Modi

ஓஹோ, அப்படி வர்றீங்களோ.. மோடி தமிழ்நாட்டுல போட்டியிட்டா என்ன நடக்கும்?

பிரதமர் மோடி ராமநாதபுரத்துல போட்டியிடுறதா செய்திகள் எல்லாம் வெளியாகிச்சு. ஆனால், மழைல பட்டாசுக்கு குடை பிடிச்சு வெடிக்கிற பா.ஜ.க காரங்களைத் தவிர வேற யாரும் அதை பெருசா பார்க்கலை. அவர் சும்மா வந்தாலே #GoBackModi-னு டிரெண்ட் பண்ணி கருப்பு பலூன்லாம் பறக்க விட்டு இந்தப் பக்கம் வர்றாதீங்க, அங்கிட்டு போங்கனு டேக் டைவர்ஷன்ல அனுப்பி விட்ருவாங்க. இப்படியிருக்கும்போது, அவர் தமிழ்நாட்டுல இருந்தே போட்டியிட தைரியம் எப்படி வந்துருக்கும்னுதான் யோசனையா இருக்கு. ரைட்டு, ராமநாதபுரம் தொகுதி எப்படி? மோடிக்கு இப்படியொரு யோசனை ஏன் வந்துருக்கும்?

இந்தத் தகவல் வெளியானதும் பிஜேபி தொண்டர்கள் குஷியானாங்க… ஆனா, மோடி தமிழ்நாட்டுல போட்டியிட்ட மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பாங்கனு மதிமுகவின் துரை வைகோவும்….. இல்ல இல்ல… இந்த விஷயத்துல எங்க தேசியத் தலைமை எந்தவொரு முடிவையும் எடுக்கலைனு பிஜேபி தேசியப் பொதுச்செயலாளரான ஹெச்.ராஜாவும் கருத்து சொல்லிருக்காங்க… இது சம்மந்தமா மீம் கிரியேட்டர்களும் தங்களோட திறமையைக் காட்டத் தொடங்கிட்டாங்க…

Ramanathapuram
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

சுதந்திர இந்தியா சந்திச்ச முதல் தேர்தலான 1951-ம் ஆண்டு முதலே இருக்க தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி. ஆரம்பத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த ராமநாதபுரத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து வெற்றியை ருசித்திருக்கின்றன. 1977 தேர்தலில் முதல்முறையாக அதிமுகவும் 1980 தேர்தலில் முதல்முறையாக திமுகவும் வென்றன. 2019 மக்களவைத் தேர்தல்ல தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிட்டு வென்றார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படவே, அக்கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை பெரும்பான்மையாக இருப்பது சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள்தான். அதேபோல், மீனவர்கள் வாக்குகளும் அதிகம். ராமநாதபுரம் மாவட்டத்தோட 4 சட்டப்பேரவைத் தொகுதிகள், விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி மற்றும் புதுக்கோட்டையின் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. கடலோரப் பரப்பு அதிகம் கொண்டது. மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் தொகுதியின் மிகப்பெரிய பிரச்னைகளுள் ஒன்று.  

பிஜேபி ராமநாதபுரத்தைக் குறிவைப்பது ஏன்?

பிரதமர் மோடி 2019 தேர்தல்ல உ.பி-யின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலுமே வெற்றிபெற்றார். பின்னர், வதோதரா எம்.பி பதவியை ராஜினாமா பண்ணிட்டு வாரணாசி எம்.பியாகத் தொடர்கிறார். இந்துக்களின் புண்ணியபூமியாகக் கருதப்படும் காசி இந்தத் தொகுதிக்குள்தான் வருகிறது. அதேபோல்தான், ராமேஸ்வரமும் இந்துக்களின் புண்ணிய பூமியாகக் கருதப்படும் மண். இது ராமநாதபுரம் தொகுதிக்குள்தான் வருகிறது. அப்படி ஒருவேளை மோடி இந்தத் தொகுதியில் போட்டியிட்டால் காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் இருக்கும் என்று கணக்குப் போடுகிறது பிஜேபி தலைமை என்கிறார்கள்.

தற்போதைய சூழல்ல 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள்ல நேரடியாவோ, கூட்டணியிலோ ஆட்சியில் இருக்கு பிஜேபி. என்னதான் வடமாநிலங்கள்ல வலுவான கட்சியா இருந்தாலும், தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்கள்ல சொல்லிக்குற அளவுக்கு பிஜேபியால காலூன்ற முடியல. அந்தக் குறையைப் போக்குற வகையிலும் தமிழ்நாட்டுல பிஜேபியை வளர்க்குறதுக்கும் மோடி ராமநாதபுரத்துல போட்டி போடுற விஷயம் பயன்படும் என்று கணக்குப் போடலாம். ஏற்கனவே, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, சிப்பிப் பாறை வேட்டை நாய், சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி தொன்மையானது, காமராஜர் மேற்கோள், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை, பாரதியார் பிறந்த தினத்தை தேசிய மொழிகள் தினமாக அறிவித்தது, திருக்குறளை 100 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட விருப்பம் தெரிவித்ததுனு மோடி தமிழ்நாட்டைப் பத்தி பல இடங்கள்ல குறிப்பிட்டு பேசவும் செஞ்சிருக்கார். நாடாளுமன்றம் தொடங்கி ஐ.நா வரை தமிழ் மொழியின் பெருமையையும் அவர் பேசி வந்திருக்கிறார். பல இடங்களில் தமிழ் புலவர்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டியிருக்கிறார் மோடி.  மாமல்லபுரம் சீன அதிபர் சந்திப்பு, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் மீனாட்சியம்மன் கோயில் விசிட் போன்ற தமிழகப் பயணங்களில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையோடு காட்சியளித்தார் மோடி. அப்துல் காலாம் குடியரசுத் தலைவரானதைப் பற்றியின் பிஜேபி தங்கள் பரப்புரையில் பெரிதாகக் கவனப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒருவேளை மோடி தமிழ்நாட்டுல போட்டியிட்டா இந்த விஷயங்கள் எல்லாம் பிஜேபி சார்பில் ஹைலைட் செய்யப்படலாம்.

Modi
Modi

ராமநாதபுரம் பிஜேபினு சொன்னதும் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ராமநாதபுரத்தை அடுத்த போகலூர் ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்தை வைக்கணும்னு பிஜேபிகாரங்க போராட்டம் பண்ணாங்க. அப்போ அந்த வழியா வந்த ஏபிடிஓ காரை வழிமறிச்சு அந்தக் கட்சிக் காரங்க தாக்குதல் நடத்துனாங்க. அவரோட கார்ல இருந்த தமிழக அரசு முத்திரையை பிஜேபிகாரர் ஒருத்தர் காலில் உதைத்து சேதப்படுத்தியது சர்ச்சையாச்சு. சரி இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குறீங்களா… அதைத்தான் முதல்லயே சொன்னேனே… ராமநாதபுரம் பிஜேபினு சொன்னதும் நியாபகத்துக்கு வந்துச்சுனு… அவ்ளோதான் கனெக்‌ஷன்.

இந்தத் தொகுதியைத் தங்களுக்கு சாதகமா பிஜேபி நினைக்குறதுக்குக் காரணம் என்னனு பார்த்தோம்னா… போன தேர்தல்ல பிஜேபி சார்பா போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் கிட்டத்தட்ட 3.42 லட்சம் வாக்குகளுக்கு மேல் வாங்குனாரு… அதனால இந்தத் தொகுதியைத் தங்களுக்கு சாதகமான தொகுதியா பிஜேபி நினைக்கலாம். ஆனா, நயினார் நாகேந்திரனை அதிமுகவோட முகமாகத்தான் பெரும்பாலானவங்க பார்த்தாங்கங்குறதுதான் உண்மை. அப்படி அவர் வாங்குன ஓட்டுக்கள் எல்லாமே நயினார் நாகேந்திரனுக்காகக் கிடைத்த வாக்குகளாகத்தான் பார்க்கணும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதேபோல், சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையா வசிக்குற இந்தத் தொகுதியில் போட்டியிட்டு ஜெயிச்சா அதையே ஒரு முன்மாதிரியா தங்கள் கட்சிக்கு எதிரா செயல்படுறவங்களுக்குப் பதிலடி கொடுக்கலாம்னும் பிஜேபி நினைக்கலாம்.

சரி, இதைப்பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க.. பிரதமர் மோடி ராமநாதபுரத்துல போட்டியிட்டா அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top