உங்கள் Identity-யைத் திருடி வேறோருவர், உங்கள் பெயரில் கடன் வாங்கியிருந்தால், அதை அவர் திரும்பச் செலுத்தாத நிலையில், உங்களின் கிரெடிட் ஸ்கோர் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால், வேறு எந்த வங்கிகளிடமிருந்தும் நீங்கள் கடன் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அப்படியான சூழலில் என்ன செய்வது?
கிரெடிட் ஸ்கோர் ஏன் முக்கியம்?
கிரெடிட் ஸ்கோர் என்பது கடன் வாங்கிய ஒருவர், அதனைத் திரும்பச் செலுத்தும் திறனை வரையறுப்பது. கிரெடிட் பீரோக்கள் எனப்படும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான அமைப்பு, ஒவ்வொரு தனி நபருக்கும் கிரெடிட் ஸ்கோரை அளிக்கும். 300 முதல் 900 வரையிலான கிரெடிட் ஸ்கோர் தனி நபருக்கு வழங்கப்படும். பொதுவாக, 750-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களுக்கே வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் கொடுக்க முன்வரும். ஏற்கனவே வாங்கிய கடனை உரிய தவணைகளில் திரும்பச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஒருவரின் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும்.
ஒரு சில நிமிடங்களில் லோன்!
இன்றைய சூழலில் ஆன்லைனில் கொட்டிக்கிடக்கும் எத்தனையோ நிதிப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் உங்களின் போன் நம்பர், பான் கார்டு தகவல்களை அளித்து ஒரு சில நிமிடங்களில் கடன் பெற்றுவிட முடியும். ஒரு கிளிக்கில் சினிமா டிக்கெட் முதல் வாடகைக் கார் புக்கிங் வரையில் ஆன்லைனில் செய்ய முடியும். இதிலிருக்கும் ஆபத்தே, இப்படியான புக்கிங்குகளின்போது நீங்கள் அளிக்கும் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, உங்களின் Identity-யை வேறோருவர் எடுத்துக் கொள்ள முடியும் என்பதுதான். இதற்கு சமீபத்திய உதாரணம் பாலிவுட் நடிகை சன்னி லியோன். சிறுகடன் வழங்கும் Dhani ஆப்பில், மோசடி நபர் ஒருவர் தனது பான் கார்டு தகவல்களைக் கொடுத்து 2,000 ரூபாய் கடன் பெற்றதாகப் புகார் அளித்திருந்தார். சன்னி லியோன் மட்டுமல்ல, நம்மில் பலர் இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம். உங்கள் பெயரில் கடன் பெறும் மோசடி நபர், அந்தக் கடனைத் திரும்பச் செலுத்த மாட்டார். அது உங்கள் கிரெடி ஸ்கோரை நேரடியாகவே பாதிக்கும். அப்படியான சூழலில் என்ன செய்வது.. விவரமாகப் பார்க்கலாம் வாங்க.
Identity theft
மோசடி நபர்களால் Identity theft-க்காகக் குறிவைக்கப்படும் பாதிக்கப்பட்டோர் பலருக்குத் தங்கள் பெயரில் லோன் வழங்கப்பட்டிருப்பது ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் தெரியாமலேயே இருக்கும். கடன் கொடுத்த நிறுவனங்கள், கடனைத் திரும்பக் கேட்கத் தொடங்கும்போதோ அல்லது கிரெடிட் ஸ்கோரை செக் செய்யும்போதோதான் இந்தத் தகவல் தெரியவரும். அப்படியான Identity theft ஆல் பாதிக்கப்பட்டவர்கள், கடன் கொடுத்த நிறுவனங்களை அணுகி முறையாகப் புகாரைப் பதிவு செய்யலாம். அதேநேரம், நாட்டில் இருக்கும் நான்கு கிரெடிட் பீரோ நிறுவனங்களிடமும், தனது பெயரில் மோசடியாகக் கடன் பெறப்பட்டிருப்பதை ஆதாரத்தோடு புகாராக அளித்து, அந்தக் கடனை உங்கள் ரிப்போர்ட்டில் இருந்து நீக்கும்படி கோரிக்கை வைக்கலாம். அதன்பின்னர், குறிப்பிட்ட கிரெடிட் பீரோக்கள் உங்கள் பெயரில் மோசடியாகக் கடன் கொடுத்த நிறுவனத்திடம் விசாரித்து, இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார்கள்.
அந்தக் கடன் உங்களது ரிப்போர்ட்டில் இருந்து நீக்கப்பட்டால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் சரியாகும். ஒருவேளை நீக்கப்படாவிட்டால், நீண்டகால அடிப்படையில் அது உங்கள் ஸ்கோரைக் கடுமையாகப் பாதிக்கும். எதிர்காலத்தில் நீங்கள் கடன் வாங்குவதற்கும் அது சிக்கலை ஏற்படுத்தும். நீங்கள் புகார் கொடுத்திருந்தாலும், கடன் வழங்கும் நிறுவனங்கள் அந்தப் புகாரைப் பரிசீலித்து உண்மையிலேயே மோசடியாகக் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று முடிவுக்கு வர சிறிது காலம் எடுக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் இந்தக் கடன் எதிரொலிக்கும். இதனால், புகார் செய்வதோடு, அந்தப் புகாரின் நிலை குறித்து அடிக்கடி ஃபாலோ செய்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். அதேபோல், உங்களின் கிரெடிட் ஸ்கோரை உரிய இடைவெளியில் செக் செய்துகொள்வது ரொம்பவே முக்கியமானது என்கிறார்கள்.
Also Read – உங்கள் கனவு வீட்டைக் கட்டலாம் பாஸ் சிக்கனமா… 5 டிப்ஸ்