சி.எஸ்.கே

IPL Final: கிளாசிக் டூப்ளஸிஸ்; `லார்ட்’ தாக்குர்; அசத்தல் ஜடேஜா – #CSKvKKR மேட்சின் 4 வாவ் மொமண்ட்ஸ்!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. #CSKvKKR

ஐபிஎல் இறுதிப் போட்டி

துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் பௌலிங்கைத் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் மாற்றம் எதுவுமின்றி இரண்டு அணிகளுமே களம்கண்டன. முதலில் பேட் செய்த சி.எஸ்.கே, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தாவால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சி.எஸ்.கே அணி, தோனி தலைமையில் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

CSKvKKR மேட்சின் 4 வாவ் மொமண்ட்ஸ்

கிளாசிக் டூப்ளஸிஸ்

டூப்ளசிஸ்
டூப்ளசிஸ்

நடப்பு ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே-வுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த ருத்துராஜ் கெய்க்வாட் – டூப்ளசிஸ் இந்த முறையும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை சேர்த்த இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 61 ஆக இருந்தபோது பிரிந்தது. கெய்க்வாட் 27 பந்துகளில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆரஞ்சு கேப்பை வெல்ல 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 10 ரன்கள் கூடுதலாகவே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூப்ளஸிஸ், சி.எஸ்.கே பெரிய ஸ்கோர் குவிக்க உதவினார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த டூப்ளஸிஸ் 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளோடு 86 ரன்கள் எடுத்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 16 மேட்சுகள் விளையாடியிருக்கும் கெய்க்வாட் (635), டூப்ளசிஸ் (633) ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சி.எஸ்.கே ஓபனர்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். மூன்றாவது இடத்தை பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் (13 மேட்சுகள் – 626 ரன்கள்) பிடித்தார். சி.எஸ்.கே தரப்பில் உத்தப்பா, 15 பந்துகளில் 31 ரன்களும், மொயின் அலி 20 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர்.

வெங்கடேஷ் – சுப்மன் கில் தொடக்கம்

வெங்கடேஷ் ஐயர் - சுப்மன் கில்
வெங்கடேஷ் ஐயர் – சுப்மன் கில்

193 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் – சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஹஸல்வுட் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் வெங்கடேஷ் ஐயர் பேட்டில் பட்டு எட்ஜான பந்து தோனி கையிலிருந்து நழுவியது. அப்போது வெங்கடேஷ் எடுத்திருந்த ரன் 0. கோப்பையையே தோனி கை நழுவவிட்டாரா என்று ரசிகர்கள் ஆதங்கப்படும் வகையில், அடுத்த 9 ஓவர்களில் கொல்கத்தா வீரர்கள் அதகளம் செய்தனர். சிக்ஸர், பவுண்டரிகளாக சி.எஸ்.கே பந்துவீச்சை சிதறடித்த வெங்கடேஷ், 31 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். இந்த சீசனில் அவரது நான்காவது அரைசதம் இதுவாகும். முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜா வீசிய 10-வது ஓவரின் மூன்றாவது பந்தை சுப்மன் கில் தூக்கியடிக்க, கேமரா ஒயரில் பட்டு ராயுடு கையில் கேட்சானது. ஆனால், ஒயரில் பட்டதால், அந்த பந்து டெட்பாலாக அறிவிக்கப்பட்டது சி.எஸ்.கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

`லார்ட்’ தாக்குர்

ஷ்ரதுல் தாக்குர்
ஷ்ரதுல் தாக்குர்

முதல் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் தவித்த சி.எஸ்.கே-வுக்கு 11 ஓவரில் இரட்டை சர்ப்ரைஸ் கொடுத்தார் ரசிகர்களால் `லார்ட்’ என்றழைக்கப்படும் ஷ்ரதுல் தாக்குர். அவர் வீசிய 4 பந்தில் அரைசதம் அடித்திருந்த தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் கடைசி பந்தில் நிதிஷ் ராணா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி சி.எஸ்.கே-வுக்கு நம்பிக்கை கொடுத்தார். கொல்கத்தா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

அசத்தல் ஜடேஜா

ஜடேஜா
ஜடேஜா

ஷ்ரதுல் தாக்குர் ஓவரில் வெங்கடேஷ் ஐயர், ஹஸல்வுட் வீசிய அடுத்த ஓவரில் சுனில் நரேன் ஆகியோரை அசத்தல் கேட்சால் வெளியேற்றினார் ஜடேஜா. 11-வது ஓவர் வரை 9-க்கு மேல் இருந்த கொல்கத்தா ரன்ரேட் விக்கெட் வீழ்ச்சியால் மெதுவாக சரியத் தொடங்கியது. மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த சுப்மன் கில், தீபக் சஹார் வீசிய 14-வது ஓவரில் வெளியேறினார். ஐபிஎல் தொடரில் பொதுவாக பவர் பிளே, டெத் ஓவர்களை வீசும் தீபக் சஹார், 14-வது ஓவரை வீசுவது இது இரண்டாவது முறை. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து மிரட்டினாலும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. தினேஷ் கார்த்திக், ஷகிப் உல் ஹசன் என இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. கொல்கத்தா அணிக்குக் கடந்த போட்டியில் வெற்றி தேடித் தந்த திரிபாதி, 8 பேட்ஸ்மேனாகக் களமிறங்கினார். தேவைப்படும் ரன் ரேட் ஜெட் வேகத்தில் எகிற, கொல்கத்தாவால் கடைசிவரை வீழ்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. கொல்கத்தா அணியால், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சி.எஸ்.கே, தோனி தலைமையில் நான்காவது முறையாக ஐபிஎல் தொடரில் மகுடம் சூடியது.

சுவாரஸ்யங்கள்

தோனி
தோனி
  • தோனிக்கு கேப்டனாக இது 300-வது டி20 போட்டியாகும். அதேபோல், ஜடேஜா தனது 200-வது ஐபிஎல் போட்டியிலும், டூப்ளசிஸ் 100-வது ஐபிஎல் போட்டியிலும் களமிறங்கினர்.
  • டி20 தொடர்களில் அதிக டைட்டில் வென்றவர்கள் பட்டியலில் கடந்தமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பொல்லார்டு (15 சாம்பியன் பட்டங்கள்), 14 சாம்பியன் பட்டங்களை வென்றிருந்த சி.எஸ்.கே வீரர் டிவைன் பிராவோவின் சாதனையை முந்தியிருந்தார். இந்த முறை கரீபியன் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த பிராவோ, ஐபிஎல் கோப்பையோடு சேர்த்து 16 பட்டங்களோடு பொல்லார்டை முந்தியிருக்கிறார்.
  • கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியில் இருந்த ராபின் உத்தப்பா, இந்தமுறை சி.எஸ்.கே அணியில் இருந்து கோப்பையை வென்றிருக்கிறார்.
  • ஐபிஎல் கோப்பையை வெல்லும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை சி.எஸ்.கே-வின் மொயின் அலி பெற்றார்.

Also Read – MS Dhoni: `சென்னையில்தான் கடைசி போட்டி’ – ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு குறித்து தோனி சூசகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top