Air Conditioners எனப்படும் ஏசி-களில் இன்வெர்ட்டர் ஏசி – நார்மல் ஏசி இடையே என்ன வித்தியாம்… எது சிறந்ததாகக் கருதப்படுகிறது… அதற்கான காரணங்களைத்தான் இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப் போறோம்.
ஏசி
ஏசி-கள் இன்றைய சூழலில் அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டன. நகர வாழ்வில் வெயில் காலத்தை ஏசி-கள் உதவியில்லாமல் கடக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். அதேநேரம், புதிய ஏசி வாங்கும் முன்னர் பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்து வாங்க வேண்டும் என்கிறார்கள். பொதுவாக ஏசி-கள் Window AC மற்றும் Split AC என இரண்டு வகையாக இருக்கின்றன. இவற்றில் ஜன்னல்கள் போலப் பொருத்தப்படும் Window AC-கள் அதிக எடை கொண்டவை. மேலும், அதில் ஏற்படும் சத்தமும் அதிகம். அதேநேரம், Split AC இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதில், காற்றை உமிழும் Blower வீட்டுக்குள்ளும் கம்ரஸர் வீட்டின் வெளிப்பகுதியிலும் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டும் இணைக்கப்பட்டிருக்கும். Window AC-கள் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் இந்த காலத்தில், பெரும்பாலானோரின் தேர்வு Split AC-யாகவே இருக்கிறது. இதிலும், இன்வெர்ட்டர் ஏசி டிரெண்டாகவே இருக்கிறது. வழக்கமான ஏசிக்கும் இந்த ஏசிக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன… அதன் சாதக, பாதகங்களைப் பார்க்கலாம்.
இன்வெர்ட்டர் ஏசி Vs நார்மல் ஏசி – வித்தியாசம் என்ன?
இன்வெர்ட்டர் ஏசி என்பது அதிகமான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாமல், அறையைக் குளிரச் செய்யும் என்பதுதான் அடிப்படை. இதனாலேயே இவை மின்சார சிக்கன ஏசிக்களாகப் பார்க்கப்படுகின்றன. பொதுவாக ஒவ்வொரு ஏசிக்கும் ஒரு திறன் இருக்கும். அறையின் பரப்பளவைப் பொறுத்து 1 டன், 1.5 டன், 2 டன் என்றெல்லாம் ஏசிகள் இருக்கின்றன. இன்வெர்ட்டர் ஏசிகளைப் பொறுத்தவரை சூழலைப் பொறுத்து கம்ப்ரஸரின் செயல்பாட்டை அவை கட்டுப்படுத்தும். இதன்மூலம் மின்சாரத்தின் தேவையும் குறையும். இதை ஆட்டோமெட்டிக்காகவே அவை மேற்கொள்ளும். உதாரணமாக, நீங்கள் 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி வைத்திருந்தால், அறை வெப்பநிலையைப் பொறுத்து 0.5 டன் முதல் 1.5 டன் வரையில் அது சூழலுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்துகொள்ளும். அதற்கேற்றபடி, இவை வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்ரஸரைக் கட்டுப்படுத்தும்.
சாதாரண ஏசிகள் என்பவை எப்போதும் ஒரே திறனில் எப்போதும் செயல்படுபவை. இவற்றால், கம்ப்ரஸரைக் கட்டுப்படுத்த முடியாது. அறை வெப்பநிலை குறிப்பிட்ட டிகிரியை எட்டியவுடன், கம்ப்ரஸர் தானாகவே ஆஃப் ஆகிவிடும். இந்த ஆன் – ஆஃப் புராசஸின்போது அதிக சத்தம் வெளிப்படும். இன்வெர்ட்டர் ஏசியின் செயல்பாடு இப்படி இருக்காது. இபோது, நீங்கள் பயன்படுத்தும் ஏசி இன்வெர்ட்டர் ஏசி என்றால், அது பற்றி உங்கள் ஏசியின் கவர் மீதே தகவல் இடம்பெற்றிருக்கும்.
எது பெட்டர்?
பொதுவாக நாம் ஒரு எலெக்ட்ரானிக் பொருளை வாங்குவதாக இருந்தால், மின்சார சிக்கனத்தைக் கணக்கில் கொண்டே வாங்குவோம். அந்தவகையில் பார்த்தால் நார்மல் ஏசியை விட மின் சிக்கனம் என்ற அடிப்படையில் இன்வெர்ட்டர் ஏசிதான் சிறந்தது. இது உங்களது மின் கட்டண பில் தொகையைக் குறைக்கும். அதேநேரம், இன்வெர்ட்டர் ஏசிகளுக்கான பராமரிப்பு, ரிப்பேர் மற்றும் அதன் பாகங்களின் விலை ஆகியவை அதிகம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த ஏசியை வாங்க வேண்டும் என்பது உங்களின் பயன்பாடே முடிவு செய்யும். உதாரணமாக, 120 சதுர அடி பரப்பளவு கொண்ட உங்களின் பெட்ரூமுக்கு ஏசி வாங்குகிறீர்கள் என்றால், அந்த அறையில் 3 மணி நேரத்துக்கு மேல் வெயில் படாது என்கிற சூழலில் இன்வெர்ட்டர் ஏசியை விட சாதாரண ஏசிதான் பெஸ்ட். அதேபோல், ஹால் அல்லது பெரிய அறைகள் போன்ற இடங்களில் இன்வெர்ட்டர் ஏசிதான் சரியாக இருக்கும். இந்த வகையான அறைகளில் சூரிய வெளிச்சம் அதிகம் படும் என்பதாலும், இடமும் கொஞ்சம் பெரிது என்பதால், மின்சார சிக்கனம் உள்ளிட்ட காரணங்களால் இன்வெர்ட்டர் ஏசியைப் பயன்படுத்துவது துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.