போரினால் வாழ்க்கையை இழந்த லாங் – யார் இவர்?

ஒரு போர் என்ன செய்யும்? – இந்தக் கேள்வியை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. போர் நாம் நினைத்து பார்க்க முடியாத விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தும். இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்றும் போர்கள் நடந்துகொண்டிருக்கும் நாடுகளும் இதற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இந்த நிலையில், இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக ஹோ வான் லாங்கின் வாழ்க்கை உள்ளது. யார் இந்த ஹோ வான் லாங்? போரினால் இவரது வாழ்க்கை எப்படி மாறியது? இதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம்!

உலகில் பெரும்பான்மையான மக்கள் வாழும் சாதாரண வாழ்க்கையைப் போலதான் வியட்நாமில் ஹோ வான் லாங்கின் குடும்பத்தினரும் வாழ்ந்து வந்தனர். ஆனால், இவர்களின் வாழ்க்கையை 1972-ம் ஆண்டு நடந்த போரின் போது அமெரிக்கா எறிந்த ஒரு குண்டு மாற்றியது. வியட்நாம் போரின்போது அமெரிக்கா வீசிய குண்டு ஒன்றில் லாங்கின் உடன் பிறந்தவர்களும் அவரது தாயும் இறந்தனர். தனது அன்பிற்குரியவர்களை இழந்த இவர் இவரது மற்றொரு சகோதரர் மற்றும் லாங்கின் தந்தையுடன் Quang Ngai மாகாணத்தில் Tay Tra பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிக்குள் குடி பெயர்ந்துள்ளனர். லாங் மற்றும் அவரது சகோதரருக்கு விபரம் தெரியாத வயதில் அவரது தந்தை காடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கேயே தனது வாழ்நாள்களை கழித்து வந்துள்ளனர்.

வாழ்க்கையின் எந்த தேவைகளுக்காகவும் அவர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பவே இல்லை. போர் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாக அவர்கள் கருதியதால் வனப்பகுதியை விட்டு அவர்கள் வெளியேறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவர்கள் வனப்பகுதியில் குடில் அமைத்து தேன், பழங்கள், விலங்குகளை சப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். தங்களது வாழ்நாளில் ஐந்து முறை மட்டுமே அவர்கள் மனிதர்களை பார்த்துள்ளதாகவும் மனிதர்கள் மீது அதிகளவில் பயம் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மனிதர்களின் கண்ணில் பட்டால் இவர்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களை புகைப்படக் கலைஞர் ஆல்வாரோ செரெசோ பார்த்துள்ளார். வனப் பகுதிக்குள் அவர்களைத் தேடிச்சென்று அவர்களிடம் பேசியுள்ளார்.

வனப்பகுதிக்குள் இருந்து லாங்கினை கிராமம் ஒன்றுக்கு அழைத்து வந்து சாதாரண வாழ்க்கையை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்களைப் பற்றி ஆல்வாரோ பேசும்போது, “ஹோ வான் லாங்கின் தந்தை வியட்நாம் போர் முடிந்துவிட்டது என்பதை நம்பவில்லை. நகரத்துக்கு திரும்புவதற்கு அவருக்கு இன்னும் அச்சம் உள்ளது. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஹோ வான் லிங்குக்கு பெண்கள் என்ற பாலினம் இருப்பதே தெரியாமல் இருந்துள்ளது. லாங்கின் தந்தையும் இதுபற்றி அவரது மகன்களிடம் சொல்லவில்லை. லாங்கின் தந்தையின் உடல்நிலை மற்றும் மனநிலையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை அவர்களின் வாழ்க்கை நன்றாகவே இருந்துள்ளது. சமூகம் பற்றிய அடிப்படை புரிதல்கள் எதுவும் லாங்கிற்கு கிடையாது. நான் யாரையாவது அடிக்கக்கூறினால் உடனே அவர் அதனைச் செய்வார். நல்லது மற்றும் கெட்டது ஆகியவற்றுக்கான வித்தியாசம் எதுவும் அவருக்கு தெரியாது. அவர் குழந்தையைப் போன்றவர்” என்று தெரிவித்துள்ளார்.

லாங் தற்போது கிராமத்தில் பெண்களுடன் வசித்து வருகிறார். எனினும், ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கான வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு சிக்கல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். லாங்கிற்கு குழந்தையைப் போன்ற சென்ஸ் ஆஃப் ஹியூமர் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரை டார்சன் படத்தில் வரும் காதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பலரும் பேசி வருகின்றனர். இவருக்கு தற்போது 49 வயதாகிறது. சுமார் 41 ஆண்டுகளாக காட்டில் வசித்து வருகிறார். ஒரு போரினால் தனது வாழ்க்கையை இழந்து பெரும்பான்மையான ஆண்டுகளை காடுகளில் செலவழித்த லாங் தற்போது கிராமத்தில் சக மனிதர்களுடன் வாழ்ந்து வருகிறார்.

Also Read : டெல்டா பிளஸ் வைரஸ் என்றால் என்ன.. மூன்றாவது அலையை ஏற்படுத்துமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top