கௌதம் அதானி – சர்வதேச அளவில் கார்ப்பரேட் உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் இந்தியர். போர்ட் பிஸினஸ் தொடங்கி மின்சார உற்பத்தி வரைக்கும் பல துறைகள்ல கால் வைச்சுட்டு இருக்க அதானி, டீனேஜரா இருந்தப்ப பண்ண முதல் பிஸினஸ் என்ன தெரியுமா… இந்தியாவோட மிகப்பெரிய தனியார் துறைமுகமா இருக்க முந்த்ரா போர்ட்டை மேனேஜ் பண்ற அதானி, அதைப்பத்தி முதல்முதல்ல கனவு கண்ட வயசக் கேட்டா ஆச்சர்யப்படுவீங்க… தற்போதைய சூழல்ல உலக அளவுல பொருளாதார வளர்ச்சி கடுமையா பாதிக்கப்பட்ட இவர் கம்பெனியோட ஷேர்ஸ் மட்டும் அதிகரிக்க என்ன காரணம், அவரோட லைஃப்ல நடந்த இரண்டு மறக்க முடியாத சம்பவங்கள்னு, இன்னிக்கு நாம தொழிலதிபர் கௌதம் அதானியோட சக்ஸஸ் ஸ்டோரியைத்தான் பாக்கப் போறோம்.

குஜராத் பனியா குடும்பத்துல 1962 ஜூன் 24-ம் தேதி ஷாந்திலால் – ஷாந்தி அதானி தம்பதியோட மகனாப் பிறந்தவர் கௌதம் அதானி. அகமதாபாத் பக்கத்துல இருந்த அந்தத் தம்பதியோட 7 குழந்தைகள்ல ஒருத்தரான இவருக்கு, குடும்பம் பாரம்பரியமா செஞ்சுட்டு வந்த டெக்ஸ்டைல் பிஸினஸ்ல பெருசா இண்ட்ரஸ்ட் இல்லை. சின்ன வயசுலயே பெரிய பிஸினஸ் மேனாகணும்னு கனவு கண்டிருக்கார். குஜராத் யுனிவர்சிட்டில பி.காம் செகண்ட் இயர் படிச்சுட்டு இருந்தபோது, படிப்புலாம் நமக்கு செட் ஆகாது, பிஸினஸ்தான்னு தீர்க்கமா முடிவெடுத்ததோட, காலஜ்ல இருந்து டிஸ்கண்டினியூ ஆகுறார். கனவுகள் நகரமாகக் கொண்டாடப்படுறப்பட்ட மும்பைக்கு கையில 100 ரூபாயோட வந்தப்ப இளம் அதானியோட வயசு 18தான். டைமண்ட் புரோக்கரேஜ் பிஸினஸ்ல கொடிகட்டிப் பறந்த மஹிந்திரா பிரதர்ஸ் கம்பெனில வேலைக்கு சேருறார். 2-3 வருஷம் அங்கயே இருந்து தொழிலைக் கத்துக்கிட்டு தனியா டைமண்ட் புரோக்கரேஜ் பிஸினஸ் பண்ணி, 20 வயசுலயே மில்லினியர் ஆகியிருக்கார்.
1981-ல இவரோட மூத்த சகோதரர் மன்சுக்பாய் அதானி, அகமதாத்ல இருந்த ஒரு பிளாஸ்டிக் உற்பத்தி கம்பெனியை விலைக்கு வாங்குறார். அதை மேனேஜ் பண்றதுல்ல அண்ணனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக அகமதாபாத் வர்ற கௌதம், ஒரு கட்டத்துல நேரடியா தென்கொரியா போய் பிவிசி பாலிமர் இறக்குமதிக்கான ஆர்டரை எடுக்குறார். 1985 காலகட்டத்துல வெளிநாட்டில இருந்து பொருட்களை இறக்குமதி செய்யத் தொடங்குன அவர், 1988-ல தனியா போய் அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிட்டெட் கம்பெனியைத் தொடங்குறார். ஆரம்ப காலத்துல விவசாயத்துக்கு உதவும் உப பொருட்கள், மின்சார உற்பத்தில அந்த கம்பெனி கவனம் செலுத்துச்சு. இன்னிக்கு Adani Enterprises Limited-னு ஒரு பெரிய ஆலமரமா வளர்ந்திருக்க அந்த கம்பெனி, logistics, resources, energy, aerospace, agriculture, defense-னு ஏகப்பட்ட துறைகள்ல கால் பதிச்சிருக்கு. Adani Exports Limited-ன்ற இன்னொரு நிறுவனம் துறைமுகங்களைக் கையாளும் இந்தியாவின் மிகப்பெரிய கம்பெனி. இவங்க மேனேஜ் பன்ற குஜராத் முந்த்ரா துறைமுகம்தான் இந்தியாவில் தனியார் நிர்வகிக்கும் மிகப்பெரிய கமர்ஷியல் போர்ட். அதேமாதிரி, கிட்டத்த 4950 மெகாவாட் அளவுக்கு அனல் மின்நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி பன்ற அதானி பவர்ஸ் நிறுவனம்தான் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனம்.

துறைமுகங்களைக் கையாள்கிற பிஸினஸில் களமிறங்கியதுதான் அதானியோட அசுர வளர்ச்சிக்கு முக்கியமான காரணம். 1991-ல் கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளால இந்தியத் தொழில்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுச்சு. அதுக்கப்புறம் 1995-ல முந்த்ரா துறைமுகத்தைக் கையாளும் காண்ட்ராக்டை அதானி கம்பெனி கைப்பற்றுச்சு. இதுக்குப் பின்னாடி அதானியோட சின்ன வயசு ஃபிளாஷ்பேக்கையும் பிஸினஸ் சர்க்கிள்ல சொல்வாங்க. ஸ்கூல் டூர் போன சமயம் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்துக்குப் போயிருக்கார் அதானி. துறைமுகத்தோட பிரமாண்டத்தைப் பார்த்து வியந்துபோன அவர், வளர்ந்தபிறகு இப்படி ஒரு துறைமுகத்தை உருவாக்கணும்னு ஆசைப்பட்டாராம். அந்த சின்ன வயசு ஆசையை பின்னாட்களில் நிறைவேற்றியும் காட்டியிருக்கார்.
அதேமாதிரி, துறைமுகங்களையும் நாட்டில் ரயில் பாதைகளையும் இணைக்கணும்னு மத்திய அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்ததுல முக்கியமான பங்காற்றியவர் அதானி. நிதிஷ் குமார் மத்திய ரயில்வே மினிஸ்டரா இருந்தப்ப, அவர நேரே போய் பார்த்து, துறைமுகங்களை ரயில் பாதைகள் மூலம் இணைக்குறது எவ்வளவு முக்கியம்னு இவர் பேசியிருக்கார். எப்படிப்பட்ட டீலையும் சிறப்பா பேசி முடிக்குறதுல இவருக்கு நிகர் இவரேதான்னு சொல்லுவாங்க. அதுக்கப்புறம் இதுபத்தி அரசு கொள்கை முடிவையே எடுத்து அறிவிச்ச நிலையில, துறைமுகங்கள்ல இருந்து ரயில் நிலையங்களுக்கு எளிதா பொருட்களைக் கொண்டுபோக தனியார் நிறுவனங்களே ரயில் பாதைகளைப் போட்டுக்கவும் அரசு அனுமதி கொடுத்துச்சு. இவரோட Nagotiation திறமைக்கு இன்னொரு எக்ஸாம்பிளையும் சொல்வாங்க… கர்நாடக மாநிலம் உடுப்பில இருக்க Lanco-ங்குற அனல் மின்நிலையம் 2014-ல விற்பனைக்கு வந்துச்சு. அந்த அனல்மின் நிலையத்தை வாங்க ரிலையன்ஸ் தரப்புல ஆர்வம் காட்டிட்டு இருந்தாங்க. ஆனால், பேச்சுவார்த்தை இரண்டு தரப்புலயும் இழுத்துட்டே போயிருக்கு. அந்த சமயத்துல வேறொரு புராஜக்டுக்காக லான்கோ நிறுவனத்தோட அதானியோட நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருந்திருக்காங்க. அப்போ, உடுப்பி புராஜக்ட் பத்தி எதேச்சையா பேச்சு எழுந்திருக்கு. அதுவரைக்கும் தன்னோட டீமை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்திட்டு இருந்த அதானி, உடுப்பி புராஜக்ட் பத்தி கேள்விப்பட்ட உடனே, தானே நேரடியா களமிறங்கியிருக்காரு. பொதுவா ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்பு கொண்ட பவர் பிளாண்ட், கைமாறுவதற்கு ஏகப்பட்ட ஃபார்மாலிட்டிகளை முடிக்கணும். இதுக்கு பல வாரங்கள், ஏன் சில மாதங்கள் கூட ஆகலாம். ஆனால், அதானி உடுப்பி பவர் பிளாண்டை வாங்கணும்னு முடிவெடுத்து, 100 மணி நேரத்துக்குள்ள மொத்த புராசஸையும் முடிச்சிருக்கார். இதை பிஸினஸ் உலகம் அப்போது மிரட்சியோடு பார்த்துச்சுனு சொல்வாங்க.
மறக்க முடியாத 2 சம்பவங்கள்
கௌதம் அதானியின் வாழ்வில் 1998 ஜனவரி 1, 2008 நவம்பர் 26 – என இந்த இரண்டு நாட்கள் மறக்கவே முடியாத நாட்கள். 1990-களின் பிற்பகுதியில் அதானி நிறுவனம் இந்தியாவில் பலதுறைகளில் கிளைபரப்பி வளர்ந்து வந்த நிலையில், 1998 ஜனவரி 1-ம் தேதி அதானியும் அவருடன் இருந்த ஷாந்திலால் படேல் என்பவரையும் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தியது. அவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கேட்டு மிரட்டியது. அகமதாபாத்தின் கர்னாவதி கிளப்புக்கு வெளியே நடந்த இந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பிணைத் தொகையைக் கொடுத்ததாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட Fazlu Rehman மற்றும் Bhogilal Darji என்ற இரண்டு பிரபல ரவுடிகள், உரிய ஆதாரங்கள் இல்லாததால், அகமதாபாத் நீதிமன்றத்தால் 2018-ல் விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல், 2008 நவம்பர் 26-ல் மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருந்தும் அதானி தப்பியிருக்கிறார். ஹோட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கியால் சுடத் தொடங்கியபோது, தாஜ் ஹோட்டலின் Weather Craft ரெஸ்டாரெண்டில் துபாய் துறைமுகத்தின் தலைமைச் செயலதிகாரியாக இருந்த முகமது ஷராஃபுடன் உணவருந்திக் கொண்டிருந்தார். தீவிரவாதிகள் நுழைந்து நீச்சல் குளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதைப் பார்த்த அவர், ஹோட்டல் ஊழியர்கள் உதவியோடு பேஸ்மெண்டில் பதுங்கியிருக்கிறார். நவம்பர் 26-ம் தேதி இரவு முழுவதையும் தாஜ் ஹோட்டலில் பதுங்கியபடியே கழித்த அதானியை, கமாண்டோ படை வீரர்கள் மறுநாள் காலை 8.30 மணியளவில் மீட்டிருக்கிறார்கள். இரவு முழுவதையும் தூங்காமல் கழித்த தனது குடும்பத்தினரை அகமதாபாத்தில் சந்தித்த பிறகே அவர் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். இதுபற்றி ஒரு இடத்தில் குறிப்பிட்ட அவர், `சாவை 15 அடி தூரத்தில் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்’ என்று துயரமான அந்த நிமிடங்களைப் பகிர்ந்திருந்தார்.
அதானி குழும நிறுவனங்களோட ஷேர்ஸ் மட்டும் கடந்த ஏப்ரல் மாசத்துல 120 பெர்சண்ட் அளவுக்கு அதிகமானது. குறிப்பா, அதானி வில்மர்-ங்குற அவரோட கம்பெனி ஷேர்ஸ் மட்டுமே 87% அளவுக்கு பலனடைஞ்சது. ரஷ்யா – உக்ரைன் போர்தான் இதுக்கு முக்கியமான காரணமா பார்க்கப்படுது. உக்ரைன்ல இருந்து சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி கடுமையா பாதிக்கப்பட்டதுனால, மற்ற நாடுகள்லாம் கடலை எண்ணெய், சோயா பீன் எண்ணெய் போன்ற மாற்றுகளை நோக்கி நகரத் தொடங்கினர். அதேபோல், உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடான இந்தோனேசியா, உள்நாட்டு சந்தைத் தேவையை சமாளிக்க எண்ணெய் ஏற்றுமதிக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அதானி வில்மர் நிறுவனத்தோட பங்குகளும் வேகவேகமா உயர்ந்துச்சு.

12 துறைமுகங்களோட, மும்பை, லக்னோ, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் விமான நிலையங்களையும் அதானி குழும நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. Renewable Energy, கியாஸ், மின் உற்பத்தி-னு அதானி தொடாத துறைகளே இல்லைனு சொல்லலாம். குஜராத்துல முதலமைச்சரா இருந்த காலம்தொட்டே மோடியின் ஆதரவாளராக 20 ஆண்டுகளுக்கு மேலாக அதானி இருக்கிறார். இதுவே அவர் மீது ஒரு குற்றச்சாட்டாகவும் வைக்கப்படுகிறது. அதானி, தனது மொத்த வருமானத்தின் 3% அளவுக்கு தனது டிரஸ்ட் மூலம் நன்கொடை, நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. பல் மருத்துவரான அதானியின் மனைவி ப்ரீதிதான் இதை முன்னின்று நிர்வகிக்கிறார். அதேபோல், அவருக்கு கரண் அதானி, ஜீத் அதானி என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனது பெர்சனல் பக்கங்களில் மீடியா வெளிச்சம்படுவதை அவர் விரும்புவதில்லை.
அதானியோட வளர்ச்சில முக்கியமான பங்குனு நீங்க எதைப் பாக்குறீங்க… மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
Also Read – ரோல்மாடல் விஜய் சேதுபதி… எல்லா ஆண்களுக்கும் தொப்பை அழகுதான்!