மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று தனுசு ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.
தனுசு ராசி
முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசிக்கார்கள் ஆவர். ராசியின் அதிபதி குரு என்பதால் பணத்தின் பின்னால் ஓட மாட்டார்கள். நட்புக்கும் குணத்துக்கும் முக்கியத்துவம் தரும் இந்த ராசியின் குறியீடு வில் – அம்பு. தனுசு ராசிக்காரர்கள் மயிலாடுதுறை மாயூரநாதரை வழிபட்டால் வாழ்வில் சகல செல்வங்களும் பெறுவர். குடும்பத்தோடு மயூரநாதரை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால், எல்லாத் தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில்
காவிரிக் கரையில் காசிக்கு நிகராகக் கருதப்படும் 6 சிவாலயங்களுள் இந்தக் கோயிலும் ஒன்று. மூலவர் மாயூரநாதர் – அம்பாள் அபயாம்பிகை எனும் அஞ்சொல் நாயகியாவார். செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு காவிரியில் நீராடி சிவபெருமானை வழிப்பட்டு அருள் பெறலாம். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலம் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. கந்த சஷ்டியின் போது முருகன் அம்பாளிடம் வேல் வாங்குவது வழக்கம். ஆனால், இந்தத் தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது மிகவும் சிறப்பான நிகழ்வாகும். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடக்கும் துலா நீடாரல், கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் நடக்கும் முடவன் முழுக்கு ஆகியவை பிரசித்தி பெற்றவை. அதேபோல், வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவமும், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியில் லட்சதீப நாளிலும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகை புரிகின்றனர். சிவபெருமான் மயில் வடிவத்தில் அருள் புரிந்ததால் மாயூரநாதராகிறார். நடனம் பயில்பவர்கள் இங்கு சிறப்பு வேண்டுதல்களைச் செய்கின்றனர். தனுசு ராசிக்காரர்கள் காவிரியில் நீராடி மாயூரநாதரை வழிபட்டால் சகல செல்வங்களும் கிட்டும்.
Also Read – Rasi Temples: விருச்சிக ராசியின் அதிபதி யார்… கட்டாயம் வழிபட வேண்டிய கோயில் எது?
எப்படிப் போவது?
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மயிலாடுதுறை மாவட்டத் தலைநகரான மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் மாயூரநாதர் சுவாமி கோயில் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில், பேருந்து போக்குவரத்து வசதி இருக்கிறது. டெல்டாவின் முக்கிய நகரங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கும்பகோணம் நகரங்களில் இருந்து தொடர்ச்சியாகப் பேருந்து வசதி இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து 36 கி.மீ தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 77 கி.மீ தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து 59 கி.மீ தூரத்திலும் திருவாரூரில் இருந்து 41 கி.மீ தொலைவிலும் மயிலாடுதுறை அமைந்திருக்கிறது. சென்னையில் இருந்து நேரடியாகப் பேருந்து, ரயிலில் செல்ல முடியும். கோயில் அருகிலேயே தங்கும் விடுதிகளும் குறைவான கட்டணத்தில் அமைந்திருக்கின்றன.
மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்
- வைத்தீஸ்வரன் கோயில்
- சீர்காழி சட்டுநாத சுவாமி ஆலயம்
- அனந்தமங்கலம் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில்
- திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
- கும்பகோணத்தில் இருக்கும் கோயில்கள்.