சாட்டை துரைமுருகன்

அவதூறு கருத்து; மிரட்டல் பேச்சால் கைது… யூடியூபர் `சாட்டை’ துரைமுருகன் சிக்கிய சர்ச்சைகள்!

நாகர்கோவில் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகனை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இருந்து கனிம வளங்களைக் கேரளாவுக்குக் கடத்தப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

`சாட்டை’ துரைமுருகன்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய யூ டியூபரும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளருமான சாட்டை துரைமுருகன், ஆவேசமாகப் பேசினார். ராஜீவ்காந்தி கொலை தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய அவர், தமிழக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து தக்கலை காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

இதையடுத்து, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்த அவரை நாங்குநேரியில் போலீஸார் தடுத்து நிறுத்தி நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர், அவர் பத்மநாபபுரம் ஜூடிஸியல் மாஜிஸ்திரேட் தீனதயாளன் முன்பு அதிகாலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 25-ம் தேதி நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

சர்ச்சை

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்த துரைமுருகன், சர்ச்சைப் பேச்சுகளால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர், அக்கட்சிக்கு ஆதரவாக யூ டியூபில் சாட்டை என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர், நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு. யூடியூபில் தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் இவர் சிக்குவதுண்டு. ஏற்கெனவே ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் வீடியோ பதிவு செய்து சர்ச்சையில் சிக்கியிருந்தார். அதேபோல், திருச்சி கே.கே.நகரில் செயல்படும் கார் மெக்கானிக் ஷாப்பின் உரிமையாளர் வினோத் என்பவரை மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை மணல் கடத்தலோடு தொடர்புபடுத்தி பேசியதாக மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று 55 நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர், இப்போது மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி கண்டனம்

கைது செய்யப்பட்ட துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக, அந்த கட்சியின் லெட்டர்பேட் நகல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம்வந்தது. ஆனால், இதை மறுத்திருக்கும் நாம் தமிழர் கட்சி, அவருக்கு எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும்போக்கோடு பொய்யாகக் குற்றம்சாட்டி, வழக்குப் புணைந்து சிறைப்படுத்தியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது.

நாம் தமிழர் கட்சி அறிக்கை
நாம் தமிழர் கட்சி அறிக்கை

`சாட்டை’ துரைமுருகனை தற்போதைய சூழலில் கட்சியை விட்டு நீக்கி, அவரைக் கைவிட்டதுபோல கட்சியின் கடிதத்தாளைப் போலியாக உருவாக்கி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியலாகும். இத்தருணத்தில் அவர் இவ்வழக்குகளிலிருந்து மீண்டு வரவும், சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாகத் துணை நிற்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read – பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் Vs டி.கே.எஸ்.இளங்கோவன் – தி.மு.க-வுக்குள் சலசலப்பு… என்ன நடந்தது?

21 thoughts on “அவதூறு கருத்து; மிரட்டல் பேச்சால் கைது… யூடியூபர் `சாட்டை’ துரைமுருகன் சிக்கிய சர்ச்சைகள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top