Vijayakanth

விஜயகாந்தை `வேண்டாம்’ சொல்லவைத்தது எது… அ.தி.மு.க – தே.மு.திக பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

அ.தி.மு.க-வுடன் மூன்று கட்டங்களாகத் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கூட்டணியிலிருந்து விலகுவதாக தே.மு.தி.க முடிவெடுத்தது ஏன்? கூட்டணிப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

அ.தி.மு.க , பா.ஜ.க கூட்டணியில் இருந்த விஜயகாந்தின் தே.மு.தி.க சார்பில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் வீட்டிக்கு நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தைக்கு தொடக்கப்புள்ளி வைத்தனர்.

ஆனால், அடுத்தடுத்த காட்சிகள்தான் தேமுதிகவை கோபப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். 2011ம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க, 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்றது. அந்தத் தேர்தலில் தி.மு.கவை விட அதிக இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.

தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

இந்தத் தேர்தலில் அதே அளவு தொகுதிகளை தே.மு.தி.க எதிர்பார்க்க, அதற்குத் தொடக்கத்திலேயே முடியாது என ஒரே வரியில் பதிலைச் சொல்லியிருக்கிறது அ.தி.மு.க. இதுதொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியிடம் தே.மு.தி.க துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசியிருக்கிறார். அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க தரப்பில் சரியான ரியாக்‌ஷன் இல்லை என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் ரியாக்‌ஷன்

உங்கள் கட்சி தமிழகத்தில் எங்குமே இல்லை. விஜயகாந்தும் உடல் நலமில்லாமல் இருக்கிறார். இந்தநிலையில், உங்கள் கட்சிக்கு என்ன பலமிருக்கிறது என்று நினைக்கிறீர்கள். உங்களுக்கு 9 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும்’ என சுதீஷிடம் எடப்பாடி பழனிசாமி கறார் காட்டியிருக்கிறார். அதற்கு,ஜெயலலிதாவையே நகர்த்தி தொகுதிகளை வாங்கியவர்கள் நாங்கள்’ என சுதீஷ் சொல்ல, எடப்பாடியை நகர்த்தி தொகுதிகளை வாங்க முடியாது’ என எடப்பாடி பழனிசாமி ரியாக்‌ஷன் காட்டியிருக்கிறார். இதை தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசிய எல்.கே.சுதீஷ்,அவரிடம் நான் 18 தொகுதிகளைக் கேட்டேன். வெகுநேரம் பேசிய பிறகு 13 தொகுதிகள் ஒதுக்குவதாகச் சொன்னார். அவர் பேசிய விதம் நம் கட்சியை அவமதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. எனவே, நாம் தனித்துப் போட்டியிடுவோம். அ.தி.மு.க கூட்டணியில் நாம் இல்லை. தி.மு.க-வும் கூட்டணிக்கு அழைக்கவில்லை’’ என்று கொட்டித் தீர்த்திருக்கிறார்.

`வேண்டாம்’ சொன்ன விஜயகாந்த்

அதன்பிறகு தே.மு.தி.க-வின் 78 மாவட்டச் செயலாளர்களிடமும் இதுகுறித்து கருத்துக் கேட்ட பின்னர் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகுவதாக அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. தொடக்கம் முதலே கூட்டணியில் பா.ம.க-வுக்குத் தான் அ.தி.மு.க முக்கியத்துவம் கொடுத்துவருவதாக அதிருப்தி எழுந்தது. இந்த விஷயத்தில் பா.ஜ.க-வுக்கே கொஞ்சம் வருத்தம்தான் என்கிறார்கள் தே.மு.தி.க தரப்பில். பா.ம.க தங்கள் கூட்டணியில் இருந்தால்தான் எடப்பாடி தொகுதியில் பழனிசாமியும் திருச்செங்கோடு தொகுதியில் தங்கமணியும் வெல்ல முடியும் என்று நினைக்கிறார்கள். தேர்தல் வெற்றி, கூட்டணியை விட இந்த இரண்டு தொகுதிகள்தான் அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது’ என்று தே.மு.தி.க முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கலாமா என்பது குறித்த ஆலோசனையின்போது,வேண்டாம்’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் விஜயகாந்த் உதிர்த்திருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top