கம்போடியா நாட்டின் பாதுகாப்புக்காக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகளில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இதனால், அந்த கண்ணிவெடிகளை அகற்ற கம்போடியா அரசு முடிவு செய்தது. கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கருதிய அதிகாரிகள் கண்ணி வெடிகளை அகற்ற எலிகளைப் பயன்படுத்த முடிவு செய்தனர். கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் மகாவா என்ற எலி சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றி சுமார் 71 கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளது.
மகாவா எலியின் சிறப்பான பணியைப் பாராட்டும் விதமாக இங்கிலாந்தில் உள்ள விலங்குகள் நல அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியது. இந்த விலங்கு நல அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்றுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது இதுவே முதன்முறை. நாய்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தற்போது மகாவா எலிக்கு ஓய்வு அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மகாவா எலிக்குப் பதிலாக புதிய எலிகள் கொண்ட குழு கண்ணி வெடிகளை அடையாளம் காண நியமிக்கப்பட்டுள்ளது. எலிகளுக்கு கண்ணி வெடிகளை அடையாளம் காணும் பயிற்சியை அபோபோ என்ற நிறுவனம் வழங்கி வருகிறது.
தான்சான்யாவில் இருந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க எலிகள் கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்டு தீவிரமாக பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டு கண்ணி வெடிகளை கண்டுபிடிக்க தயார் செய்யப்பட்டுள்ளன. மோப்ப சக்தியின் மூலம் இந்த எலிகள் கண்ணி வெடிகளை அடையாளம் காண்கின்றன. இந்த எலிகளுக்கு பயிற்சி அளித்து வரும் சோ மேலென் என்பவர் இதுதொடர்பாக பேசும்போது, “எலிகள் அனைத்தும் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. அவைகள் யார் பயிற்சியாளர்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவது இல்லை. தங்களது பணிகளை சிறப்பாக செய்கின்றன” என்று தெரிவித்துள்ளார். அபோபோ அறக்கட்டளை இதுதொடர்பாக பேசும்போது, “மகாவா எலியானது நல்ல உடல்நலத்துடன் இருந்தபோதிலும் அது ஓய்வு பெறும் வயதை எட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது அதிகாரிகள் ஆபரேஷன்களின்போது மகாவா எலியை நாங்கள் அதிகளவில் மிஸ் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
தான்சானியாவில் கடந்த 2014-ம் ஆண்டு மகாவா எலி பிறந்தது. பின்னர், 2016-ம் ஆண்டு கம்போடியாவின் வடமேற்கு நகரமான சீம் ரீப் பகுதிக்கு குடி பெயர்ந்தது. ஓய்வு பெற்ற பிறகும் மகாவா எலியானது அதே கூண்டில் வாழும் என்றும் அதே தினசரி பழக்கவழக்கங்களை கடைபிடிக்கும் என்றும் அபோபோ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் பணிக்காக வெளியில் செல்லாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை வழங்கப்பட்டு வந்த உணவுகள் அதற்கு வழங்கப்படும். விளையாட்டு நேரம், உடற்பயிற்சி நேரம் மற்றும் சுகாதார சோதனைகளும் மகாவா எலிக்கு வழக்கம்போல இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவா எலி பெரும்பாலும் ஃப்ரெஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் என அதனை பாதுகாப்பவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் புரத சத்து, வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்காகவும் சில உணவுகள் அதற்கு வழங்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
சுமார் 59 நாடுகளில் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நிலங்களில் இருக்கும் வெடிக்காத பொருள்களால் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டில் கண்ணிவெடிகள் மற்றும் போரின் பிற எச்சங்களால் 6,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Also Read : க்ளப் ஹவுஸ் மூலமா இவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்குமா?!