குணச்சித்திர வேடங்கள், காமெடி ரோல்களில் நடித்து வந்த கே.ஆர்.ரங்கம்மாள் என்கிற ரங்கம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. எம்.ஜி.ஆர் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அவரின் கடைசி காலம் வறுமை நிறைந்தது.
ரங்கம்மாள் பாட்டி
கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் என்கிற கிரமாம்தான் ரங்கம்மாள் பாட்டியின் பூர்வீகம். இவர், தனது 30 வயதில் கணவரை இழந்த நிலையில், சென்னையில் பிழைப்புத் தேடி குடிபுகுந்தார். அப்போது, எம்.ஜி.ஆரிடம் படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்ட நிலையில் அவர் நடித்த விவசாயி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், வடிவேலு, விவேக் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து புகழ்பெற்றவர். குணச்சித்திர மற்றும் காமெடி ரோல்களில் நடித்த இவர், வடிவேலுவுடன் நடித்த பல காமெடி சீன்கள் பிரபலமானவை. `போறதுதான் போற… இந்த நாயை சூனு சொல்லிட்டு போ’ என்கிற இவரது டயலாக் மிகப்பெரிய மீம் டெம்ப்ளேட். தமிழ், தெலுங்கு, இந்தி என 50 ஆண்டுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரங்கம்மாள் பாட்டியின் இறுதிக் காலத்தில், அவரை வறுமை சூழ்ந்தது.
வாட்டிய வறுமை
ஒன்பது ஆண் குழந்தைகளைப் பெற்றபோதும், கடைசி காலத்தில் பிள்ளைகள் அவரைக் கைவிட்டுவிட்டனர். சினிமா வாய்ப்புகளும் சரிவர இல்லாத நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் கைவினைப் பொருட்கள், கர்ச்சீப் விற்று வந்தார். பெஃப்சியின் கீழ் வரும் ஜூனியர் ஆர்டிஸ் அசோசேஷியன் உறுப்பினரான அவருக்கு ரூ.5,000 உதவித் தொகையைக் கடந்த 2018-ல் நடிகர் சங்கம் வழங்கியது. உடல் நலன் குன்றிய நிலையில், கோவை அன்னூரை அடுத்த தெலுங்குபாளையம் கிராமத்துக்கே சில மாதங்களுக்கு முன்னர் அவர் திரும்பினார்.
உறவினர் ஒருவரின் இடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் மறைக்கப்பட்ட சிறிய வீடு ஒன்றில் கடந்த சில மாதங்களாகத் தங்கி, உடல் நலக்குறைவுக்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்த அவரை குட்டி அம்மா பாட்டி என்றே செல்லமாகவே அழைப்பார்களாம். அவரது வறுமை நிலைக்குத் திரைத்துறையைச் சார்ந்த யாரும் உதவி செய்யாதது சோகம். இந்தநிலையில், உடல் நலக்குறைவால் சொந்த ஊரில் ரங்கம்மாள் பாட்டி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடக்க இருக்கிறது.
Also Read – #RussiaUkraineWar: மக்களை கண்கலங்க வைத்த 3 வயது சிறுவனின் பாடல்!