அரசியல் மேடைகளையும் இலக்கிய மேடைகளிலும் அனல் பறக்கும் தனது பேச்சால் தனி அடையாளம் பெற்றவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். அவரோட மேடைப்பேச்சு எந்த வயசுல தொடங்குச்சு தெரியுமா… கல்லூரி காலங்களில் அவர் செய்த அசால்ட் சம்பவங்கள்… இப்படினு நாஞ்சில் சம்பத்தோட வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைப் பத்திதான் இந்த வீடியோவில் நாம பார்க்கப்போறோம்.
கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையைச் சேர்ந்த பாஸ்கர பணிக்கர் – கோமதி தம்பதியின் மகன்தான் பா.சம்பத். திராவிட இயக்கத்தில் பற்றுகொண்டிருந்த நாஞ்சில் சம்பத்தின் தந்தை, அவரது மூத்த சகோதரருக்கு கருணாநிதி என்று பெயரிட்டாராம். திராவிட இயக்கப் பெரியோர்களில் ஒருவரான சம்பத் நினைவாக இவருக்குப் பெயர் சூட்டப்பட்ட நிலையில், இவரது தம்பிகளுக்கு ஜீவா என்றும், ஸ்டாலின் என்றும் பெயரிட்டிருக்கிறார். 1989 ஆகஸ்ட் 17-ல் சசிகலா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சம்பத்துக்கு, மதிவதனி மற்றும் சரத் பாஸ்கர் என்ற இரண்டு பிள்ளைகள். அவர்கள் இருவருமே மருத்துவர்கள். தாய் நாவல் ஆசிரியர் மாக்ஸிம் கார்கியின் நினைவாக அவரது பெயரைத் தனது மூத்த பேரனுக்குச் சூட்டி மகிழ்ந்தாராம். சிறுவயது முதலே கமலின் தீவிர ரசிகரான இவருக்கு பாரதிராஜாவின் முதல் மரியாதை படமும், கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படமும் ரொம்பவே பிடித்த படங்கள். இந்த இரண்டு படங்களையும் தியேட்டரில் மூன்று முறை பார்த்திருக்கிறார். நடிகைகளில் சிந்துபைரவி சுஹாசினியை எப்போதும் பிடிக்குமாம்.
அபார நினைவாற்றல் கொண்டவர். சிறுவயதிலேயே சொல்லில் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் நினைவாகப் பெயர் வைத்திருந்தால் மட்டும்போதாது. அவரைப் போலவே வர முயற்சிக்க வேண்டும் என்பார்களாம் இவரது ஊரைச் சேர்ந்த பெரியவர்கள். மூன்றாம் வகுப்புப் படிக்கையில் தினசரி வரும் தினத்தந்தி நாளிதழை சத்தம்போட்டு முழுவதுமாகப் படிப்பாராம். அதைக் கேட்கவே, பத்து பேர் கூடியிருப்பார்களாம். அப்போது நடந்த சுதந்திர தின விழாவில் நேரு போல உடையணிந்து, அவரின் சுதந்திர தின உரையை மேடையில் பேசியிருக்கிறார். அந்த நிகழ்வுதான், தனது முதல் மேடைப் பேச்சு என்கிறார் நாஞ்சில் சம்பத். அதற்குப் பரிசாகக் கிடைத்த மு.வரதராசனாரின் திருக்குறள் தெளிவுரை புத்தகத்தை இன்றுவரை பத்திரமாக வைத்திருக்கிறாராம்.
சிறுவயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர், புத்தொளி என்கிற புனைப்பெயரில் புதுக்கவிதைகள், சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். கல்லூரி காலங்களில் இலக்கியப் பூங்கா என்கிற பெயரில் சிற்றிதழ் ஒன்றையும் நடத்தி வந்த இவர், அப்போது `புத்தொளி’ சம்பத் என்றே தனது பெயரைக் குறிப்பிடுவாராம். இவரது பெயர் எப்போதுநாஞ்சில்’ சம்பத் என்றானது தெரியுமா… அதைத் தெரிஞ்சுக்க வீடியோவோட கடைசிவரைக்கும் வெயிட் பண்ணுங்க.
பெரியார், அண்ணா மீதிருந்த ஈடுபாட்டால் தி.மு.கவில் இணைந்து பயணிக்கத் தொடங்கினார். இவரது சரளமான பேச்சாற்றலும் எதுகை மோனையோடு கூடிய இலக்கிய நடையும் விரைவிலேயே திமுகவின் முக்கியமான பேச்சாளர்களில் ஒருவராக இவரை உயர்த்தியது. திமுக தலைமையோடு முரண்பட்டு அக்கட்சியில் இருந்து வைகோ வெளியேறியபோது, அவருடன் சென்றார். மதிமுக ஆரம்பிக்கப்பட்டபோது, அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். வைகோவின் வலது கரமாக அந்தக் கட்சியில் செயல்பட்டு வந்தார். மேடைகளில் மணிக்கணக்கில் பேசும் ஆற்றல் படைத்த இவரின் பேச்சைக் கேட்கவே மக்கள் கூடிய காலங்கள் உண்டு.
நகமும் சதையுமாகப் பயணித்த இவருக்கும் வைகோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட ஒரு சம்பவம் காரணமானது. புத்தமத பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்ட இந்தியா வந்த ராஜபக்சேவை எதிர்த்து மதிமுக சார்பில் வைகோ போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். அந்தப் போராட்டத்துக்கு நாஞ்சில் சம்பத்துக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால், போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் நாஞ்சில் சம்பத் வெளிநாடு பயணம் சென்றிருந்தது இருவரிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதனால், மதிமுகவை விட்டு நாஞ்சில் சம்பத் நீக்கப்படலாம் என பேச்சு அடிபட்டது. கட்சியை விட்டு வெளியேற மாட்டேன் என்று ஆரம்பத்தில் சொல்லிவந்த இவர், 2012-ல் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட இவருக்கு இன்னோவா கார் ஒன்றையும் ஜெயலலிதா வழங்கினார். அப்போது இன்னோவா சம்பத் என்று கூட இவரைப் பற்றி சிலர் எழுதினர். 2015 வெள்ளத்தின்போது, வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடாத அதிமுக தலைமை பற்றிய கேள்விக்கு சில சேனல்களில் இவர் கொடுத்த பேட்டி மக்களை மட்டுமல்ல ஜெயலலிதாவையுமே கோபப்படுத்தியது. ஒரு பேட்டியில், யானைகள் நடக்கும்போது ஒரு சில எறும்புகள் சாகத்தானே செய்யும்’ என்று பேசிய அவர், வெள்ளம் பாதித்த சூழலிலும் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடந்ததே என்ற கேள்விக்கு,
ஒரு வீட்டில் இழவு விழுந்து விட்டது என்பதற்காக, இன்னொரு வீட்டில் கல்யாணம் நடக்காமல் இருக்குமா?’’ என்று இவர் பேசியதை ஜெயலலிதா ரசிக்கவில்லை. தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளப்பட்ட இவரை அதிமுக தலைமை மேடை கொடுக்காமல் ஒதுக்கியே வைத்திருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் உரிய முக்கியத்துவம் இல்லை என்று கருதிய இவர், சில காலம் டிடிவி தினகரனோடு பயணித்தார். அம்மா முன்னேற்றக் கழகத்தை அவர் தொடங்கியபோது, கட்சியில் அண்ணாவும் இல்லை திராவிடமும் இல்லை என்று கூறி அங்கிருந்து வெளியேறினார்.
2009 மார்ச் 1-ம் தேதி அனைத்து மாணவர் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு, `நாதியற்றவனா தமிழன்’ என்கிற பெயரில் இவர் ஆற்றிய உரை, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக இருந்தது என்று சொல்லி தேசிய பாதுகாப்புச் சட்டம் இவர் மீது பாய்ந்தது. இதற்காக சில காலம் சிறைவாசமும் அனுபவித்தார். அரசியல் மட்டுமல்லாது இலக்கிய உலகிலும் பேரார்வம் கொண்டவர். இலக்கியப் பூங்கா, பதிலுக்குப் பதில், என்னைத் தொட்ட என்.எஸ்.கே, நான் பேச நினைத்ததெல்லாம், பேசப் பெரிதும் இனியவன் என ஐந்து புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
தனது முகாமை அடிக்கடி மாற்றிக்கொண்டதாலேயே இவரது பேச்சுகளுக்கான முக்கியத்துவம் குறைந்துபோனதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சிப்பதுண்டு. தி.மு.கவில் தொடங்கிய இவரது அரசியல் பயணம் மதிமுக, அதிமுக என கடந்து இப்போது மீண்டும் திமுகவிலேயே வந்து நிற்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுக – அதிமுக மேடைகளில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பேசிய ஒரே மாதிரியான பேச்சை சிலர் Compare செய்து இவரை சீண்டியிருந்தார்கள். மதிமுகவில் துரை வைகோ பதவிக்கு வந்ததை ஆரம்பத்தில் எதிர்த்தார். பின்னர், துரை வைகோவுக்குத் துணையாக நிற்பேன் என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். வைகோவை எதிர்த்து மதிமுகவை விட்டு வெளியே வந்த இவர், பின்னாட்களில் ஸ்டெர்லெட் ஹீரோ என்று அவரைப் புகழ்ந்தார். அதேபோல், திமுக தலைவராக இருந்த கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்த இவர், பின்னாட்களில் அந்தக் கட்சியிலேயே ஐக்கியமானார். 2007-ல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, கருணாநிதியை விமர்சித்ததற்காக சக கைதிகளால் தாக்கப்பட்டதாக இவர் கூறவே, திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். அரசியலில் இருந்து விலகியிருக்கிறேன் என்று சொன்ன இவர், திமுக ஐடிவிங் நடத்திய பொய்ப்பெட்டி என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். `தம்பி உதயநிதி ஒரு அத்தியாத்தைப் படைப்பார் என்றால், அவருக்கு ஏணியாகவும் இருப்பேன்; தோணியாகவும் இருப்பேன்’ என்று பேசினார். அந்த நிகழ்ச்சியில் திமுக கரைவேட்டியை அவருக்கு பொன்னாடையாக அணிவித்தார் உதயநிதி.
Also Read – அதாவது வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோஸ்ட்!
புத்தொளி சம்பத் என்கிற பெயரில் இருந்த இவர் நாஞ்சில் சம்பத் என்றானது, பொன்னேரியில் நடந்த ஒரு மாநாட்டுக்குப் பிறகுதானாம். 1986-ம் ஆண்டு வாக்கில் நடந்த அந்தக் கூட்டத்துக்கு பேராசிரியர் அன்பழகன் வந்திருந்தாராம். மாநாட்டு நோட்டீஸில் புத்தொளி என்பதற்குப் பதிலாக புத்துளி என்று இவரது பெயருக்கு முன்னால் குறிப்பிட்டது சங்கடப்படுத்தியிருக்கிறது. அப்போது, நாளை வேறு மாதிரியும் இதைக் குறிப்பிட வாய்ப்பிருக்கிறது. அதனால், நாஞ்சில் சம்பத் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதானே… இதை நாஞ்சிலாரிடம் (முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன்) போய் சொல்லிவிட்டு அப்படியே வைத்துக்கொள்’ என்று பேராசிரியர் அன்பழகன் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, அப்போது எம்.எல்.ஏவாக இருந்த பரிதி இளம்வழுதியிடம் இதைப் பற்றி சம்பத் சொன்னதும், நல்ல யோசனைதானே என அவரும் ஆமோதித்திருக்கிறார். இதையடுத்து நாஞ்சிலாரிடம் கேட்டபோது,தாராளமாக வைத்துக் கொள். அதற்கு உனக்குத் தகுதி இருக்கிறது’ என்று அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, 1986 நவம்பர் 9-ல் கோவையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் முதல்முறையாக ’நாஞ்சில் சம்பத்’ என்கிற பெயரில் மைக் பிடித்திருக்கிறார்.
நாஞ்சில் சம்பத் தனியாக அரசியல் கட்சி ஒன்று தொடங்கினால், என்ன பெயர் வைப்பார்? உங்க கருத்துகளை கமெண்ட்ல சொல்லுங்க.