மத்திய அரசின் புதிய விதியால் நாடு முழுவதும் 15 வருடங்களுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் 4 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் அழிக்கப்பட இருக்கின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பு உலக அளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வரும் நிலையில், மாற்று எரிசக்தியை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வருகின்றன. அதேபோல், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த பட்ஜெட் தாக்கலின்போது பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியானது.
மத்திய அரசின் புதிய விதியின்படி 20 ஆண்டுகளுக்கு மேல் புழக்கத்தில் இருக்கும் தனிநபர் பயன்படுத்தும் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேல் புழக்கத்தில் இருக்கும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் அழிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் வாகனங்கள் குறித்த கணக்கெடுப்பை மத்தியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் நடத்தியது. ஆந்திரா, தெலங்கானா மற்றும் லட்சத் தீவுகள் தவிர மற்ற மாநிலங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டிய 4 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. இதில், 2 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் 20 வருடத்துக்கும் மேலாக புழக்கத்தில் இருப்பவை. பழைய வாகனங்கள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பசுமை வரி என்ற புதிய வரி விதிப்பையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
எந்த மாநிலத்தில் அதிகம்?
தேசிய அளவில் 70 லட்சம் வாகனங்களோடு கர்நாடகா முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் பழைய வாகனங்கள் எண்ணிக்கை 33.43 லட்சம். மத்திய அரசின் புதிய கொள்கையின்படி இந்த வாகனங்கள் அழிக்கப்பட இருக்கின்றன.
இதுதவிர, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருக்கும் பழைய வாகனங்களின் எண்ணிக்கை 17.58 – 12.29 லட்சமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதேபோல், இந்த எண்ணிக்கை 1 – 5.44 லட்சம் என்ற அளவில் ஜார்க்கண்ட், உத்தராகண்ட், சத்தீஸ்கர் ஹிமாச்சலப்பிரதேசம், புதுச்சேரி, அசாம், பீகார், கோவா, திரிபுரா மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி, டையூ டாமன் ஆகிய பகுதிகளில் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழ் என்கிறது மத்திய அரசின் தரவு.