நகம் கடிக்கும் பழக்கம் எதனால் ஏற்படுகிறது.. மொத்தமாகக் கைவிட என்ன வழி?

நகம் கடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது கடினமான காரியம்… அந்தப் பழக்கம் எதனால் ஏற்படுகிறது. அதைக் கைவிடுவது எப்படி?

நகம் கடிக்கும் பழக்கம்

பொதுவாக நம்மில் பல பேருக்கு நகம் கடிப்பது பழக்கமாக இருக்கும். பதற்றமாக இருக்கும்போதோ அல்லது இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டே இருப்பது சிலரின் வழக்கமாகவே இருக்கும். இந்தப் பழக்கத்தை நிறுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. இது எதனால் ஏற்படுகிறது என்கிற காரணம் தெரிந்தால் ஒருவேளை அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்…

நகம் கடிக்கும் பழக்கம்
நகம் கடிக்கும் பழக்கம்

எதனால் ஏற்படுகிறது?

புதிதாக ஒரு சூழலில் மாட்டிக் கொள்ளும்போதோ அல்லது எதிர்பாராத தருணங்களின்போதும் அவர்கள், தங்கள் நகத்தைக் கடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். மனஅழுத்தம், கவலை போன்றவைகளால் இந்தப் பழக்கம் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்தப் பழக்கம் ஏற்பட இவை இரண்டுதான் முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. குழந்தைகளாக இருக்கும்போது ஏற்படும் இந்தப் பழக்கத்தை, பெரியவர்களானதும் சரிசெய்து கொள்ளலாம் என்று பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுண்டு.

எப்போது ஏற்படுகிறது?

நகம் கடிக்கும் பழக்கம்
நகம் கடிக்கும் பழக்கம்

குழந்தைப் பருவத்திலேயே இந்தப் பழக்கம் ஏற்படுவதாகச் சொல்கிறது மருத்துவ உலகம். உங்களின் வழக்கத்துக்கு மாறான கடுமையான சூழலை எதிர்க்கொள்ளும்போது தனாகவே நகம் கடிப்பதை வழக்கமாக சிலர் வைத்திருப்பார்கள். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இந்தப் பழக்கத்தை நாளடைவில் சிலர் மறந்துவிடுவதுண்டு. ஆனால், இன்னும் சிலருக்கு அந்தப் பழக்கம் அன்றாட நடைமுறையாகத் தொடர்ந்து வரும்.

பாதகங்கள்!

  • அலுவலகம் போன்ற சூழலில் நீங்கள் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் கையை எப்போதும் வாயில் வைத்து நகம் கடித்துக் கொண்டிருப்பதை உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாரும் விரும்ப மாட்டார்கள். அது `Unprofessional Attitude’ ஆகப் பார்க்கப்பட வாய்ப்பிருக்கிறது.
  • நகத்தைத் தொடர்ந்து கடித்துக் கொண்டே இருப்பதால், அவை சீரற்ற முறையில் வளரும். இது உங்களின் வெளித்தோற்றத்தைப் பாதிக்கும்.
  • உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதோடு, மன ஆரோக்கியத்தையும் இது பாதிக்கும். நகம் கடிக்கும் பழக்கம் உங்களுக்கு உங்கள் மீதான சுய-சந்தேகத்தை அதிகப்படுத்தும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
நகம் கடிக்கும் பழக்கம்
நகம் கடிக்கும் பழக்கம்

நகம் கடிப்பதைக் கைவிட சில வழிமுறைகள்!

  • இந்தப் பழக்கத்தைக் கைவிட முதல் படி, நீங்கள் விழிப்போடு இருப்பது. இப்படியான ஒரு பழக்கம் நம் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய விழிப்புணர்வோடு இருந்தால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்க முடியும்.
  • தீவிர மன அழுத்தம் மற்றும் அதிகம் கவலைப்படும் மனநிலை கொண்டவர்கள், நிச்சயம் உளவியல் நிபுணர் ஒருவரின் உதவியை நாடுவதும் நலம். அவரின் உதவியோடு அப்படியான மனநிலையில் இருந்து வெளிவந்துவிட்டால் எளிதாக அந்தப் பழக்கத்தைக் கைவிட வழி ஏற்படும்.
  • உங்களை நீங்களே சுய பரிசோதனைக்கு உட்படுத்தி, உங்கள் மனநிலையைப் பற்றி ஆய்ந்தறிவது அடுத்த கட்டத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
  • மன அழுத்தம் போன்ற மனநலன் சார்ந்த விஷயங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இதுபோன்ற பழக்கத்தை விட்டொழிக்க முக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Also Read – நண்பர்களோடு நேரம் செலவழிப்பது மெண்டல் ஹெல்த்துக்கு ஏன் Essential – 4 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top