சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஐபிஎல் இரண்டாம் கட்டம்!
இந்தியாவில் கடந்த ஏப்ரலில் நடந்த ஐபிஎல் தொடரின்போது வீரர்கள், அணி நிர்வாகிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகள் இரண்டாவது கட்டமாக ஐக்கிய அரசு அமீரகத்தில் கடந்த 19-ல் தொடங்கியது. இரண்டாவது கட்டமாகப் போட்டிகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் 3 போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. நான்காவது போட்டியாக சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டி துபாய் மைதானத்தில் இன்று நடக்கிறது.
நடராஜன்
இந்தநிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், சன்ரைசர்ஸ் அணி வீரர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் இன்று காலை 5 மணியளவில் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், ஹைதராபாத் – டெல்லி இடையிலான இன்றைய போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஐபிஎல் தொடர் குறித்தும் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஐபிஎல் விளக்கம்
இந்தசூழலில், சன்ரைசர்ஸ் அணி நிலவரம் குறித்து ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக விளக்கமளித்திருக்கிறது. அதில்,`வழக்கமான ஆர்.டி-பிசிஆர் பரிசோதனையில் சன்ரைசர்ஸ் அணி வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அதேபோல், அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேரை மருத்துவக் குழுவினர் அடையாளம் கண்டு, அவர்களையும் தனிமைப்படுத்ததில் இருக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன்படி, விஜய் சங்கர், அணி மேலாளர் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷ்யாம் சுந்தர், மருத்துவர் அஞ்சனா வண்ணன், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜர் துஷார் கேத்கர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நெட் பௌலரான பெரியசாமி கணேசன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டிருகிறார்கள்.
அதேபோல், சன்ரைசர்ஸ் அணியில் இருக்கும் அனைவருக்கும் இன்று அதிகாலை 5 மணியளவில் ஆர்.டி – பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மற்ற யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. இதனால், துபாயில் இன்று திட்டமிட்டபடி ஹைதராபாத் – டெல்லி அணிகள் இடையிலான போட்டி நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Also Read – சி.எஸ்.கே-வின் 54 டாட்பால்; 7/3 டு வெற்றி – #CSKvMI மேட்ச்சின் 5 சுவாரஸ்யங்கள்!