காடல்குடி இறைச்சிக் கடை

தூத்துக்குடி அருகே கோழி திருடி, இறைச்சிக் கடைக்காரரைத் தாக்கிய போலீஸார்… 2 பேர் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இறைச்சிக் கடையில் கோழி திருடியதோடு, கடை உரிமையாளரையும் தாக்கிய விவகாரத்தில் 2 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கோழி திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கும் காடல்குடி கிராமத்தில் முத்துசெல்வன் என்பவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவரது கோழி இறைச்சிக் கடை காடல்குடி காவல்நிலையம் அருகே இருக்கிறது. கடை உரிமையாளர் முத்துசெல்வனின் நம்பருக்குக் கடந்த 16-ம் தேதி இரவு 11 மணிக்கு மேல் போன் வந்துள்ளது. அவர் தூங்கிவிட்ட நிலையில், மனைவி ஜெயா போனை எடுத்துப் பேசியிருக்கிறார். அப்போது, காடல்குடி காவல்நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு ஒரு கிலோ கறி வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. அப்போது, தனது கணவர் தூங்கிவிட்டதாகவும் காலையில் வந்து கறியை வாங்கிக் கொள்ளுமாறும் ஜெயா கூறி இணைப்பைத் துண்டித்திருக்கிறார். ஆனால், மீண்டும் மீண்டும் அழைப்புகள் வரவே, செல்போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு அவரும் தூங்கியிருக்கிறார்.

காடல்குடி போலீஸார்
காடல்குடி போலீஸார்

பின்னர், மறுநாள் காலையில் முத்துசெல்வனை செல்போனில் தொடர்புகொண்ட போலீஸார், ஒரு கோழியை எடுத்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதைத் நாங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தோம். அதன்பின்னர், 18-ம் தேதி கடைக்கு வந்த தலைமைக் காவலர் பாலமுருகன், காவலர்கள் பாலகிருஷ்ணன், சதீஷ் ஆகியோர் மீன் வெட்டிக் கொடுக்கச் சொன்னதாகத் தெரிகிறது. ஆனால், தனக்கு மீன் வெட்டத் தெரியாது என முத்துசெல்வன் சொல்லியதாகவும், அதனால் கத்தியை அவர்கள் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதல்

அதன்பின்னர் மீண்டும் கடைக்கு வந்த காவலர்கள் இருவரும், தாங்கள் கோழியை எடுத்ததை ஏன் மற்றவர்களிடம் கூறினாய் என்று கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. முத்துசெல்வனிடம் 500 ரூபாயைக் கொடுத்துவிட்டுச் சென்ற காவலர்கள், 19-ம் தேதி மீண்டும் வந்து முத்துசெல்வன் அமர்ந்திருந்த சேரை உடைத்து அவரைத் தாகியதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தடுக்க முயன்ற ராமர் என்பவரையும் போலீஸார் தாக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து, ஊர் மக்கள் கூடியதால், விவகாரம் பெரிதானது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தூத்துக்குடி எஸ்.பி எஸ்.ஜெயக்குமார், முத்துசெல்வனைத் தாக்கிய தலைமைக் காவலர் பாலகிருஷ்ணண், காவலர் சதீஷ்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

Also Read – `யார் முதலில் தாலி கட்டுவது…’ குன்றத்தூர் கோயிலில் அடித்துக்கொண்ட திருமண கோஷ்டியினர்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top