சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜூன் 19-ல் கடையைக் கூடுதல் நேரம் திறந்து வைத்திருந்ததாகக் கூறி காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் நிலையில், தந்தை – மகன் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதேபோல், மனித உரிமைகள் ஆணையம் சார்பில் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்குப் பதிந்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவர்கள் தவிர, சம்பவம் நடந்தபோது காவல்நிலையத்தில் பணியிலிருந்து எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சாமதுரை ஆகிய 5 போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Also Read : கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள்: ஒரே மாதத்தில் 15 இடங்களில் கொள்ளை – போலீஸில் சிக்கியது எப்படி?
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு!
சாத்தான்குளம் தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்திருந்தது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், “எங்களது விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழக்கவில்லை. சிறையில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஏற்பட்ட இதயப் பிரச்னை மற்றும் வீசிங் எனப்படும் மூச்சுவிடுதலில் சிரமம் காரணமாகவே அவர்கள் உயிரிழந்தனர்’’ என்று வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியென்றால் போலீஸ் கஸ்டடியில் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது ஏன்…. அவர்கள் ஏன் உடனடியாக விடுவிக்கப்படவில்லை. அவர்களது உடலில் ரத்த காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
மேலும், இதுபோன்ற சூழலில் நாங்கள் ஜாமீன் வழங்க விரும்பவில்லை. காரணம், அந்தக் காவல்நிலையத்திலேயே பணிபுரிந்த இரண்டு பெண் காவல் அதிகாரிகள், தங்களது உயரதிகாரிகளான ஸ்ரீதர், ரகு கணேஷ் ஆகியோருக்கு எதிராக சாட்சியம் அளித்திருக்கிறார்கள் என்று தெரிவித்தனர். அந்தப் பெண் காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்படாத நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ஜெயராஜ் – பென்னிக்ஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. அந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் சூழலில் ஜாமீன் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்றும் கூறி நீதிபதிகள் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.