடுக்க முடியும் என்று செயல் வடிவம் கொடுத்தார்.

முதல் செயல்வடிவம்

ஹெலிகாப்டரின் முதல் செயல்வடிவம் 1901-ல் ஜெர்மனியில் நிகழ்ந்தது. Hermann Ganswindt என்ற பொறியாளர் பெர்லின் நகர வீதியில் ஹெலிகாப்டரைப் பறக்க வைத்து அசத்தினார். ஆனால், இந்த நிகழ்வைப் படம் பிடித்த வீடியோ காட்சிகள் பாதுகாக்கப்படாததால், அவற்றை வரலாறு இழந்துவிட்டது.

Cornu helicopter

Paul Cornu Helicopter - YouTube
Cornu helicopter

பிரான்ஸைச் சேர்ந்த சைக்கிள் தயாரிப்பாளரான Paul Cornu, முதல்முறையாக சுற்றும் இறக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர் முன்மாதிரியை வடிவமைத்து, பரிசோதிக்கவும் செய்தார். சைக்கிளோடு இணைக்கப்பட்டிருந்த அந்த இயந்திரத்தை பிரான்ஸின் Lisieux பகுதியில் 1907 நவம்பர் 3-ம் தேதி அவர் இயக்கிக் காட்டினார். சைக்கிளை பெடல் செய்தபடியே இயங்கிய அந்த இயந்திரம் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரத்தில் சுமார் 20 வினாடிகள் பயணித்தது. அந்தரத்தில் நிலையாக இருக்க முடியாததால், அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

Étienne Oehmichen

1927-ல் பிரெஞ்சு அறிவியலாளர் Étienne Oehmichen வடிவமைத்த இயந்திரங்கள்தான் இன்றைய டிரோன்களின் முன்னோடி. நான்குபுறமும் சுற்றும் இறக்கைகளுடனான இவரது டிசைன் ஹெலிகாப்டர், வரலாற்றில் முதல்முறையாக 360 மீ (1,180 அடி) பயணித்தது.

Oszkár Asboth

ஹங்கேரியைச் சேர்ந்த Oszkár Asboth-தான் ஒரிஜினல் ஹெலிகாப்டரை வடிவமைத்த முதல் நபராக அறியப்படுகிறார். அவர் 1927-ல் வடிவமைத்த புரோட்டோடைப் ஹெலிகாப்டர், கிட்டத்தட்ட 180 தடவைகளுக்கு மேல் வானில் பறந்து தரையிறங்கியது. அதிகபட்சமாக ஒரே தடவையில் 53 நிமிடங்கள் வானில் பறந்து அசத்தியிருந்தது.

Corradino D’Ascanio

D'AT3
D’AT3

1930-ல் இத்தாலிய ஏரோநாட்டிகல் இன்ஜினீயரான Corradino D’Ascanio, D’AT3 என்கிற பெயரில் ஹெலிகாப்டர் ஒன்றை டிசைன் செய்திருந்தார். பின்னாட்களில், ஹெலிகாப்டர் டிசைனர்களால் இவரது வடிவமைப்புதான் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வரலாற்றில் இவருக்கு வேறொரு முக்கியமான இடமும் இருக்கிறது. ஸ்கூட்டர் உலகில் புரட்சியை ஏற்படுத்திய வெஸ்பா ஸ்கூட்டரை டிசைன் செய்ய Enrico Piaggio-வுக்கு உதவி செய்தவர்களில் முக்கியமானவர் இவர்தான்.

Focke-Wulf Fw 61

ஜெர்மனியைச் சேர்ந்த Henrich Focke என்ற பொறியாளரால் வடிவமைக்கப்பட்ட `the Focke-Wulf Fw 61’-தான் முதல் ஒரிஜினல் ஹெலிகாப்டர் என்று கருதப்படுகிறது. 1936-ல் முதல்முறையாகப் பறந்த, இந்த ஹெலிகாப்டரை ஹிட்லரின் நாஜிப் படைகள் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தின. எதிரிப் படைகளைக் கண்காணிப்பது, மருத்துவ உதவி மற்றும் மீட்புப் பணிகளுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

Bell 30

Bell 30
Bell 30

அமெரிக்க இன்ஜினீயர் Arthur M. Young உருவாக்கிய Bell 30 ஹெலிகாப்டர்கள், இந்தத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். 1943-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மாடலே, பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட முதல் ஹெலிகாப்டரான Bell 47-க்கு முன்னோடி. 1946 மார்ச் 8-ல் Bell 47 மாடல் பயணிகள் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Igor Sikorsky

ரஷ்யாவைச் சேர்ந்த என்ஜினீயர் Igor Sikorsky, இரண்டு பேர் மட்டும் அமர்ந்து பயணிக்கக் கூடிய Sikorsky R-4 ஹெலிகாப்டரை வடிவமைத்தார். முதன்முதலாக அதிக அளவில் தயாரிக்கப்பட்டது இந்த வகை ஹெலிகாப்டர்கள்தான். இரண்டாம் உலகப் போரின்போது இவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

Kaman K-225

Kaman K-225
Kaman K-225

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் கமன், உலகின் முதல் Turbine-ஆல் இயக்கப்பட்ட ஹெலிகாப்டரை வடிவமைத்தது புதிய புரட்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் கனெடிகட் மாகாணத்தில் இது 1951 டிசம்பர் 10-ல் வெற்றிகரமாக வானில் பறந்தது. இவரின் Ovation Guitar Company வட்டவடிவ கிட்டார்கள் தயாரிப்பிலும் புகழ்பெற்றது.

Bell UH-1 Iroquois

`Huey’ என்ற செல்லப்பெயரோடு அழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள், முதன்முதலாக வியட்நாம் போரில் பயன்படுத்தப்பட்டன. அந்தப் போரில் மட்டுமே சுமார், 7,000 ஹெலிகாப்டர்கள் களத்தில் இறக்கப்பட்டன. இவை 1966-ல் அமெரிக்க ராணுவத்தால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

Mil Mi-26

ரஷ்ய தயாரிப்பான இந்த வகை ஹெலிகாப்டர்கள் ராணுவம் மட்டுமல்லாது பொதுமக்களின் பயன்பாட்டிலும் இருந்தது. எடை அதிகமான பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல இவை பயன்பட்டன.

Mil Mi-171A2

Mil Mi-171A2
Mil Mi-171A2

அதிவேக ஹெலிகாப்டரான Mil Mi-171A2 ரஷ்யாவில் அதிகபட்ச வேகத்தைப் பதிவு செய்தது. பைகல் ஏரியின் மீது குறைந்த உயரமான 20 மீ அளவில் பறந்த இது மணிக்கு 268.81 கி.மீ வேகத்தைப் பதிவு செய்தது. கடந்த 2020 பிப்ரவரியில் நடந்த வருடாந்திர பைகல் திருவிழாவில் தரையில் இருந்து மேலெழும்பி 1.6 கி.மீ தூரத்திலேயே இந்த வேகத்தை அந்த ஹெலிகாப்டர் எட்டியது.

CH-47F Chinook

CH-47F Chinook
CH-47F Chinook

உலகின் மிக வேகமான ஹெலிகாப்டராகக் கருதப்படும் இந்த ராணுவ ஹெலிகாப்டர் மணிக்கு அதிகபட்சமாக, 315 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் பெற்றது.

Marine One

Marine One - VH-92A Helicopter
Marine One – VH-92A Helicopter

உலகின் பெரிய அளவுக்கு மதிக்கப்படும் ஹெலிகாப்டர்களில் US Marine Corps VH-92 முக்கியமானது. Sikorsky மற்றும் Lockheed Martin நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் அமெரிக்க அதிபரின் பயணத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

Drone

Quadcopters எனப்படும் ட்ரோன்களைப் பற்றி டாவின்சி கனவு கண்டு, ஏறக்குறைய 450 ஆண்டுகள் கழித்து நனவாகியிருக்கிறது. Étienne Oehmichen, Quadcopter டிசைனை அறிமுகப்படுத்தி 85 ஆண்டுகள் கழித்து இவை பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. மருத்துவத் துறை, ஏரியல் போட்டோகிராஃபி தொடங்கி ராணுவம் வரை பல்வேறு துறைகளில் இவற்றின் பயன்பாடு பரவலானது.

Also Read – தேசிய ஆடை முதல் Tunnel of Love வரை… உக்ரைன் பத்தி இந்த 5 விஷயங்கள் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top