Bulli Bai என்ற செயலி மூலம் இஸ்லாமியப் பெண்களது எடிட் செய்யப்பட்ட போட்டோகளைப் பகிர்ந்து அவர்களை ஏலம் விட்டதாக எழுந்த புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரில் இன்ஜினீயரிங் மாணவர் ஒருவரும், உத்தராகண்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?
Bulli Bai செயலி
இஸ்லாமியப் பெண்களது புகைப்படங்களை எடிட் செய்து, அவர்களை ஏலத்தில் விடும் Bulli Bai என்ற செயலி குறித்த தகவல் புத்தாண்டு நாளான ஜனவரி 1-ல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல், இஸ்லாமியப் பெண்களை இழிவுபடுத்தியதாக `Sulli Deals’ என்ற செயலி குறித்த தகவல்கள் கடந்த ஆண்டு வெளியாகி சர்ச்சையானது. அதேபோல், இந்த செயலி வடிவமைக்கப்பட்டிரு நாட்டின் பிரபலமான இஸ்லாமிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் தொடங்கி பல்வேறு தரப்பைச் சேர்ந்த 100-க்கிம் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள் குறித்த விவரங்கள் அந்த செயலியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. மும்பையில் மகாராஷ்டிர மாநில சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், இஸ்லாமியப் பெண்களை மட்டும் இழிவுபடுத்தும் நோக்கில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த செயலியை மத்திய அரசு முடக்கியது.
பீகார் மாணவர்
மும்பை சைபர் கிரைம் போலீஸின் தொடர் விசாரணையில் பீகாரைச் சேர்ந்த விஷால் ஜா என்ற 21 வயது மாணவர் கைது செய்யப்பட்டார். அவர் இந்த செயலியை உருவாக்கியவர் இல்லை என்பதும், இஸ்லாமியப் பெண்கள் புகைப்படங்களை எடிட் செய்து, செயலியில் வெளியிட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவர் பெங்களூர் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினீயரிங் படித்து வந்தார். மேலும், தனது ட்விட்டர் கணக்கு வாயிலாக அந்த செயலியில் இஸ்லாமியப் பெண்கள் குறித்து அவதூறு கருத்துகளை அவர் பதிவிட்டு வந்ததையும், வெறுப்பை விதைக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்ததையும் மும்பை சைபர் கிரைம் போலீஸார் கண்டுபிடித்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரைக் காவலில் எடுத்த போலீஸார், அவரை மும்பை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தராகண்டைச் சேர்ந்த 18 வயதான ஸ்வேதா சிங் என்ற மாணவிதான் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டது தெரியவந்தது. இந்த செயலியோடு சீக்கியர்கள் சிலருக்குத் தொடர்பிருப்பதாகவும், ஆனால், காலிஸ்தான் தீவிரவாதிகளோடு தொடர்பிருப்பதைப் போல் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் மும்பை போலீஸார் கருதுகிறார்கள்.
மாஸ்டர் மைண்ட் ஸ்வேதா சிங்?
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வேதா சிங், பொறியியல் நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகி வருகிறார். புற்றுநோயால் தாயைக் கடந்த 2011-ல் இழந்த அவரது தந்தையும் கொரோனாவால் கடந்த ஆண்டு உயிரிழந்திருக்கிறார். மூன்று சகோதரிகளில் இரண்டாவது பெண் குழந்தையான ஸ்வேதாவுக்கு எட்டாம் வகுப்புப் படிக்கும் தம்பி ஒருவரும் இருக்கிறார். இதுகுறித்து பேசிய உத்தராகண்ட் டிஐஜி செந்தில் கிருஷ்ண ராஜ்,` ஸ்வேதா சிங் எதற்காக இந்த செயலியை உருவாக்கினார் என்று தெரியவில்லை. அவரிடம் மும்பை போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேபாளத்தைச் சேர்ந்த Giyou என்ற சோசியல் மீடியா நண்பரின் அறிவுறுத்தலின்படிjattkhalsa07’ என்ற பெயரில் போலியான கணக்கை உருவாக்கியிருக்கிறார். அதன்மூலம்தான் புல்லி பாய் செயலியில் பதிவிட்டு வந்திருக்கிறார்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக உத்தராகண்டைச் சேர்ந்த மற்றொரு மாணவர் மயங்க் ராவல் என்பவருக்கும் தொடர்பிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அவரையும் கைது செய்ய மும்பை காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
Also Read: EB Bill: மின் கட்டணத்துக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறதா… உண்மை என்ன?