ஐபிஎல்-லில் இதுவரை நடந்த 14 சீசன்களில் இருந்து தற்போதைய 15-வது சீசன் கொஞ்சம் மாறுபட்டது. போன சீசன்களை விட இந்த சீசனில் என்னவெல்லாம் புதுசா இருக்குனுதான் இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம்.
ஐபிஎல் 2022 – டைட்டில் ஸ்பான்சர்!

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ-வுக்குப் பதிலாக டாடா நிறுவனம் ஐபிஎல் 2022 மற்றும் 2023 சீசன்களின் டைட்டில் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. விவோ நிறுவனத்துக்கு டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகள் இருந்தும், டாடாவை பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருக்கிறது.
புதிய அணிகள்

ஐபிஎல் 2022 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என இரண்டு புதிய அணிகள் பங்கேற்கின்றன. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கும் குஜராத் அணிக்கு ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியாளராக இருக்கிறார். அதேபோல், கே.எல்.ராகுல் தலைமையில் களம்காணும் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆன்டி பிளவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
புது ஃபார்மேட் – 10 அணிகள் இரண்டு பிரிவு!

இதுவரை விளையாடிவந்த 8 அணிகளுக்குப் பதிலாக இந்த சீசனில் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. ஒரு பிரிவுக்கு ஐந்து அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக 10 அணிகளும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இருக்கும் மற்ற நான்கு அணிகள் மற்றும் மற்றொரு பிரிவில் தங்களது இடத்தைப் போல் நேரே இடம்பிடித்திருக்கும் அணிகளோடும் இரண்டு போட்டிகளில் மோதும். எதிர்ப்பிரிவில் இருக்கும் மற்ற நான்கு அணிகளோடு ஒரு போட்டியில் விளையாடும். ஆக, எப்போதும் போலவே எல்லா அணிகளும் 14 போட்டிகளில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
மெட்டாவெர்ஸ்

இந்த ஐபிஎல் தொடரில் புதிதாகக் களம்கண்டிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி, தங்களது ரசிகளுக்கென பிரத்யேகமாக மெட்டாவெர்ஸில் ‘Fan platform’-ஐ கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தியது. டக்-அவுட் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பேஜில் குஜராத் அணி ரசிகர்கள், இணைந்து புதிய அனுபவத்தைப் பெறலாம்.
ஒன்லி மகாராஷ்டிரா

முந்தைய ஐபிஎல் தொடர்கள் போலல்லாமல், இந்த சீசனில் அனைத்து போட்டிகளுமே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடக்கின்றன. கொரோனா சூழலால் வீரர்கள் விமான பயணத்தைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் 55 மேட்சுகளும், மீதமிருக்கும் 15 போட்டிகள் புனேவிலும் நடக்கின்றன. மும்பையில் இருக்கும் வான்கடே, டி.ஒய்.படேல், பிராபோர்ன் ஆகிய மைதானங்களில் அந்த 55 போட்டிகள் நடக்கின்றன.
ரவி சாஸ்திரி கம்பேக்

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்ததால் வர்ணணையாளர் பணியில் இருந்து ஒதுங்கி இருந்த ரவி சாஸ்திரி, கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கமெண்டரி பணிக்குத் திரும்பியிருக்கிறார். அதேபோல், சுரேஷ் ரெய்னா இந்தி கமெண்டரி டீமில் இருக்கிறார்.
இந்த புதிய அம்சங்களில் உங்களைக் கவர்ந்தது எது… கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read – எந்த ஐபிஎல் டீம் எந்த கோலிவுட் ஹீரோவோட மேட்ச் ஆவாங்க… ஒரு ஜாலி கற்பனை!