Tamilnadu rains: தமிழகத்தில் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 4 நாட்களுக்கு மழை எப்படியிருக்கும்?
வடகிழக்குப் பருவமழை
தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் குறிப்பாக நவம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அணைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. நவம்பர் 25-ம் தேதி மாலை நிலவரப்படி தமிழக அணைகளில் 91%-க்கும் மேல் நீர் இருப்பு இருக்கிறது. இந்தநிலையில், இலங்கையை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், `கடந்த 25 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் 3 இடங்களில் அதிதீவிர மழையும் 4 இடங்களில் கனமழையும் 70 இடங்களில் மிதமான மழையும் பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ மழை பதிவானது. அடுத்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், விழுப்புரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அதிகனமழையும் பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், தேனி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும்’’ என்று தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கான மழை முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல்நாளான 26-11-2021 அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
27-11-2021 அன்று விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
28-11-2021 அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அரியலூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கபட்டிருக்கிறது.
29-11-2021 அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
Also Read – Chennai Rains: மழைக்கால நோய்கள்… பாதுகாப்பாக இருப்பது எப்படி?