பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: 5 வகுப்புகள்; நோ பி.இ.டி பீரியட்; 9.30 – 3.30… விதிமுறைகள் என்னென்ன?

கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கல்லூரிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. இதற்காக அரசு செய்திருக்கும் ஏற்பாடுகள் என்னென்ன.. விதிமுறைகள் என்னென்ன?

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு!

தமிழகத்தில் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்புகள் நாளை முதல் திறக்கப்பட இருக்கின்றன. அதே தினத்தில் கல்லூரிகளும் திறக்கப்பட இருக்கின்றன. கல்லூரிகளைப் பொறுத்தவரை பேராசியர்கள், பணியாளர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதேபோல்,18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள்!

பள்ளிகள் திறப்பை ஒட்டி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகள் திறப்புக்காக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்

 • ஆசிரியர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
 • பள்ளிக்கு மாணவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும். மாணவர்கள் மாஸ்க் அணியாமலோ அல்லது அவர்கள் அணிந்திருக்கும் மாஸ்க் கிழிந்திருந்தாலோ பள்ளியின் தலைமையாசியர்கள் அவர்களுக்கு மாஸ்க் வழங்க வேண்டும்.
 • பள்ளிகளில் சானிடைசர், கை கழுவத் தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்
 • வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும்
 • மாணவர்கள் மனநலன், உடல் நலனைப் பரிசோதிக்க மருத்துவர் அல்லது செவிலியர் பள்ளியில் முழு நேரமும் இருக்க வேண்டும்.
 • பெஞ்சில் இரு முனைகளில் ஒருவர் வீதம் இரண்டு பேர் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும்.
 • பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைனிலேயே வகுப்புகளில் பங்கேற்கலாம்.
 • நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளைத் திறக்கக் கூடாது
 • மாணவர்கள் வருகைப் பதிவுக்காக பயோ மெட்ரிக் வருகைப் பதிவைப் பயன்படுத்தக் கூடாது.
 • வெளியாட்கள் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.
 • பள்ளிக்கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும்.
 • மாணவர்கள் ஒருவொருக்கொருவர் உணவைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. மதிய உணவு இடைவெளியில் கூட்டமாக அமரக் கூடாது.
 • பள்ளியில் விளையாட்டு நிகழ்ச்சிகள், காலை நேர வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது.
 • ஒவ்வொரு வகுப்பிலும் தலா 20 மாணவர்களே அமர வைக்கப்பட வேண்டும்.
 • பள்ளிப் பேருந்துகள், வேன்களில் உரிய கொரொனா கட்டுப்பாட்டு விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
 • வகுப்பறைகளில் இருக்கும் மேசை, நாற்காலி போன்றவைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
 • அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்க வேண்டும்.

5 வகுப்புகள் மட்டுமே!

பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளி ஒன்றில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை. தயக்கமில்லாமல் மாணவர்களைப் பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒரு நாளைக்கு 5 வகுப்புகள் மட்டுமே நடைபெறும். காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துவிட வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

பெற்றோருக்கு நிகராக மாணவர்கள் மீது இந்த அரசு அக்கறை கொண்டிருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். விளையாட்டு நேரம் ஒதுக்கப்படாது. பள்ளிகள் தொடங்கிய உடனே பாடம் நடத்தப்படாது. உளவியல் ரீதியாக மாணவர்கள் தயாரான பின்னரே பாடங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருவது கட்டாயமில்லை!

இந்தநிலையில், மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வருவது கட்டாயமில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்திருக்கிறது. `கொரோனா மூன்றாவது அலை வரக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்திருக்கிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் முழு நேரமும் முகக் கவசம் அணிந்திருப்பதும், முறையாக கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதும் சாத்தியமில்லாதது.

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தெளிவான முடிவு இதுவரை எட்டப்படவில்லை. இந்தசூழலில் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடாமல் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றால், தொற்று பரவலை அதிகரிக்கச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. சுழற்சிமுறையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்போது ஒரே வகுப்பில் இருக்கும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்பட வாய்ப்புண்டு. இது ஆசிரியர்களுக்குக் கூடுதல் சுமையாக அமைய வாய்ப்புண்டு. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், ஆன்லைன் வகுப்புகளைத் தொடர அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, `நிபுணர்களைக் கலந்தாலோசித்த பிறகே பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவெடுத்திருக்கும் என்று நினைக்கிறோம்’ என்று கருத்துத் தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

அரசு தரப்பில், “நிபுணர்களைக் கலந்தாலோசித்தே பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உயர் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்கள், பணியாளர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் தொடர்ந்து பாடங்கள் பகிரப்படும். மாணவர்கள் அனைவரும் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை. 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும். மாணவர்கள் பாதுகாப்புக்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்’’ என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்றன. இதுபற்றி உங்கள் கருத்து என்ன… கமெண்டில் பதிவிடுங்கள்.

Also Read – விநாயகர் சதுர்த்தி: கட்டுப்பாடுகள் என்னென்ன.. எதெற்கெல்லாம் அனுமதி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top