ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலில் ஒருமுறையாவது பயணித்து விட வேண்டும் என்று துடிப்பார்கள். காரணம், மெதுவாக மலையேறும் ரயிலில் அமர்ந்துகொண்டே இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணம் செய்வது அலாதி சுகமளிக்கக் கூடியது. யுனெஸ்கோவால் கடந்த 2005 ஜூலை 15-ல் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் பற்றிய 7 சுவாரஸ்ய தகவல்கள்.
- மேட்டூர் – குன்னூர் இடையிலான 27 கீ.மீ தூரத்துக்கு முதல்முறையாக 1899 ஜூன் 15-ல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. 1908-ல் குன்னூர் – ஊட்டி இடையிலான 19 கி.மீ தூர ரயில் பாதை ரூ.24.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.
- 1909 அக்டோபர் 15-ல் மேட்டுப்பாளையம் – ஊட்டிக்கு முதல்முறையாக சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால், ஆண்டுதோறும் அக்டோபர் 15-ம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இருக்கும் 46 கி.மீ ரயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள், 250 பாலங்கள் இருக்கின்றன.
- மேட்டுப்பாளையம் தொடங்கி ஊட்டி வரை கல்லார், ஹில்குரோவ், குன்னூர், வெலிங்டன் உள்ளிட்ட 13 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. மலை ஏறும்போது காலை 7.10-க்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில் கிட்டத்தட்ட 5 மணி நேரப் பயணத்தில் ஊட்டியை அடைகிறது. ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையிலான பயண நேரம் மூன்றரை மணி நேரம் (215 நிமிடங்கள்).
- கமல்ஹாசனின் மூன்றாம் பிறை படத்தில் லவ்டேல் ரயில் நிலையம் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். உயிரே படத்தில் ஷாருக்கான், மலைகா அரோரா ஆடும் சய்ய சய்ய பாடல் மலைரயிலில் படமாக்கப்பட்டது. மலையாளப் படமான சம்மர் இன் பெத்லஹேம் படத்தில் கேட்டி ரயில் நிலையம் இடம்பெற்றிருக்கும். இதுதவிர, வெலிங்டன் ராணுவ முகாமை ஒட்டி ராணுவ வீரர்கள் பற்றிய படங்களிலும், தமிழ், இந்தி, மலையாளப் படங்களிலும் மலை ரயில், ரயில்நிலையங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
- பிரபல அனிமேஷன் படமான Thomas & Friends: The Great Race’ படத்தில் இடம்பெறும் `Ashima‘ கேரக்டர் நீலகிரி மலை ரயிலின் நீராவி இன்ஜினை முன்மாதிரியாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டது.
- இந்திய மலை ரயில்கள் பற்றி 2010-ல் பிபிசி தயாரித்த 3 ஆவணப்படங்களில், இரண்டாவது ஆவணப்படும் நீலகிரி மலை ரயில் பற்றியது (டார்ஜிலிங் – ஹிமாலயன் ரயில்வே, கல்கா – ஷிம்லா ரயில்வே மற்ற இரண்டு). இந்த ஆவணப்படங்கள் இங்கிலாந்தின் ராயல் டெலிவிஷன் சொசைட்டி விருதைக் கடந்த 2010 ஜூனில் வென்றன.
Also Read – விநாயகர் சதுர்த்தி 2021: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் – 7 சுவாரஸ்ய தகவல்கள்!
1E5TMy21DM2cR13sQbLukgKBkR3ZSaRbeB