TN Crimes: தமிழகத்தில் குபீர் ட்விஸ்ட் கொடுத்த 10 கிரைம்கள்!

கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு நாடகமாடியவர்கள், போலீஸ் விசாரணையில் சிக்கும் சம்பவங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல. சமீபத்தில் கூட திருவான்மியூர் ரயில் நிலையக் கொள்ளையை உதாரணமாகச் சொல்லலாம்.

தமிழகத்தில் சமீபகாலங்களில் அப்படியாகத் திகீர் ட்விஸ்ட் கொடுத்த 10 கிரைம்களைப் பத்திதான் நாம பார்க்கப் போறோம். முதல்ல திருவான்மியூர் கொள்ளை சம்பவத்துல இருந்தே தொடங்கலாம்.

திருவான்மியூர் கொள்ளை நாடகம்

திருவான்மியூர் கொள்ளை நாடகம்
திருவான்மியூர் கொள்ளை நாடகம்

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ஜனவரி 3-ம் தேதி டிக்கெட் கிளர்க்கைத் துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டுவிட்டு 1.32 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக வெளியான செய்தி மீடியாக்களில் ஹெட்லைனாகப் பரபரத்தது. அதிகாலையில் டிக்கெட் கவுண்டருக்குள் கட்டிப்போடப்பட்டிருந்த நிலையில், ரயில்வே ஊழியர் டீக்காராம் மீனாவை போலீஸார் மீட்டனர். மூன்று பேர் துப்பாக்கி முனையில் தன்னைக் கட்டிப்போட்டுவிட்டு நான்கு நாள் டிக்கெட் பணம் ஒரு லட்சத்துக்கு முப்பத்தி இரண்டாயிரத்தைக் கொள்ளையடித்துவிட்டுப் போனதாகக் கண்ணீர் வடித்திருக்கிறார் அவர். ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாத நிலையில், அருகிலிருந்த கேமரா பூட்டேஜ்களை அலசி ஆராய்ந்த போலீஸுக்கு சந்தேக நபர்கள் வந்து போனதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதனால், டீக்காராம் மீது சந்தேகம் வலுக்கவே, அவரிடம் துருவித் துருவி விசாரணையை நடத்தியதில், திடீர் திருப்பமாகத் தனது மனைவியுடன் சேர்ந்து கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது வெளிச்சத்துக்கு வந்தது. ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியான டீக்காரம், பணத் தேவையை ஈடுகட்ட கொள்ளையில் ஈடுபட்டதை சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்தது தமிழ்நாடு போலீஸ்.

ஓவர் ஆக்டிங்கில் சிக்கிய மகள்

தீபாவதி
தீபாவதி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இருக்கும் செம்பொன்விளை பகுதியைச் சேர்ந்த குமார் சங்கர் என்பவர் கடந்த டிசம்பர் 6-ல் தனது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். எலெக்ட்ரிக் வேலை செய்து வந்த அவர், ரீத்தாபுரம் பேரூர் தி.மு.க செயலாளராகவும் இருந்தார். கொலைக் குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். தந்தை இறந்ததைக் கண்டு குமார் சங்கரின் மகள் தீபாவதி, தனது தந்தையைக் காப்பாற்ற யாருமே வரவில்லை என போலீஸார் முன்னிலையிலேயே ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார். இதனால், போலீஸாருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. மறுபுறம் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சந்தேகப்படும்படியான இளைஞர் ஒருவரை அடையாளம் கண்ட போலீஸார், செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து அவரது நம்பரைப் பிடித்தனர். அந்த இளைஞர் குமார் சங்கரின் மகள் தீபாவதியோடு செல்போனில் அடிக்கடி பேசியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தீபாவதியிடம் விசாரித்ததில், குடிபோதையில் அடிக்கடி தகாராறு செய்து வந்த தந்தையை நண்பர் கோபுவுடன் சேர்ந்து கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும், அதன் அடிப்படையில் ஸ்ரீமுகுந்தன் என்பவர் குமார் சங்கரை வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்.

திருட வந்த இடத்தில் சாமியாட்டம்!

கோவை சோத்துமடை பக்கத்துல இருக்க அண்ணாநகர்ல உச்சிமாகாளி கோயில் இருக்கு. கடந்த 3-ம் தேதி மதியம் அந்தக் கோயில் பூட்டை உடைச்சு கருவறைக்குள்ள இளைஞர் ஒருவர் குடிபோதையில் புகுந்திருக்கிறார். சத்தம் கேட்டு அந்த இடத்துக்கு பூசாரி குமார் வந்திருக்கிறார். வேலாயுதத்தைத் திருடும் நோக்கில் எடுத்த அந்த இளைஞர் பூசாரியைப் பார்த்தும் தேம்பத் தேம்ப விழித்திருக்கிறார். உடனே, புத்திசாலித்தனமாக தனக்கு சாமி வந்ததைப் போல சாமியாடியிருக்கிறார் இளைஞர். ஆனால், அவரோட சாமியாட்டத்துல சந்தேகமான பூசாரி குமார் அக்கம்பக்கத்துல இருக்கவங்களை உதவிக்குக் கூப்பிட்டிருக்காரு. அந்த இளைஞரை சுத்தி வளைச்ச பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஆனைமலை போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்கள். போலீஸ் விசாரணையில் அவர் சோத்துமடையைச் சேர்ந்த ஜேசுதாஸ் என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Also Read:

Mr.Bean: `நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம்’ – மிஸ்டர் பீன் பற்றி இந்த 6 தகவல்கள் தெரியுமா?

என் பொண்டாட்டியைக் காணோம் சார்!

மருதமலை பட பாணியில் தன்னை ஏமாற்றி இரண்டாவதாகத் திருமணம் செய்ததோடு, தற்போது முதல் கணவரோடு சென்றுவிட்ட மனைவி மீது நடவடிக்கை கோரி கணவர் ஒருவர் கோவையில் புகார் கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது. கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த விக்னேஷூக்கும் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த யாமினி என்பவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த செப்டம்பரில் திருமணம் முடிந்திருக்கிறது. திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில் யாமினி மாயமான நிலையில், அவரின் வீட்டாரிடம் விக்னேஷ் விசாரித்திருக்கிறார். அப்போது, யாமினிக்கு ஓராண்டுக்கு முன்பே சிவக்குமார் என்பவரோடு திருமணம் முடிந்ததாகவும், அவர் முதல் கணவரோடு சென்று விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதனால், அதிர்ச்சியடைந்த விக்னேஷ் முதல் திருமணத்தை மறைத்து தனக்கு இரண்டாவதாகத் திருமணம் செய்து வைத்த யாமினியின் பெற்றோர் மீது நடவடிக்கை கோரி கோவை போலீஸ் கமிஷனரிடம் புகைப்பட ஆதாரங்களோடு புகார் கொடுத்திருக்கிறார்.

போலீஸுக்கே ஐடியா கொடுத்த திருடன்

காஞ்சிபுரம் கொள்ளை
காஞ்சிபுரம் கொள்ளை

காஞ்சிபுரம் மாருதி நகரில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி கத்தி முனையில் பெண்களைக் கட்டிப்போட்டுவிட்டு 44 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது. முகமூடி நபர்கள் பற்றி காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் விசாரித்து வந்த நிலையில், அந்த வீட்டில் கொள்ளையடித்தது பாலகிருஷ்ணனின் தங்கை மகன் சந்தான கிருஷ்ணன்தான் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். கொள்ளை நடந்தபின்னர், மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸாருக்கே ஐடியாக்கள் கொடுத்து வந்த சந்தான கிருஷ்ணனின் செல்போன் சிக்னல் கொள்ளை நடந்தபோது வீட்டில் இருந்ததை வைத்து அவரை மடக்கியிருக்கிறார்கள் காஞ்சி தாலுகா போலீஸார். சூதாட்டம், சேவல் சண்டை என உல்லாசமாக வாழ்ந்து வந்த சந்தான கிருஷ்ணனுக்கு அதிக பணம் தேவைப்படவே, நண்பர்கள் கௌதம் மற்றும் சிவக்குமாரோடு சேர்ந்து நடத்திய கொள்ளை நாடகம் விசாரணையில் அம்பலமானது.

திருச்சி பகீர்

திருச்சி கொலை
திருச்சி கொலை

திருச்சி வரகனேரி அருகே உள்ள விஸ்வாஸ்நகரில் உள்ள ஆசிம்கான் என்பவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் வந்திருக்கிறது. இதில், ஆசிம்கானின் தாயார் நவீன் என்பவர் உடல் கருகி உயிரிழந்திருக்கிறார். ஆசிம்கானின் மனைவி ரேஷ்மா, கியாஸ் டியூபில் கசிவு இருந்ததாகவும், அதில் தீப்பிடித்து நவீன் உயிரிழந்ததாகவும் சொல்லியிருக்கிறார். விபத்து எனக் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்த போலீஸார், நவீன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த அறிக்கையில், நவீன் உடலில் 14 இடங்களில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆசிம் கானைக் காதல் திருமணம் செய்துகொண்ட தன்னை மாமியார் நவீன் சித்திரவதை செய்து வந்ததாகவும், கருவுற்ற போதெல்லாம் ஏதாவது காரணங்களைக் கூறி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியிருக்கிறார். சம்பவத்தன்று வீட்டின் சமையலறையில் வழுக்கி விழுந்த தன்னைத் தூக்கிவிடுமாறு மாமியார் சொன்னபோது, அவர் மீது ஏற்கனவே கோபத்தில் இருந்தநிலையில் கத்தியால் அவரைப் பலமுறைக் குத்தி கொலை செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், அவரை எரித்துவிட்டு கியாஸ் கசிந்து விபத்தில் இறந்ததாகச் சொன்னதாகவும் ரேஷ்மா வாக்குமூலம் கொடுத்தது போலீஸை அதிரவைத்திருக்கிறது.

வைரல் ஆடியோ ட்விஸ்ட்

நாகரஞ்சனி
நாகரஞ்சனி

ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற நாகரஞ்சனி என்ற பெண், தலைமைக் காவலர் சிவக்குமார் என்பவர் தன்னை உல்லாசத்துக்கு அழைத்ததாக ஆடியோ ஒன்றை கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார். இதுபற்றி போலீஸிலும் புகார் அளித்தார். இதையடுத்து துணை ஆணையர் தலைமையில் நடத்திய விசாரணையில் பல திகீர் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பின. நீதிமன்ற ஊழியரான நாகரஞ்சனி, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது குழந்தையைக் காணவில்லை என்று கூறி சித்தோடு காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் புகார் அளித்திருக்கிறார். விசாரணையில் குழந்தை அவரது கணவரோடு இருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது தனது குழந்தையைக் கடத்தியதாகக் கணவர் மீது மற்றொரு புகார் கொடுத்திருக்கிறார். இப்படி அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வந்த அவருக்கு தலைமைக் காவலர் சிவக்குமாரோடு நட்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், கடனாக சிவக்குமாரிடமிருந்து மூன்றரை லட்சம் வரையில் நாகரஞ்சனி வாங்கியதாகத் தெரிகிறது. கடனைத் திருப்பிக் கேட்டு சிவக்குமார் நச்சரித்த நிலையில், அவரை மிரட்டும் தொனியில் ஆடியோவை நாகரஞ்சனி வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆடியோவில் இருக்கும் குரல் தன்னுடையது இல்லை என்று விளக்கமளித்த காவலர் சிவக்குமார் தரப்பு, குரல் பரிசோதனைக்கும் தயார் என்று கூறியிருந்தார். ஆடியோ வெளியிட்ட சிவரஞ்சனி மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 லட்ச ரூபாய் மோசடி வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

முதல்முறையா திருட வந்தோம் சார்; மாட்டிக்கிட்டோம்!

சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் கோயில் நிர்வாகி ஒருவரின் வீடு இருக்கிறது. கடந்த டிசம்பர் 21-ம் தேதி அந்த வீட்டில் இளைஞர்கள் சிலர் பதுங்கியிருப்பதை காவலாளி நோட் பண்ணியிருக்கிறார். இதுகுறித்து சேலம் ஏத்தாப்பூர் போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. வீட்டை சுற்றி வளைத்த போலீஸார், அந்த வீட்டில் பதுங்கியிருந்த ஐந்து இளைஞர்களைக் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையில், அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. `முதல்முறையா திருட பிளான் பண்ணி வந்தோம் சார். இப்படி மாட்டிக்கிட்டோம்’ என்று அப்பாவியாக அவர்கள் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்களாம். சிறையில் இப்போது ஐந்து பேரும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொலையெல்லாம் பண்ணல சார்; கள்ள நோட்டுதான் அடிச்சேன்!

கள்ள நோட்டு
கள்ள நோட்டு

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சலுப்பபட்டி கிராமத்தில் பாண்டி என்பவரது தோட்டத்தில் இளங்கோ என்பவர் சடலமாகக் கிடப்பதாக சாப்டூர் போலீஸாருக்குக் கடந்த டிசம்பர் 23-ம் தேதி தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், உயிரிழந்த இளங்கோவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து தோட்டத்தின் உரிமையாளர் பாண்டியிடம் போலீஸார் விசாரிக்கவே, ஒரு கட்டத்தில் வேறு ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். `கொலையெல்லாம் நான் பண்ணல சார். நானும் இளங்கோவும் சேர்ந்து கள்ள நோட்டுதான் அச்சடிச்சோம்’ என்று போலீஸில் சொல்லியிருக்கிறார். பாண்டி தோட்டத்தில் இருந்து ரூ.11.64 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம், மை போன்றவற்றைப் பறிமுதல் செய்த சாப்டூர் போலீஸார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

என்னையவே அரெஸ்ட் பண்றியா?

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ஒருவர் குடித்துவிட்டு தகராறு செய்வதாக போலீஸாருக்குத் தகவல் வந்திருக்கிறது. சம்பவ இடத்துக்குச் சென்ற தலைமைக் காவலர் மாயக்கண்ணன், காவலர் லோகநாதன் ஆகியோரைத் தாக்கியோதோடு தகாத வார்த்தைகளிலும் பேசியிருக்கிறார். பொதுமக்கள் உதவியோடு அவர் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டிருக்கிறார். குடிபோதையில் இருந்த அந்த நபர் தான் வழக்கறிஞர் என்று கூறியிருக்கிறார். விசாரணையில் அவர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பது தெரியவந்திருக்கிறது. குடிபோதையில் இருக்கும் அவரை உடல் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போலீஸார் முயற்சித்த நிலையில், காவலர் பாபுவின் கைவிரல்களைக் கடித்ததோடு, தகாத வார்த்தைகளிலும் திட்டித் தீர்த்திருக்கிறார். ஒருவழியாக பெரும் முயற்சிக்குப் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Also Read – Kurup: 37 ஆண்டுகளாகத் தேடப்படும் குற்றவாளி… யார் இந்த சுகுமார குரூப்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top