மத்தியப்பிரதேசத்தின் ஸ்பெஷல் மாம்பழ வெரைட்டியான `நூர்ஜஹான்’ மாம்பழம் ஒன்றின் விலை எடைக்கு ஏற்ப ரூ.500-லிருந்து ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. முன்பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும் அந்த மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்?
குஜராத் எல்லையை ஒட்டிய மத்தியப்பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் இருக்கும் காத்தியவாடா பகுதி அதன் கூல் கிளைமேட்டுக்காகப் புகழ்பெற்றது. அந்தப் பகுதியின் மற்றொரு அடையாளமாக மாறியிருக்கிறது நூர்ஜஹான் மாம்பழ வெரைட்டி. இந்த ஸ்பெஷல் மாம்பழ வெரைட்டி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தது என்கிறார்கள். இந்த மாம்பழம் ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் தொடங்கி ஜூன் என இரண்டு மாதங்கள் மட்டுமே கிடைக்கும்.
அப்பகுதியில் வசிக்கும் அரச பரம்பரையைச் சேர்ந்த ஷிவ்ராஜ் சிங் தோட்டத்தில் மட்டுமே விளைந்து வந்த இந்த வகை மாம்பழங்கள் அழிவின் விளிம்புக்குச் சென்றன. அதன்பின்னர், 2015-ல் இந்த விஷயத்தில் தலையிட்ட மத்தியப்பிரதேச தோட்டக்கலைத் துறை நூர்ஜஹான் மாம்பழ வகையைக் காப்பாற்றியது. தோட்டக்கலைத் துறை மூலம் மற்ற விவசாயிகளுக்கும் இந்த மாம்பழம் பயிரிடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
தற்போது அந்தப் பகுதியில் மட்டுமே விளையும் இந்த மாம்பழ வகையை ஷிவ்ராஜ் சிங்கின் தந்தை தாக்குர் பி.சிங், 1968-ல் வாங்கிவந்து நட்டிருக்கிறார். நன்றாக விளைந்த மாம்பழம் ஒன்றின் எடை குறைந்தபட்சம் 2.5 கிலோவில் தொடங்கி அதிகபட்சமாக 4.5 கிலோ வரை இருக்கும் என்கிறார்கள். எடை மட்டுமல்ல அதன் பிரத்யேக இனிப்புச் சுவைக்காகவும் இந்த மாம்பழம் புகழ்பெற்றது. இதனால், ஆண்டுதோறும் சீசன் சமயங்களில் இந்த மாம்பழங்களுக்கான டிமாண்ட் எகிறுகிறது. ஆன்லைனில் அல்லது நேரில் வந்து முன்பதிவு செய்தால் மட்டுமே இதை நீங்கள் சுவைக்க முடியும். சாதகமான காலநிலை இருந்தால் மட்டுமே இதன் அறுவடையும் சாத்தியம் என்று சொல்லும் அப்பகுதி விவசாயிகள், இந்தவகை மாம்பழங்களின் எடை மட்டும் 2.5 கிலோவுக்குக் கீழ் குறைந்ததே இல்லை என்கிறார்கள்.
Also Read – நீங்க போதுமான தண்ணீர் குடிக்கலை – எச்சரிக்கை செய்யும் 7 அறிகுறிகள்!