தமிழக அரசின் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. சென்னை கலைவாணர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. 2009 – 2014 வரையிலான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தம் 314 கலைஞர்களுக்கு ரூ.52.75 லட்சம் மதிப்புள்ள காசோலை, தங்கப் பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, செய்தித் துறை அமைச்ச சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.
சிறந்த நடிகர் விருதைப் பெற்ற 6 நடிகர்கள் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப் போறோம்.
கரண் (மலையன் – 2009)
எம்.பி கோபி இயக்கத்தில் ஆர்.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.கே. ரகுராம் தயாரிப்பில் கிராமத்தில் நடக்கும் கதைக்களத்தில் ஒரு எளிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் கரண். பட்டாசு ஆலையில் நடக்கும் தீ விபத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் காதல், சென்டிமென்ட் என வெளுத்து வாங்கி இருப்பார் கரண். தீ விபத்தின் நோக்கத்தையும், விபத்து நடந்ததற்கான பின்ணனியயையும் கண்டுப்பிடிப்பதே கதை. தனது யதார்த்த நடிப்பை திரையில் ஸ்கோர் செய்த கரண் 2009- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை ‘மலையன்’படத்துக்காக வென்றார்.
விக்ரம் (ராவணன் – 2010)
2010 – ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் என பெரிய ஸ்டார் கேஸ்டிங்கோடு வெளிவந்த படம் ராவணன். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஒரே நேரத்தில் இந்த படம் ராவண் என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது. பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்தும் படம் விவரிக்கும், விக்ரம் மற்றும் பிரித்விராஜ் இடையேயான மோதலை அடிப்படையாகக் கொண்டது. நடிப்பில் மிரட்டி இருப்பார் விக்ரம். ராவணன் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை விக்ரம் பெற்றுக்கொண்டார்.
விமல் (வாகை சூட வா – 2011)
களவாணி பட இயக்குநர் ஏ. சற்குணத்தின் ஒரு அருமையான படைப்பு ‘வாகை சூடவா’ திரைப்படம்.
செங்கல்சூளை அடிமைத் தொழிலாளர்களும், அவர்கள் அடிமையாக வாழ்ந்த நிலையும் இதுவரை பார்த்திடாத வகையில் திரையில் வெளிச்சம் போட்டு காட்டிய படம். பொட்டல் காட்டில் வாத்தியாராக மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் விமல். இந்தப் படத்துக்காக 2011- ஆம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை விமல் வென்றார்.
ஜீவா (நீதானே என் பொன் வசந்தம் – 2012)
இசைஞானி இளையராஜாவின் இசையில், கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சந்தனம் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான படம் நீதானே என் பொன் வசந்தம். பள்ளிப் பருவத்தில் இருந்தே தொடங்கும் காதல் பிறகு ஈகோ பிரச்சனையால் உடைந்து, பின்னர் இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது தான் மீதிக்கதை.
ஆர்யா (ராஜா ராணி – 2013)
காதல் தோல்விக்கு பின் ஒரு அழகான வாழ்க்கை இருப்பதை மிக கச்சிதமாக திரையில் காட்டியிருப்பார் இயக்குநர் அட்லி. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என இரு காதல் ஜோடிகளுமே அவர்களது கேரக்டரில் பொருந்தியிருப்பார்கள். இந்தப் படத்துக்காக 2013 ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை ஆர்யா பெற்றுக்கொண்டார்.
சித்தார்த் (காவியத் தலைவன் – 2014)
ஜெய மோகனின் கதை வசனத்தில் ஒரு நாடாகக் குழுவில் நடக்கும் மோதல், அவர்களின் கலை சார்ந்த உழைப்பு என பல பரிமாணங்களில் தமிழ் சினிமாவில் ஒரு இலக்கிய படைப்பை உருவாக்கி இருப்பார் வசந்த பாலன். இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் சித்தார்த், 2014-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை வென்றார்.