மலையாள சேனல் Media One-க்குத் தடை விதித்த மத்திய அரசு; நீதிமன்றத்தில் முறையீடு – என்ன நடந்தது?

மலையாளச் செய்தி சேனல் Media One-க்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, அந்த சேனல் கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிடவே, அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த இரண்டு நாட்கள் இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. என்ன நடந்தது?

சிஏஏ போராட்டம்

கடந்த 2020 மார்ச்சில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதுகுறித்த செய்திகளை ஒளிபரப்பிய கேரள சேனல்களான மீடியா ஒன் மற்றும் ஏசியா நெட் ஆகிய செய்தி சேனல்கள் அரசின் கேபிள் டிவி ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தப்படும் காட்சிகளை மலையாள சேனல்கள் ஒளிபரப்பியது அரசின் விதிகளை மீறும் செயல் என்று உள்துறை அமைச்சகம் அப்போது கூறியது. அத்தோடு டெல்லி போலீஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இணைத்து இருதரப்பினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அந்த சேனல்களின் ஒளிபரப்புக்கு 48 மணி நேரம் தடையும் விதிக்கப்பட்டது.

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை

Media One சேனல்

கேரளாவில் இயங்கி வரும் பல்வேறு செய்தி சேனல்களில் விவாதங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானது Media One சேனல். ஜமாத் – இ-இஸ்லாமி கட்சியின் கேரள பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் பங்குதாரர்களாக இருக்கும் மத்யமம் பிராட்காஸ்டிங் (Madhyamam Broadcasting) என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த சேனல். சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை 30-09-2021 முதல் 29-09-2031 ஆகிய பத்தாண்டுகளுக்குப் புதுப்பிப்பதற்காக மத்யமம் பிராட்காஸ்டிங் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்தநிலையில், சேனலின் ஒளிபரப்புக்காக உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி வழங்காத நிலையில், அதன் ஒளிபரப்பு உரிமத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மொத்தமாக ரத்து செய்திருக்கிறது.

இதுகுறித்து Media One சேனலின் ஆசிரியர் பிரமோத் ராமன், `பாதுகாப்புக் காரணங்களுக்காக எங்கள் சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்திருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. இதுகுறித்த தெளிவான தகவல்களை அமைச்சகம் எங்களுக்கு வழங்கவில்லை. தடை குறித்த முறையான விவரங்களை மத்திய அரசு வழங்கவில்லை. அரசின் தடை உத்தரவுக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’ என்று விளக்கமளித்திருக்கிறார்.

மீடியா ஒன்
மீடியா ஒன்

கேரள அரசியல் கட்சிகள் கண்டனம்

மத்திய அரசின் இந்தத் தடை உத்தரவுக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், `எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்காமல் மீடியா ஒன் சேனல் ஒளிபரப்பைத் தடை செய்வது ஜனநாயக விரோதமாகும். இது இயற்கை நியதிக்கு எதிரானது. தடை விதிக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. உண்மைகளுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருக்கும் சங் பரிவார் அமைப்பின் கொள்கைகளை அமல்படுத்த அரசு முயற்சித்து வருகிறது’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் அந்த சேனலின் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

Also Read – அ.தி.மு.க ரூ.267.61 கோடி; தி.மு.க ரூ.162.425 கோடி சொத்துகள் – பணக்கார கட்சி பா.ஜ.க-வின் சொத்து மதிப்பு தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top