சக்தி மானுக்கு அடுத்து இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, கொண்டாடப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ ‘மின்னல் முரளி’. மின்னல் முரளியாக மிரட்டிய, தீவண்டி பினேஷாக நம்மை சிரிக்க வைத்த, கோதா தாஸனாக மல்லுக்கட்டிய, மாயநதி மதனாக நம்மை கலங்க வைத்த… புதிய அலை மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு கதை நாயகன், டொவினோ தாமஸ். ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியராக காக்னிசண்ட்டில் வேலை பார்த்தவர், அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்த கதை தெரியுமா? டொவினோ தாமஸின் நிஜ காதல் கதைக்கும் அவர் நடிச்ச படத்தோட காதல் கதைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்ன படம்? கடைசியா அவர் நடித்த 10 படங்களை கணக்குல எடுத்துக்கிட்டோம்னா, ஒரு சில படங்களை தவிர எல்லாமே வேறலெவல் ஹிட்டுதான். இப்படி, சமீப காலமாக கேரளாவில் அதிகம் கொண்டாடப்படும் ஒரு சூப்பர் ஹீரோவா டொவினோ மாறியது எப்படி? வாங்க இந்த வீடியோவில் பார்ப்போம்…
ராகுல் டிராவிட் ஒரு முறை அவர் மகனுக்கு ஒரு கதை சொல்லி இருப்பார். “மூங்கில் விதை கண்ணுக்குத் தெரியாமல் பல ஆண்டுகள் மண்ணுக்கு அடியில் காத்திருக்குமாம், சட்டென ஒரு நாள் மண்ணைத் துளைத்துக்கொண்டு முதல் துளிர் வெளிவரும். அடுத்த சில தினங்களில் சில அடிகள் வளர்ந்திருக்கும், சில மாதங்களில் பல அடிகளைத் தாண்டி இருக்கும். அந்த மூங்கில் பல ஆண்டுகள் அமைதியாக இல்லை, தினம் தினம் உள்ளுக்குள் வளர்ந்துகொண்டு இருந்தது.”
டொவினோவும் ஒரு மூங்கில் தான். சின்ன வயசுல இருந்தே சினிமாக்குள்ள வரணும்னுதான் ஆசை. ஸ்கூல்ல நாடகம்லாம் பண்ணியிருக்காரு. ஆனால், எப்படி உள்ள வரணும்னு ஒரு டவுட். அப்புறம் ஃப்ரண்ட்ஸ்கூட சேர்ந்து ஷார்ட் ஃபிலிம்ஸ்லாம் பண்ண ஆரம்பிச்சிருக்காரு. மாடலிங் பண்ணவும் தொடங்கியிருக்காரு. கல்லூரி படிப்பை முடித்ததும், சென்னையில் காக்னிஸண்ட் நிறுவனத்தில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்த டொவினோவுக்கு அவர் வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறைவதாக அவருக்குத் தோன்றியது. அங்கிருந்து சினிமாத் துறைக்குள் நுழைந்தார்.
துல்கர் சல்மான் நடித்த ‘தீவ்ரம்’ படத்தில் உதவி இயக்குநராக டொவினோ பணி புரிந்தார். இந்தப் படத்தின் புரடக்சன் மேனேஜர் தான் துல்கரின் அடுத்த படமான ABCD-க்கும் புரடக்சன் மேனேஜர். அவருக்கு டொவினோவை ABCD படத்தில் நடிக்க வைக்கலாம் எனத் தோன்றியிருக்கிறது. அப்படித்தான் உதவி இயக்குநராக திரைத்துறைக்குள் நுழைந்தவர் நடிகராக மாறினார்.
டொவினோ தாமஸ் திரையில் தலைக்காட்டி பத்து வருடங்கள் ஆகிறது. ஆனால், அதில் முதல் 5 ஆண்டுகளுக்கு அவருக்குக் கிடைத்ததெல்லாம் சின்ன சின்ன வேடங்கள், துண்டு துண்டு கதாபாத்திரங்கள். டொவினோவின் முழுத்திறனை வெளிக்காட்டும் படங்கள் அல்ல அவை. அப்படி 7த் டே படத்தில் பிரித்விராஜ் உடன் நடித்ததில் இருந்தே இரண்டு பேரும் பயங்கர நண்பர்கள். என்னு நிண்டே மொய்தீன் படத்தில் “உனக்கு ரெண்டு சீன் படத்துல இருக்கு, உனக்கு நல்ல பேரை வாங்கித்தரும்… நீ நடி” என பிரித்விராஜ் கட்டளையிட, மறுக்காமல் டொவினோவும் அந்தப் படத்தில் நடிக்கிறார். சார்லி படத்திலும் துல்கருடன் ஒரே ஒரு காட்சியில் தலை காட்டி இருப்பார், குரூப் படம் வரைக்கும் நண்பர்களுக்காக சின்ன சின்ன காட்சிகளில் தலை காட்டும் வேடம்தான். கேரளாவில் விவேக் ஓபராய்னு நினைச்சுட்டுதான் மனுஷன் சினிமாவுக்குள்ள நுழைஞ்சிருக்காரு.
முதல் ஐந்து ஆண்டு விதையாக மண்ணுக்குள் இருந்த டொவினோ, அடுத்த ஐந்து ஆண்டுகளில் விருட்சமாக வளர்ந்தார். சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டிய டொவினோவை ‘கோதா’ படம் மலையாளக் கரையோரம் மனம் கவர்ந்த காமுகனாக அடையாளம் காட்டியது. அதே ஆண்டு, வெளியான மாயநதி படமோ டொவினோவை தமிழிலும், தெலுங்கிலும் ஒரு Pan South Indian Star ஆக உருமாற்றியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தீவண்டி, எண்டெ உம்மாண்ட பேரு, லூசிபர், உயரே, வைரஸ், லூகா, கல்கி, ஃபாரன்ஸிக், கல என அடுத்தடுத்து கதைக்களமாகவும், கதாபாத்திரமாகவும் பயங்கர வெரைட்டி காட்டி மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத புதிய அலை நடிகர்களில் ஒருவராக உருமாறி இருக்கிறார் டொவினோ…
மின்னல் முரளி படம் பார்த்ததில் இருந்தே டொவினோவின் மகள் ‘இஸ்ஸா’ டொவினோ உண்மையாகவே சூப்பர் ஹீரோ என நம்பிக்கொண்டிருக்கிறாராம். டொவினோவின் மகள் மட்டுமல்ல, சக்திமானைப் பார்த்து 90ஸ் கிட்ஸ் இவர் தான் சூப்பர் ஹீரோ என நம்பியதைப் போல 2K kids-களுக்கான சூப்பர் ஹீரோவாக மின்னல் ஹீரோ உருவாகி இருக்கிறார்.
காதலாகி… கசிந்துருகி…
பத்தாம் வகுப்பில் 90 மதிப்பெண்களுக்கு மேல் மலையாளத்தில் பெற்ற ஒரு மாணவன். பதினோராம் வகுப்புக்குச் சென்றபோது மலையாள வகுப்பில் மலையாள எழுத்துக்களை எழுதும்படி சொன்னபோது, எழுதத் தெரியாமல் பெப்பே… பெப்பப்பே என முழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். பக்கத்தில் ஒரு மாணவி எல்லாவற்றையும் எழுதி முடித்துவிட்டு கைகளைக் கட்டிக்கொண்டு பெருமிதமாக உட்கார்ந்திருக்கிறாள். அந்தப் பெண்ணிடம் கெஞ்சிக்கேட்டு வாங்கி காப்பி அடித்து எழுதி இருக்கிறான். அப்படியே அந்தப் பெண்ணிடம் கெஞ்சிக்கேட்டவன் கொஞ்சிப்பேசி காதலாகி கசிந்துருகி ஒன்பதாண்டுகள் கழித்து அவளையே கல்யாணமும் செய்துகொண்டு they happily live ever after…
என்ன ஒரு மலையாளப்படத்தின் காமெடி சீன் போல இருக்கிறதா? டொவினோ தாமஸ் நடிக்கும் ஒரு காட்சி போல இருக்கிறதா? இந்த சீனில் அந்தப் பையன் டொவினோ தாமஸ் தான். அந்தப் பெண் லிடியா டொவினோ. டொவினோ தாமஸின் மனைவி. இதுதான் டொவினோ தாமஸின் காதல் கதை. தங்கள் வாழ்நாளின் சரிபாதியை இந்த தம்பதிகள் காதலுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். டொவினோவின் அத்தனை ஏற்ற இறக்கங்களிலும் அவர் கரங்களை இறுகப் பற்றி மேலே உயர்த்தியது லிடியாவின் கரங்கள் தான்.
நடிப்பு மட்டுமல்ல… ஆல் ஏரியாலயும் ஐய்யா கில்லி..!
பள்ளியில் படிக்கும் போது ஹேண்ட் பால் டீமில் ஒரு முக்கிய வீரராக விளையாடி, ஜூனியர், சப் ஜூனியர் லெவலில் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்திருக்கிறார். பின்னாள்களில் அந்த அணிக்கு கேப்டனாகவும் மாறியிருக்கிறார். திருச்சூர் மாவட்ட அளவில் முக்கியமான ஒரு வீரரும் கூட. இன்றளவும் ஹேண்ட் பால் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக அவருடைய டீம் நண்பர்களுடன் சேர்ந்து தற்போதைய விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கிறார். இதற்காக அவருக்கு விருதெல்லாம் கொடுத்திருக்காங்க.
கேரள மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் உதவிக்கரம் நீட்டியவர்களில் முக்கியமானவர் டொவினோ. அப்போது சுழன்று சுழன்று அவர் செய்த வேலைகளைப் பார்த்து, இயற்கைப் பேரிடர் சமயங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட கேரள அரசால் அமைக்கப்பட்ட வாலண்டியர் திட்டத்திற்கான அம்பாஸிடராக டொவினோவை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
டொவினோ தாமஸ் நடித்த படங்களில் உங்களோட ஃபேவரைட் படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.