பொதுவாக விஜய் கேட்கும்போது எந்தவொரு சிறு ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாகக் கேட்டுமுடித்துவிட்டு, பிடித்திருந்தால் பண்ணாலாம்ணா’ என ஒரே வார்த்தையில் ஓகே செய்துவிடுவார். அப்படி அவர் ஓகே செய்து நடிக்க ஒப்புக்கொண்டு ஷூட்டிங் வந்துவிட்டால், அதன்பிறகு அவரிடமிருந்து எந்த குறுக்கீடும் இருக்காது.
குஷி’ காலத்திலிருந்தே விஜய் கடைபிடித்துவரும் பழக்கம் இது. ஆனால் அப்படிப்பட்ட விஜய், இயக்குநர் விக்ரமனின் `உன்னை நினைத்து’ படத்துக்குமட்டும் ஒருவாரத்துக்கும்மேல் ஷூட்டிங்போய் அந்தப் படத்திலிருந்து விலகியிருக்கிறார். இதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, விஜய் இப்படி செய்திடாத நிலையில் இந்தப் படத்திற்கு மட்டும் ஏன் செய்தார்..?
விஜய்யின் இப்போதைய கரியருக்கு அஸ்திவாரமாக அமைந்த அவரது முதல் ஓப்பன் ஹிட் படமென்றால் அது, 1996-ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக’ படம்தான். இந்தப் படத்தின் இயக்குநர் விக்ரமன், 2002-இல் மீண்டும் விஜய்யை சந்தித்து,
உன்னை நினைத்து’ படத்தின் கதையை சொல்கிறார். கதையைக் கேட்டு, அதிலிருக்கும் சென்டிமென்ட் காட்சிகளில் லயித்துப்போன விஜய், அந்தக் கதையில் உடனே நடிக்கவும் சம்மதம் தெரிவித்தார். ஷூட்டிங் போவதற்கான வேலைகளும் தொடங்கியது. முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக லைலா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஷூட்டிங்கும் ஆரம்பிக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களில் `என்னைத் தாலாட்டும் சங்கீதம்’ பாடல் மாண்டேஜ்கள்தான் படமாக்கப்பட்டது. அதன்பிறகு படத்தின் டாக்கி போர்ஷன்ஸ் எனப்படும் வசனக் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் கதைப்படி இரண்டாவது பாதியில், ஹீரோ செய்த உதவிகளை மறந்துவிட்டு ஹீரோயின் குடும்பத்தினர் ஹீரோவை புறக்கணிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்தக் காட்சிகள் எடுக்கும்போதுதான் விஜய்க்கு ஏதோ ஒன்று ஸ்பார்க் ஆகியிருக்கிறது. மேலும் அதையொட்டி கிளைமேக்ஸிலும் அவருக்கு சந்தேகம் தோன்றியிருக்கிறது. அதாவது விஜய் அப்போது தமிழன்’,
பகவதி’ போன்ற படங்களில் நடித்து ஒரு முழு ஆக்ஷன் ஹீரோவாக மாறுவதற்கான திட்டத்தில் இருந்த நேரம் அது. அந்த நேரத்தில் `உன்னை நினைத்து’ படத்தின் காட்சிகள், கதையாக கேட்டபோது இருந்ததைவிட படமாக்கும்போது மிகவும் சென்டிமென்ட் நிறைந்து இருந்து, முழுக்க முழுக்க உணர்வுப்போராட்டமாக மட்டுமே இருப்பது தனது கரியரின் போக்குக்கு ஒத்துவருமா என்பதுதான் விஜய்யின் சந்தேகம். உடனே விக்ரமனை சந்தித்து தன்னுடைய தயக்கத்தைத் தெரிவித்து, கிளைமேக்ஸையும் கிளைமேக்ஸூக்கு முந்தைய சில காட்சிகளையும் மாற்றியமைக்க வாய்ப்பிருக்கிறதா எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், அந்த கதைப்போக்கில் மிகவும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த இயக்குநர் விக்ரமன், நீங்க சொல்றது சரிதான் விஜய். ஆனா இந்த கிளைமேக்ஸ்தான் இதுல பெஸ்ட் ஏரியா.. உங்களுக்காக இதை நான் மாத்துனா என்னோட கான்ஃபிடெண்ட் குறைஞ்சிடும். ஒருவேளை இதுக்கப்புறம் நீங்க கன்வின்ஸாகி நடிச்சாலும் அதுல உங்களுக்கும் ஒரு இன்வால்வ்மெண்ட் இருக்காது. அதனால பின்னாடி பிரச்சனைகள் வரலாம். இதுவரைக்கும் பத்து நாள் ஷூட்டிங்க்தான் முடிஞ்சிருக்கு. அதனால நாம இப்போவே நண்பர்களா இந்தப் படத்திலேர்ந்து விலகிடலாம். நான் வேற ஹீரோவை வெச்சு எடுத்துக்கிறேன். இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல’ என சொல்லியிருக்கிறார். இதுதான்உன்னை நினைத்து’ படத்திலிருந்து விஜய் விலகியதன் பின்னணி.
அதன்பிறகு விக்ரமன் அந்தப் படத்தில் பிரசாந்தை அணுகி, அவர் கால்ஷீட் கிடைக்காமல்போக பிறகு சூர்யாவை வைத்து எடுத்து ரிலீஸ் செய்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதேசமயம் தோல்வியையும் அடையவில்லையென்றாலும் படத்தைப் பார்த்தவர்கள் இது நிச்சயம் விஜய்க்கான கதை இல்லை என்பதையும் விஜய் இந்தப் படத்திலிருந்து விலகியது சரிதான் என்றும் ஒப்புக்கொண்டார்கள். அதுதான் விஜய்.