ஒரு கச்சேரியில் நாகூர் ஹனிபா தி.மு.க பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார். கீழே இருந்த சிலர் ‘காமராஜர் பத்தியும் பாடுங்க’ என்று கூச்சலிடுகிறார்கள். டென்ஷனான நாகூர் ஹனிபா ‘அப்படியெல்லாம் பாடமுடியாது… ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தா மேடைக்கு வாங்கடா’ என்று ஆவேசமாக மைக்கைத் தூக்கி அடிக்க போனார். அந்தளவுக்கு தி.மு.கவின் மீது பற்றுகொண்டிருந்தவர் நாகூர் ஹனிபா. ‘நான் கச்சேரிக்காரன் இல்லை; கட்சிக்காரன்’ என்று பலமுறை அவரே சொல்லியிருக்கிறார். யார் இந்த நாகூர் ஹனிபா? திராவிட இயக்கத்தில் அவருக்கு இருந்த பங்கு என்ன?

நாடு முழுக்க பெரும் செல்வாக்குடன் இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க ஆட்சிக்கு வந்ததென்றால் அதற்குக் காரணம் அது முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள். அண்ணா, கருணாநிதி போன்றோரின் பேச்சுகள் மக்கள் மனதில் தாக்கங்களை ஏற்படுத்தியது. அதே சமயம் பெரும் திரளாக மக்கள் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்ததில் இன்னொரு சிம்மக் குரலின் பங்கும் இருந்தது அதுதான் நாகூர் ஹனிபா என்று அழைக்கப்பட்ட இஸ்மாயில் முகம்மது ஹனிபா. ‘அண்ணா அழைக்கின்றார்’ என்றும் ‘ஓடிவருகிறான் உதயசூரியன்’ என்றும் ஒலிக்கும் கம்பீரக்குரல் அப்போதைய உடன்பிறப்புகள் ரத்தத்தில் புதுவெள்ளம் பாய்ச்சியது. “ஹனிபா அய்யா மேடையில் பாடினால் ஒலிப்பெருக்கியே தேவையில்லை” என்று பெரியாரே பாராட்டி ஒரு ரூபாய் பரிசளித்திருக்கிறார்.

1925 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்தவர் ஹனீபா. அவருடைய அப்பாவின் பூர்வீகம் நாகூர் என்பதால் அது இவருடைய பெயரில் ஒட்டிக்கொண்டது.
சிறு வயதிலிருந்தே திராவிட இயக்கங்கள் மீது ஆர்வமுடன் இருந்த ஹனிபா, 13 வயதில் ராஜாஜிக்கு கறுப்புக் கொடி காட்டி கைதாகியிருக்கிறார். 11 வயதிலேயே பள்ளிக்கூடத்தில் இஸ்லாமிய பாடல்கள் பாடியவர், 15 வயதில் தனியாக கச்சேரியே பாடியிருக்கிறார். அப்போதே ஒரு கச்சேரிக்கு 25 ரூபாய் வாங்கியிருக்கிறார். அன்றிலிருந்து தான் இறக்கும்வரை 75 ஆண்டுகளாக 15,000 மேடைகளுக்கு மேல் பாடியிருக்கிறார்.

நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறிய போதும், திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா பிரிந்து வந்து தி.மு.கவைத் தொடங்கியபோதும் அந்த மேடைகளில் பாடியிருக்கிறார் ஹனிபா. திராவிட இயக்கங்களின் பல மாறுதல்களை நேரில் பார்த்த வரலாற்று சாட்சியாக இருந்தவர் அதைத் தன் பாடல்களில் பதிவும் செய்திருக்கிறார். ‘வளர்த்த கெடா மார்பில் பாய்ந்ததடா’ என்ற இவரின் பாடல் அதற்கு ஒரு உதாரணம். ஈ.வெ.கி சம்பத் தி.மு.கவில் இருந்து பிரிந்தபோது நாகூர் ஹனிபா எழுதிய பாடல் இது. பின்னாளில் எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவைத் தி.மு.க மேடைகளெங்கும் ஒலித்தது. அதன்பின் வைகோ வெளியேறிய போதும் இதே பாடல்தான் தி.மு.கவினரால் அதிகம் ஒலிபரப்பப்பட்டது. தி.மு.கவிலிருந்து பிரிந்து, எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கிய போது, ஹனிபாவையும் அழைத்தார். அப்போது ஹனிபா, “எனக்கு ஒரே இறைவன், ஒரே கட்சி” என்று கூறி, எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்தார். அறிஞர் அண்ணா அடிக்கடி பெருமையாக ஒன்று சொல்வார் ‘ஹனிபாவின் அண்ணா அழைக்கின்றார் பாடலை படமாக்கி அதைத் திரையிட அனுமதித்தால் நான் நிச்சயம் திராவிட நாடு பெற்றுவிடுவேன்’ என்பார். அந்தளவுக்கு உணர்வூட்டக்கூடியதாக இருந்தது ஹனிபாவின் குரல். அண்ணாவின் ஆசைப்படி அந்தப் பாடலை அம்மையப்பன் என்ற படத்தில் சேர்த்திருந்தார் கருணாநிதி ஆனால் அது தணிக்கைக் குழுவால் நீக்கப்பட்டது.
சினிமாவில் நிறைய பாடவேண்டும் என்ற ஆசை ஹனிபாவுக்கு இருந்தது. ஆனால் அவரால் சில பாடல்கள் மட்டுமே பாட முடிந்தது. முதன்முதலாக இவருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வந்தபோது இவருடைய பெயரை ஹனிபா என்பதற்குப் பதிலாக குமார் என்ற புனைப்பெயரில் பாடச்சொன்னதால் அந்த வாய்ப்பை நிராகத்தார் ஹனிபா. அதேபோல ரேடியோக்களில் பாடி புகழ்பெற்ற ஹனிபா அகில இந்திய வானொலியை ஆகாசவாணி என்று மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேடியோவில் பாடுவதையே நிறுத்தினார். அந்தளவிற்கு கொள்கைப் பிடிப்பு கொண்டவராக இருந்தார். பின்னாட்களில் எல்லோரும் கொண்டாடுவோம், உன் மதமா என் மதமா என்று அவர் சினிமாவில் பாடிய சில பாடல்களும் தமிழகத்தில் மதம் கடந்து பலரின் விருப்பத்துக்குரிய பாடலாக இருந்தது.
அவருக்கு கைகூடாத இன்னொரு விஷயம் தேர்தல் அரசியல். அவர் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் தோல்வியே தந்தது. 1974-ம் ஆண்டில் கருணாநிதி நாகூர் ஹனிபாவை மேல்சபை உறுப்பினராக்கினார். ‘எனக்குப் பேசவே வராது. என்னைப்போய் மேல்சபை உறுப்பினராக நியமிக்கிறீர்களே’ என்று ஹனிபா கேட்க, ‘பேச வராது என்றால், பாடுங்கள்!’ என்றார் கருணாநிதி. அந்த ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, அதன் சிறப்பான அம்சங்களைப் பாடலாக்கி மேல்சபையில் பாடினார் ஹனிபா. கருணாநிதிக்கும் ஹனிபாவுக்கு சிறுவயதில் இருந்தே நட்பு இருந்தது. இருவரும் திருவாரூரில் ஒன்றாக சுற்றியிருக்கிறார்கள். தான் கட்டிய வீட்டிற்கே ‘கருணாநிதி இல்லம்’ என்று பெயர் வைக்கும் அளவிற்கு இருவரும் நண்பர்களாயிருந்தனர். ஹனிபா மறைந்த போது “ஹனிபா பாடிப்பாடி மக்களைக் கவர்ந்த காட்சியை, அந்த மக்களில் ஒருவனாக நான் ரசித்து இருக்கிறேன். என் ஆருயிர் சகோதரனை இழந்து தவிக்கிறேன்.” என்று கண்ணீர் வடித்தார் கருணாநிதி. கருணாநிதிக்காக ஹனிபா பாடிய கல்லக்குடி கொண்ட கருணாநிதி பாடல் இன்றைக்கும் தி.மு.க மேடைகளில் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மதுரை ஆதினத்திடம் நாகூர் ஹனிபாவிற்கு தனி நட்பு இருந்தது. ஹனிபாவின் குரல் என்றால் ஆதினத்திற்கு மிக நெருக்கம். தீவிர சைவ சமயவாதியாக இருந்தபோதும் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலைப் பாடுவார் ஆதினம். நாகூர் ஹனிபா மறைவிற்கு சில காலம் முன்பு அவரைச் சந்தித்தார் மதுரை ஆதினம். அப்போது மிகுந்த அன்போடு “உங்களைப் பத்தி நினைக்காத நாளில்ல..” என்று சொல்லி அன்போடு ஆரத்தழுவிய காட்சி இரு மதத்தினரையும் நெகிழ வைத்தது.
தனது கடைசி மேடையில்கூட ‘ஓடி வருகிறான் உதயசூரியன்’ என்று பாடிய இசைமுரசு நாகூர் ஹனிபாவை கட்சிப் பாடல்கள் பாடுபவர் என்றோ இஸ்லாமிய பாடல்கள் பாடுபவர் என்றோ சுருக்கிவிட முடியாது.