தமிழ்க் கடவுள் முருகனைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பழனியின் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகள் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு
முருகனின் இரண்டாம் படை வீடான பழனியில் முருகனைக் கொண்டாடும் வகையில் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.
உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நடைபெறும் விழாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கிவைக்கிறார். இந்தநிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவோடு உலகெங்கிலிருந்தும் சமய ஆன்றோர்கள், சான்றோர்களுடன் பெருந்திரளாக பக்தர்களும் கலந்துகொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இதில் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து முருக பக்தர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் நோக்கம் என்ன?
- முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல்.
- முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல் .
- மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல்.
- முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல்.
- அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் சிறப்பம்சங்கள்
இவ்விழாவில் பல்வேறு அரங்குகள் அமைகின்றன. குறிப்பாக, விழாவில் கலைநிகழ் அரங்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், கந்தன் புகழ் பேசும் கண்காட்சி, மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் மற்றும் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு பந்தல் அமைக்கப்பட உள்ளது.
இம்மாநாட்டில் முருகனடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமயச் சொற்பொழிவாளர், திருப்பணி மேற்கொண்டவர்கள், திருக்கோயிலுக்குத் தொண்டு புரிந்தோர், ஆன்மிக இலக்கிய படைப்பாளிகள் ஆகிய பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு, முருக வழிபாட்டுச் சான்றோர் திருப்பெயரில் விருதுகள் வழங்கப்பெறும்.
ஆய்வரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குத் தனியே விருதும் வழங்கப்பட உள்ளது. கருத்தரங்கங்களோடு 3டி வடிவில் முருகனைத் தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மாநாட்டினை நேரில் கண்டுகளிக்க முடியாத பக்தர்கள் இணைய வழியில் நேரடி ஒளிபரப்பில் முருகன் மாநாட்டைக் கண்டுகளிக்கலாம் என்று இந்து சமய அறநிலை தெரிவித்திருக்கிறது.
Also Read – வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம்… நேரம், பூஜை செய்யும் முறை!
Program iz For the reason that the admin of this site is working, no uncertainty very quickly it will be renowned, due to its quality contents.