சொந்த ஊர் திருநெல்வேலி பக்கத்துல கோவில்பட்டி. பூவே உனக்காக படத்தில் வரும் காமெடியைப் போலத்தான் இவர் ப்ரொஃபஷனும் ஆனது. ‘எங்க மாதிரி நானும் ககெக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன்.’ ‘உங்க அப்பா கலெக்டரா?’ ‘நோ நோ என்னை மாதிரி அவரும் ஆசைதான் பட்டார்.’ இது போல இவருக்கு அவரது அப்பாவைப் போல ஆசிரியர் ஆகவேண்டும் என்பதுதான் ஆசையாய் இருந்திருக்கிறது. ஆனால் டிராக் மாறி சினிமாவுக்கு வந்துவிட்டார். வந்ததில் இருந்து இவர் நிகழ்த்திய சாதனைகள் சாதாரணமானவை அல்ல. பலருக்கும் ஃபேவரைட்டான சார்லியின் பண் முகத்தைத்தான் நாம பார்க்கப்போறோம்.
மிமிக்ரியும் டிராமாவும் :
இவர் கெமிஸ்ட்ரியில் டிகிரி முடித்த பட்டதாரி. இதனாலோ என்னவோ இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அவருக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி தாறுமாறாக ஒர்க் ஆகிறது. சிவாஜி கணேசனில் ஆரம்பித்து நாகேஷ், முத்துராமன் போன்ற பல நடிகர்களைப்போல் இவர் மிமிக்ரி செய்து காட்டுவாராம். பிற்காலத்தில் நாகேஷால் பாராட்டு வார்த்தைகளையும் இவர் பெற்றார். ‘காமெடியன்கள் இரண்டு ரகம். ஒன்று டைமிங் நல்லா இருக்கிற காமெடியின் இன்னொண்ணு டைம் நல்லா இருக்கிற காமெடியின். இதுல சார்லி ஒண்ணாவது ரகம்’ என்று நாகேஷிடம் இருந்து பாராட்டு வார்த்தைகளை பெற்றிருக்கிறார் இவர். சினிமாவுக்கு முன்பு பல டிராமாக்களில் இவர் நடித்திருக்கிறார். சினிமாவுக்கு இவர் வந்ததே வேடிக்கையான விஷயம்தான். கல்லூரியில் ஒரு அரியர் என்பதால் வீட்டில் செம திட்டு இவருக்கு விழுந்திருக்கிறது. இதையடுத்து பக்கத்தில் ரேஷன் கடைக்கு செல்லும்போது சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை விளம்பரத்தைப் பார்த்து அதற்கு அப்ளை செய்திருக்கிறார். ஸ்கூல் சமயத்தில் இவர் செய்திருந்த நிகழ்ச்சிகளின் பலனாக இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இப்படித்தான் ஃபீல்டுக்குள் வந்திருக்கிறார்.
நகைச்சுவை :
எண்ணற்ற படங்கள் இந்த டாபிக்கில் லிஸ்டாக நீண்டுகொண்டே போகும். அந்தளவிற்கு நகைச்சுவையில் பிரித்து மேய்வார். அதுவும் மற்ற காமெடி நடிகர்களின் சாயல் தனது நடிப்பில் துளியும் வெளிப்பட கூடாது என்பதற்காக அவர்களிடமிருந்து தனித்துத் தெரிய தன்னுடைய நடிப்பில் மேஜிக் எதையாவது செய்துகொண்டே இருப்பார். காதலுக்கு மரியாதையில் வெறும் ஹலோவை வைத்தே காமெடி செய்வதில் ஆரம்பித்து பல படங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். பூவே உனக்காக, ஃப்ரெண்ட்ஸ், தென்காசிப்பட்டனம், உன்னை நினைத்து, ஜேஜே, கோவில் என 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். முன்னொரு பேட்டிக்காக இவர் மௌன்ட் ரோடில் ராஜா வேஷம் போட்டு சென்றிருக்கிறார். அப்போது அனைவரும் இவரை விசித்திரமாக பார்த்திருக்கிறார்கள். இவர் தன்னுடைய ராஜா செருப்பிற்கு பாலிஷ் அடிக்க ஒரு தொழிலாளியை பார்க்கப்போயிருக்கிறார். அப்போது அவர் சார்லியின் முகத்தைக்கூட பார்க்காமல் அவரது காலணியை மட்டுமே பார்த்து வேலை பார்த்திருக்கிறார். காசு கொடுக்கும்போது கூட கீழே குணிந்தபடி வாங்கியிருக்கிறார். இவர் தயவு செய்து மேலே பாருங்க என்று சொல்லிதன் பிறகுதான் அவர் பார்த்திருக்கிறார். அவரது இந்த குணாதிசயம் பிடித்துப்போக அது மிகப்பெரிய தாக்கத்தை அவருள் ஏற்படுத்தியிருக்கிறது. இவர் ஏற்ற நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உள்ளே செல்வதற்கு அது மிகவும் உதவியிருக்கிறது.
எமோஷனல் :
‘முதல் படத்துல காமெடியான கதாபாத்திரம் நடிச்சேன். அதுக்கப்பறம் என்னை காமெடியன்னு முத்திரை குத்திட்டாங்க’ இது அவரின் ஏக்கமான வார்த்தைகள். டிராமாவில் நடித்தவர் என்பதால் அனைத்து ரக கதாபாத்திரங்களையும் அணுகவே இவர் விரும்பினார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை இவரை பல நகைச்சுவை கதாபாத்திரத்துக்கே அழைத்து சென்றது. தமிழ் சினிமாவிற்கும் இது புதிதல்ல. இருந்தாலும் தன்னை ஒரு சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு ஆர்டிஸ்ட்டாகவும் இவர் பல படங்களில் இவர் தன்னை நிரூபித்திருக்கிறார். இதை சொன்னவுடன் பட்டென முதலில் மைண்டிற்கு வரும் படம் வெற்றிக்கொடி கட்டு. ஒரு சில நிமிடங்களில் அந்த கதாபாத்திரத்துக்கான மிகப் பெரிய தாக்கத்தை ஆடியன்ஸ் மனதில் விதைத்து அழ வைக்க முடியுமா என்றால் அந்த கதாபாத்திரம் இதை செய்திருக்கும். நாம யாருன்னு அவங்களுக்குத் தெரியாது கொஞ்சம் அட்ஸட் பண்ணிக்க என்று பார்த்திபன் சொன்னவுடன் பைத்தியம் மாதிரி நடித்து கடைசியில் ஒரு பத்து ரூவா இருக்கா என்று கேட்கும் இடத்தை எல்லாம் பார்க்கும்போது வேற லெவல். அதை கட் செய்து அப்படியே 2017-க்கு வந்தால் மாநகரம். நாம கேட்டோமா சார். நாம கேட்டிருந்தாதான் நமக்கு யாராவது கேட்பாங்கனு அவர் நடித்த அத்தனை இடங்களும் தரம்!
கோவாலு :
இதை ஒரு தனி டாபிக்காகவே எடுத்து பேசும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்தை செய்திருப்பார் இவர். காலம் கடந்தும் காமெடிக்கு எண்டு கிடையாது என்பதற்கு ப்ரண்ட்ஸ் படம் ஓர் நல்ல எடுத்துக்காட்டு. #PrayForNesamani எனும் ஒர்ரை ஹேஷ்டாக் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்ததை நாம் அறிவோம். அந்த படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் மலையாளத்தில் இருந்து எடுத்ததுதான். ஆனால் கோவாலு கதாபாத்திரம் தமிழ் வெர்ஷனுக்கு புதிது. ஓப்பனாக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற சுதந்திரம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை பிசிறில்லாமல் செய்திட வேண்டுமென்ற கட்டாயமும் கோவாலுக்கு உள்ளது. அதை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றிருக்கும் இவரது நடிப்பு. முழுக்க வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சார்லி. ‘அம்மா பால்’ என்று ஒருவர் சொல்ல, ‘ஆமா நான்தான் கோபால்’ என்று தூங்கி இவர் எழுந்திருக்க ஆரம்பித்ததில் இருந்து ‘இது யாரு உன் ஒயிஃபா’ என்று கேட்பது, ‘கரெக்ட் அவர் பிடிக்கலை நான் பார்த்தேன்’ என்று சொல்வது என அந்த கேரக்டருக்கு உயிரோட்டம் கொடுத்திருப்பார். நேசமணிக்கு நிகராக உங்களையும் எங்களுக்கு பிடிக்கும் கோவாலு ஐயா!
Also Read – ‘விஜய்ணா முதல் சிவாண்ணா வரை…’ ஆரம்ப காலத்தில் நடித்த அபத்த விளம்பரங்கள்!