ரஷ்ய தயாரிப்பான Sputnik V தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பு மற்றும் விநியோகிக்கும் உரிமையை ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்றிருக்கிறது.
இந்தியாவில் ஏற்கனவே உள்நாட்டு தயாரிப்புகளான கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது தடுப்பூசியாக Sputnik V, அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக ஹைதராபாத்தில் இருக்கும் அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள், 5,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக, டெல்லி, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கும் இந்தத் தடுப்பூசி, அடுத்தடுத்த கட்டங்களில் நாடு முழுவதும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Sputnik V தடுப்பூசி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 6 விஷயங்கள்
ஸ்புட்னிக் பெயர்க்காரணம்
ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பிய முதல் ராக்கெட்டான ஸ்புட்னிக் நினைவாக இந்த கொரோனா தடுப்பூசிக்கு `ஸ்புட்னிக் வி’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
செயல்படும் முறை
ரஷ்ய சுகாதாரத் துறை இந்தத் தடுப்பூசி பயன்பாடுக்கு ஆகஸ்ட் 2020-ல் ஒப்புதல் அளித்தது. இந்தத் தடுப்பூசி மருந்து வலுவிழக்கச் செய்யப்பட்ட கொரோனா வைரஸைக் கொண்டிருக்கும். அதனால், மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. அதேநேரம், அந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும்.
செயல்திறன்
ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.5% செயல்திறன் கொண்டதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது ரஷ்யா. இது, உலகின் மற்ற முன்னணி தடுப்பூசிகளான மாடர்னா நிறுவன தடுப்பூசி மற்றும் ஃபைசர் – பயோடெக் தடுப்பூசிகளை விட அதிகம்.
விலை
சர்வதேச சந்தையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை 10 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவு. இரண்டு டோஸ்களாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இது 2 முதல் 8 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசிகளை நீங்கள் போட்டுக்கொள்ள நினைத்தால், இதன் ஒரு டோஸ் விலை ரூ.995 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, தடுப்பூசி போர்ட்டலான கோவின் இணையதளத்தில் நீங்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தயாரிப்பு
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி நிறுவனத்தின் நிதியுதவியோடு அந்நாட்டின் காமலியா ஆய்வு நிறுவனம் இந்தத் தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. ரஷ்ய சுகாதாரத் துறையில் Gam-COVID-Vac’ என்ற பெயரில் இந்தத் தடுப்பூசி 2020 ஆகஸ்ட் 11-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. ரஷ்யா தவிர இந்தியா, பிரேசில் உள்ளிட்ட 66 நாடுகள் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருக்கின்றன. இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் இறக்குமதி செய்கிறது. அதேபோல், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்The Panacea Biotec’ எனும் மருந்து நிறுவனம் ஆண்டுக்கு 100 மில்லியன் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி தமிழ்நாட்டில் கிடைக்குமா?
ஸ்புட்னிக் வி தடுப்பூசி உரிமையை இந்தியாவில் பெற்றிருக்கும் டாக்டர் ரெட்டி நிறுவனம், பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களோடு தடுப்பூசி உற்பத்திக்காக ஒப்பந்தம் செய்து வருகிறது. முதற்கட்டமாக ரஷ்யாவில் இருந்து மே 1-ம் தேதி 1.50 லட்சம் டோஸ்களும் அடுத்தகட்டமாகக் கடந்த 16-ம் தேதி 60,000 டோஸ்களும் டாக்டர் ரெட்டி நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டன. உள்நாட்டு உற்பத்தி, இறக்குமதி என தடுப்பூசி கையிருப்பு தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசும் 3.5 கோடி தடுப்பூசி டோஸ்களுக்காக உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதில், சீன நிறுவனங்களுக்குத் தமிழக அரசு அனுமதி மறுத்திருக்கிறது. இதனால், இந்த டெண்டர் மூலம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தமிழகத்தில் விரைவில் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நேற்று தொடங்கிவைத்திருக்கும் நிலையில், விரைவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் தமிழ்நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read – கொரோனா இரண்டாவது அலை… தடுப்பூசிகளைத் தவிர்க்காதீர்.. தடுக்காதீர்!