பாரதிராஜா இயக்கத்தில் டபுள் ஆக்சன் ரோலில் கமல் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியவர் பாக்யராஜ். ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வரலாறு காணாத வெற்றிக்குப் பிறகு நிற்கக்கூட நேரம் இல்லாமல் ஒடிக்கொண்டிருந்த பாக்யராஜ், ஒரு இக்கட்டான சூழலிலிருந்த தன் குருவுக்காக தக்க சமயத்தில் செய்த கைமாறுதான் ‘ஒரு கைதியின் டைரி’. என்ன நடந்தது..? பார்க்கலாம்.
தொடர் வெற்றியில் இருந்த பாக்யராஜூக்கு ‘முந்தானை முடிச்சு’ படம் டபுள் டிரிபிள் ஹிட்டாக அமைந்து மிக பரபரப்பாக பேசப்பட்ட நேரம் அது. அதே காலகட்டத்தில்தான் பாக்யராஜின் முதல் மனைவியான பிரவீனா நோய்வாய்ப்பட்டு காலமாகிப்போயிருந்ததும். இதனால் மன உளைச்சலுக்குள்ளான பாக்யராஜ் அதிலிருந்து வெளியில் வருவதற்காக தன்னுடைய டீமை அழைத்துக்கொண்டு கோவா, மும்பை என ஒரு டிரிப் அடித்திருக்கிறார். அப்போது மும்பையில் ஒரு ஹோட்டலில் தங்கச் சென்றிருக்கிறார் பாக்யராஜ்.
அதே ஹோட்டலில் தனது குருநாதர் பாரதிராஜாவும் தங்கியிருப்பதை அறிந்து உடனே அவரைப் போய் பார்த்திருக்கிறார் பாக்யராஜ். இவர் போய் பார்க்கும்போது தனி ஆளாக மிகவும் சோகமாக அமர்ந்திருக்கிறார் பாரதிராஜா. இதைப்பார்த்து ஷாக் ஆகிப்போன பாக்யராஜ், என்னவென்று விசாரிக்க அவர் நடந்தவற்றை சொல்லியிருக்கிறார். அதாவது கதாசிரியர் ஒருவரிடமிருந்து கதையொன்றைப் பெற்ற பாரதிராஜா அதை கமல் நடிப்பில் ‘டாப் டக்கர்’ எனத் தலைப்பிட்டு ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார். ஆனால் படம் வளர, வளர அது ‘சிகப்பு ரோஜாக்கள்’ பட பாணியிலேயே இருப்பதாக உணர்ந்த கமல், மேற்கொண்டு அந்தப் படத்தைத் தொடராமல் உடனே நிறுத்தச் சொல்லியிருக்கிறார். இதனால் இவருக்கும் கமலுக்கும் இடையே சில மனவருத்தங்களும் ஏற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து தன்னுடைய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை ஹிந்தியில் தர்மேந்திரா மகனை ஹீரோவாக வைத்து இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார். எல்லாம் ஓகேவாகி சரியாக ஷூட்டிங் போவதற்கு முன்பு, தமிழ் வெர்சனைப் பார்த்த தர்மேந்திரா, ‘என் பையன் இமேஜுக்கு இந்த படம் செட்டாகாது, கழுதையில போகுறமாதிரிலாம் நடிக்கமாட்டான்’ என சொல்லி அன்றே படத்தை டிராப் செய்திருக்கிறார். இவையெல்லாம்தான் பாரதிராஜா அவ்வாறு சோகமாக அமர்ந்திருந்ததற்கு காரணங்கள்.
உடனே பாக்யராஜ், ‘சார் ஃபீல் பண்ணாதீங்க. நீங்க உடனே சென்னை கிளம்பிப்போங்க. நான் இன்னும் ரெண்டு நாள்ல ஆபிஸுக்கு வர்றேன். நாம புதுசா டிஸ்கஸ் பண்ணி கதை பண்ணுவோம்’ என்றிருக்கிறார். ‘யோவ் நீயே நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்க, நீ எங்கய்யா என் கதை டிஸ்கஷனுக்கு வரப்போற..’ என சந்தேகத்துடன் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா. ஆனால் சொன்னபடியே பாக்யராஜ் அடுத்த இரண்டு நாட்களில் பாரதிராஜா அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். இவர் வந்திருக்கிறார் எனத் தெரிந்ததும் அந்த தெரு முழுக்க ரசிகர்கள் கூட்டம் வேறு மொய்க்கத் தொடங்கியிருக்கிறது. அவரை பார்த்ததும் பாரதிராஜா கட்டியணைத்து ‘சொன்னபடி வந்துட்டியேய்யா’ என மிகவும் நெகிழ்ந்துபோயிருக்கிறார்.
அதன்படி அன்று, ஒரே இரவில் பாக்யராஜ் ஒரு ஒன்லைனை ரெடி செய்தார். மறுநாள் பாரதிராஜாவை அழைத்து அந்த ஒன்லைனை சொல்ல, ‘யோவ் அருமையா இருக்குய்யா’ என பாராட்டியிருக்கிறார். உடனே கமலை அழைத்து பாரதிராஜா இந்த ஒன்லைனை சொல்ல ஆரம்பிப்பதற்குள்ளாகவே கமல், ‘நீங்க எதுவும் சொல்லவேணாம். ஒற்றர்கள் மூலமா எனக்கு தகவல் வந்துடுச்சு. பாக்யராஜ் கதைன்னா நான் கதையே கேக்கலை. எப்போ ஷூட்டிங்னு சொல்லுங்க வந்துடுறேன்’ என்றிருக்கிறார். சந்தோஷமாகிப்போன பாரதிராஜா, மளமளவென ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார். இப்படி உருவான படம்தான் ‘ஒரு கைதியின் டைரி’. பின்னாளில் பாக்யராஜ் இந்தக் கதையை ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் ‘ஆக்ரி ரஸ்தா’ என்ற பெயரில் படமாக்கி ஹிந்தியிலும் மாபெரும் வெற்றியை ருசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : கோவில்பட்டி: கட்டணம் செலுத்தாத பெற்றோரைத் தனி அறையில் அடைத்து வைத்த பள்ளி நிர்வாகம்… என்ன நடந்தது?