சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தி.மு.க முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் சிலை 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வரும் ஜூன் 3-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இது தேசிய அரசியலில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இல்லையென்றாலும், இரண்டு கட்சிகளுக்கும் ஒரு இணக்கமான போக்கை உருவாக்குவதற்கான யுக்தி என்றும் சொல்லப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல்
விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ளது. அதில், தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கய்ய நாயுடுவைத்தான் முன்னிறுத்த உள்ளது பாரதிய ஜனதாக் கட்சி. அது பாரதிய ஜனதா கட்சியின் விருப்பம் என்பதைவிட, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விருப்பமாக உள்ளது. அதில், இன்னும் பா.ஜ.க-வும், பிரதமர் மோடியும் இறுதி முடிவை எடுக்காத நிலையில், வெங்கய்ய நாயுடு அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார்.
எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் மட்டுமே வாக்களிக்கக் கூடிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற தி.மு.க-வின் ஆதரவு என்பதும் முக்கியமானது. ஒருவேளை, பா.ஜ.க எதிர்ப்பைப் பிரதானமாக கொண்டுள்ள தி.மு.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் மற்றொரு வேட்பாளரை முன்னிறுத்தினால், அது ஜனாதிபதி தேர்தலில் தேவையில்லாத சிக்கலை தனக்கு ஏற்படுத்தக் கூடும் என்று வெங்கய்ய நாயுடுவும் கருதுகிறார். அதேபோல், காங்கிரஸ் கட்சியை தி.மு.க, தங்கள் கூட்டணியில் வைத்திருப்பதுதான் தற்போது பி.ஜே.பி-க்கு பெரிய தொந்தரவாக உள்ளது. மற்றபடி, தி.மு.க-வின் கொள்கைகள், அதன் செயல்பாடுகள் எல்லாம் மத்தியில் பி.ஜே.பி-யின் செல்வாக்கிற்கோ… ஆட்சியை நடத்துவதற்கோ பெரிய நெருடலாக இல்லை. அவர்கள் தங்களுடன் தி.மு.க கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிடத்தான் அதிக நெருக்கடி கொடுக்கின்றனர். ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில், தற்போது, அதில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அந்தக் கட்சியின் டெல்லி முகங்களாக உள்ள டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்ட மற்ற எம்.பி-க்களும் தொடர்ந்து அதை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில்தான், மு.க.ஸ்டாலின் கலைஞர் சிலையை திறக்க வெங்கய்ய நாயுடுவை அழைத்துள்ளார். அவரும் வருகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தேசிய அளவில் தி.மு.க, காங்கிரஸ் உறவிலும், தமிழகத்தில், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான தி.மு.க-வின் உறவிலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுதான் தற்போதைய அரசியல் பார்வையாக உள்ளது.
Also Read – பேரறிவாளனிடம் எடப்பாடி சொன்ன தகவலும்… பின்னணியும்!