யார் இந்த சுகுமார குருப்?!

36 வருடங்கள்… 300-க்கும் அதிகமான போலீஸ் டிப் ஆஃப்ஸ்… ஆயிரத்துக்கும் அதிகமான பயணங்கள்… இது எல்லாம் ஒரே ஒரு ஆளுக்காக. அவரது பெயர் குருப்… சுகுமார குருப். 

ஒரு குட்டி க்ரைம் ஸ்டோரி :

ஜனவரி 22, 1984-ம் ஆண்டு விடியற்காலை கேராளவைச் சேர்ந்த குன்னம் என்ற கிராமத்து சாலையின் ஓரத்தில் கருகிய நிலையில் ஒரு கருப்பு கலர் அம்பாஸிடர் கார் எரிந்துகொண்டிருக்கிறது. எரிந்து முடிந்தபின் அதற்குள் ஓர் உடல் இருப்பதும் தெரிய வருகிறது. அதைப் பார்த்த ஊர் மக்கள் போலீஸாருக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்கின்றனர். ஊர் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட, போலீஸார் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தது. ஒரு தீப்பெட்டி, ஒரு ஜோடி செருப்பு, சில முடிகளுடன் கூடிய ரப்பர் கிளவுஸ் போன்ற பொருள்களையெல்லாம் போலீஸார் கண்டுபிடிக்கின்றனர். அந்த வாகனம் விபத்தால் எரிந்ததற்கான எந்த ஒரு சாட்சியும் இல்லாத நிலையில், இதைக் கொலை என முடிவு செய்து போலீஸார் விசாரணையைத் துவங்குகிறது. KLQ 7831 என்கிற அந்த காருக்குச் சொந்தக்காரர் சுகுமார குருப். Gulf-ல் வேலை செய்துகொண்டிருந்த குருப், 2 வாரங்களுக்கு முன்னர்தான் கேரளா வந்து சேர்ந்தார். காருக்குள் இருந்த உடல் கருகிய நிலையில் இருந்ததால் அது இன்னார்தான் என்பதை போலீஸாரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் இறந்தது குருப்தான் என்பதை போலீஸார் நம்பத் துவங்குகின்றனர். குருப்பின் உறவினர்களுக்கும் சொல்கின்றனர். குருப்பின் வீட்டைச் சேர்ந்தவர்களும் உடலின் எடையை வைத்தும், உயரத்தை வைத்தும் இறந்தது குருப்தான் என்பதை தீர்மானிக்கின்றனர். 38 வயதான குருப், இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. 

சுகுமார குருப் – Sukumara Kurup

சந்தேகம் :

குருப்பின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இவர் இறந்ததற்காக வருத்தப்படுவதாகவோ, அழுவதாகவோ தெரியவில்லை. குருப் இறந்த அன்று மதியமே அவரது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக கறி சோறு சாப்பிட்டுக்கொண்டு மிகவும் இயல்பாகவே இருக்கின்றனர் என்று போலீஸாரின் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இறந்த உடலை பிரேதப்பரிசோதனை செய்துள்ளனர். கார் விபத்து நடக்கும் முன்பே அவர் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டு அவரது முகம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்றும், குருப்பிற்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பதால் நுரையீரலில் அதற்கான எந்த சுவடும் இல்லை என்கிற அதிர்ச்சித் தகவல்களும் போலீஸாருக்குக் கிடைக்கிறது. அதன் பின்னர் போலீஸார் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளை அக்கம்பக்கம் உள்ள கிராமங்களில் விசாரிக்கத் தொடங்குகின்றனர். அதே நாளில் சாக்கோ என்கிற நபர் காணாமல் போயிருக்கிறார் என்பது போலீஸாருக்கு தெரியவருகிறது. இறந்த உடலுக்கும் சாக்கோவுக்கும் நிறைய ஒற்றுமை இருந்ததால் அந்த உடலானது சாக்கோவுடையதுதான் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவமானது கேரளா முழுக்க பரபரப்பாக பேசப்படுகிறது. இறந்தது குருப் இல்லையென்றால் அவர் எங்கே இருக்கிறார்… எதற்காக சாக்கோவைக் கொன்று இந்த போலி மரண நாடகம் அரங்கேற்றப்பட்டது, சாக்கோவுக்கும் குருப்பிற்கும் என்ன சம்பந்தம்… இப்படிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்ததன.

யார் இந்த குருப்?

இறந்ததாகக் கூறப்பட்ட சுகமார குருப்பின் நிஜப் பெயர் கோபாலகிருஷ்ண குருப். இவர் நடுத்தர வர்கத்தில் பிறந்து வளர்ந்தவர். அந்தக் காலத்திலேயே சொல்லிக்கொள்ளும்படியான படிப்பை முடித்துவிட்டு இந்திய விமானப்படையில் ஏர்மேனாக பணியாற்றத் தொடங்கினார். வேலை பார்க்க ஆரம்பித்த சில காலத்திலேயே அந்த வேலையானது இவருக்கு போர் அடிக்கத் தொடங்கியிருக்கிறது. அப்போது ஒரு போலீஸாரின் உதவியோடு தான் இறந்துவிட்டதாக பொய்யான ஒரு ரிப்போர்ட்டை ஏற்பாடு செய்து அதை இந்திய விமானப்படைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். அதன்பின்னர் சுகுமார குருப் என்கிற பெயரோடு Gulf நாட்டிற்கு பறக்கிறார். இதற்கு நடுவில் வீட்டை எதிர்த்து சரசம்மா என்பவரோடு ரகசிய திருமணம் செய்துகொள்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அவரது மனைவியான சரசம்மாவும் அபுதாபியில் செவிலியராக பணியாற்றத் தொடங்குகிறார். 

Kurup

குருப்பிற்கு நண்பர்கள் வட்டம் பெரிது. தனது நெருங்கிய நண்பர்களின் நெருக்கடியான நேரத்தில் பல உதவிகள் செய்ததால் குருப் மிகுந்த மரியாதையை சம்பாதித்து வைத்திருந்தார். செலவு செய்யவும் தயங்கவே மாட்டார். கேரளாவில் உள்ள தனது சொந்த ஊரில் ஒரு நிலம் வாங்கி சொந்த வீட்டுக்கான பணிகளையும் ஆரம்பித்தார். அதன் பின்னர் தான் பணியாற்றிய கம்பெனியில் பழைய ஆட்களை பணி நீக்கம் செய்துவிட்டு புதிய வேலையாட்களை மாற்றப்போவதாக சில வதந்திகள் பரவியது. பணத் தேவை அதிகம் இருப்பதால் குருப்பை சொந்தமாக தொழில் பார்க்குமாறு வலியுறுத்தினர் அவரது நண்பர்கள். அவர் மைண்ட் முழுக்க பணம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. இப்படியான ஒரு மனநிலையில் ஒரு ஆங்கில டிடெக்டிவ் பத்திரிக்கையில் சுவாரஸ்யமான கதை ஒன்றைப் படிக்கிறார். அதுதான் இவர் கேரளாவில் அரங்கேற்றிய நாடகம். இந்த நாடகத்துக்கு எல்லாம் பின்னணி என்னவென்றால் பெரிய அளவிலான காப்பீட்டுத் தொகை. அப்போது இருந்த பொருளாதார நிலவரத்தின்படி ஒரு டாலருக்கு இந்திய மதிப்பில் 10.74 ரூபாயாக இருந்தது. அங்கேயே தனது பெயரில் 75,000 டாலருக்கு காப்பீடு எடுத்து வைத்திருந்தார். அப்போதைய இந்திய மதிப்புக்கு 8 லட்சம் ரூபாய். `தான் செத்துவிட்டதாக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றினால் அந்தக் காப்பீட்டு தொகை நமக்குக் கிடைக்கும்’ என்பதுதான் குருப்பின் இந்த மாஸ்டர் ப்ளான்.

நடந்தது என்ன?

இந்த முடிவை எடுத்த பின்னர் தனது நெருங்கிய வட்டமான ஷாஹு, பொன்னப்பன், பாஸ்கர பிள்ளை ஆகியோர்களிடம் தனது மாஸ்டர் ப்ளானை சொல்கிறார். அவர்களும் இதை ஏற்று 1984-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கேரளா வந்து சேர்கின்றனர். போலி மரண நாடகத்தை அரங்கேற்ற முதலில் இவர்களுக்குத் தேவைப்படுவது குருப்பைப் போலவே ஓர் இறந்த உடல். இதற்காக சவக்கிடங்கில் விசாரிக்கின்றனர். முதல் முயற்சியே தோல்வி. சரி, கல்லறையில் இருக்கும் ஏதோவொரு பிணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கின்றனர். இரண்டாவது முயற்சியும் தோல்வி. `நாம் ஏன் சரியான ஆளைத் தேர்வு செய்து கொலை செய்யக்கூடாது’ என்கிற யோசனை குருப்பிற்குத் தோன்றுகிறது. அதையும் ஏற்று ஒரு பிச்சைக்காரரை தேர்வு செய்கின்றனர். ஆனால், அவர் எப்படியோ தப்பித்துவிட்டதால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிகிறது. மிகுந்த விரக்திக்கு ஆளாகிறார் குருப்.

Also Read

விஜய் ஹீரோயின்… 12 மில்லியன்… யார் இந்த பூஜா ஹெக்டே?

ஜனவரி 21, 1984 அன்று இரவு சாலையில் இவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது ஒருவர் லிஃப்ட் கேட்டார். அந்த ஆள் பார்ப்பதற்கு குருப்பை போலவே இருந்ததால் லிஃப்ட் கொடுக்க முடிவு செய்கின்றனர். பயணத்தின்போதே அவருக்கு சரக்கு கொடுக்கப்பட்டு அவரை மயக்கமடையச் செய்துவிட்டனர். பாதுகாப்பான ஒரு இடத்திற்குச் சென்று அவரது கழுத்தை நெரித்து அவரைக் கொல்கின்றனர். அதன் பின்னர் அவருடைய முகத்தை எரித்து அடையாளம் தெரியாதவாறு அவரை சிதைக்க முற்படுகின்றனர். அவரது ஆடையை நீக்கிவிட்டு குருப்பின் ஆடையை அவருக்கு உடுத்திவிடுகின்றனர். அடுத்ததாக அவரை டிரைவர் சீட்டில் அமர்த்தி சாலையோரம் இருந்த வயல் ஒன்றின் அருகே காரை நிறுத்தி, பெட்ரோலை ஊற்றி மொத்த காரையும் எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். போலீஸாரின் FIRல் இப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

Kurup – Dulquer Salman

Catch me if you can :

அதில் இருந்து போலீஸாரின் கண்களில் ஒரு முறை கூட அகப்படவில்லை குருப். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் குருப்பின் புகைப்படத்தை கொடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கினாலும் போலீஸாருக்குக் கிடைத்ததெல்லாம் ஏமாற்றம் மட்டுமே. இங்கு இருக்கிறார், அங்கு இருக்கிறார் எனத் தகவல்கள்தான் கிடைத்ததே தவிர இன்றுவரை அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டிய மோஸ்ட் வான்டென்ட் கிரிமினலாக குருப் மாறினார். உலக நாடு முழுவதும் தப்பியோடி தலைமறைவாகிய குற்றவாளிகள் பலர் உள்ளனர். இந்த லிஸ்டில் இந்தியாவைச் சேர்ந்த முதல் குற்றவாளியாக குருப் இடம்பெற்றார். இதன் பின்னர் 1993 மும்பை வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான சோட்டா ஷகீல், பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தாவூத் இப்ரஹிம், இக்லாக்யூ ஃபகீர் முகமது ஷேக், பத்ரேஷ்குமார் சேட்டன்பாய் பட்டேல் போன்றவர்கள் எல்லாம் குருப்புக்குப் பிறகுதான் இந்த லிஸ்டில் இடம்பெற்றனர். 1946-ல் பிறந்த இவர், தற்போது உயிரோடு இருந்தால் இவருக்கு 75 வயது ஆகியிருக்கும். `இனிமேல் நீ வயசுக்கு வந்தா என்ன வரலேன்னா…’ என்பதைப் போலத்தான் இவர் இனி பிடிபட்டால் என்ன பிடிபடவில்லையென்றால் என்ன. இவ்வளவு கிரிமினல் மைண்ட் உள்ள ஒரு ஆள் தனது மொத்த வாழ்க்கையையும் செமையாக வாழ்ந்திருப்பார். இவருடைய வாழ்க்கையை மையப்படுத்தி துல்கர் சல்மான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் படம் குருப். அதிலாவது முடிவு என்னவென்பதைப் பார்க்கலாம் மக்களே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top