வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக் விலகியிருக்கிறார். இனவாதத்துக்கு எதிராக வீரர்கள் எடுத்துவரும் முன்னெடுப்பில் கலந்துகொள்ள அவர் விரும்பாததே இதற்குக் காரணம் என்கிறார்கள். என்ன நடந்தது?
Black lives Matter Movement
ஆப்பிரிக்க – அமெரிக்கர்களுக்கு எதிராக இழைக்கப்படும் இனரீதியான அநீதிகளுக்கு எதிராக சர்வதேச அளவில் பிளாக் லிவ்ஸ் மூவ்மெண்ட் எனும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் முழங்காலிட்டு, வலது கையைத் தூக்கி ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதுவரை, இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணி வீரர்கள் போட்டிக்கு முன்னதாக இதன்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
Quinton de Kock சர்ச்சை
இந்தநிலையில், இன்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியின்போது இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க தென்னாப்பிரிக்க வீரர் டிகாக் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `உலக அளவில் இனவாதத்துக்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டத்துக்கு எங்கள் வீரர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு ஆதரவு கொடுப்பது அவசியம் என்று கருதுகிறோம். இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க டிகாக்குக்கு உரிமை உண்டு என்பதை ஏற்கிறோம். இதுகுறித்து அணி நிர்வாகம் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு குறித்து ஆலோசிக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறது.
இதனால், தென்னாப்பிரிக்க அணிக்காக டிகாக் இனி சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த முடிவு அவரது கரியரையே முடிவுக்குக் கொண்டுவந்து விடும் அபாயம் ஏற்படுத்தியிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
Also Read –