2012-ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முக்த் சந்த், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். 28 வயதில் இந்த முடிவை அவர் எடுக்க என்ன காரணம்?
உன்முக்த் சந்த்
2012 ஜூனியர் உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 111 ரன்கள் எடுத்து இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் உன்முக்த் சந்த். கேப்டனாக கோப்பையை ஏந்திய அவர், ஒரே நாளில் உலக அளவில் ஃபேமஸானர். அதைத் தொடர்ந்து இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர், 2015 வரை அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். அதிரடி பேட்ஸ்மேனான உன்முக்த் சந்த், 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார். அதேபோல், 2014 டி20 உலகக் கோப்பைக்கான 30 பேர் டீமிலும் இடம்பிடித்திருந்த அவருக்கு, இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
எங்கே தொடங்கியது சறுக்கல்?
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே ரஞ்சிக் கோப்பையில் டெல்லி அணிக்காகக் களமிறங்கிய உன்முக்த் சந்த், முதல் சதத்தையும் பதிவு செய்தார். அவர் விளையாடிய நான்காவது போட்டியிலேயே 151 ரன்கள் குவித்து சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்தார். 2018-ல் ஐபிஎல் தொடரில் விளையாடத் தொடங்கிய அவர் அங்கு ஜொலிக்கத் தவறிவிட்டார். டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.
2016-ம் ஆண்டு முதல் கிரிக்கெட்டில் பல்வேறு பின்னடைவுகளை அவர் சந்திக்கத் தொடங்கினார். முதலில் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் டீமில் இருந்து உன்முக்த் சந்த் கழற்றிவிடப்பட்டார். அதன்பின்னர், ஐபிஎல் தொடரில் போதிய போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கிடைக்காததால் தாமாகவே வெளியேறிய அவரை, அடுத்த ஏலத்தில் எந்தவொரு அணியுமே வாங்க முன்வரவில்லை. 2019-20 சீசனில் உத்தராகண்ட் அணிக்காக ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாட முடிவு செய்தவருக்கு அங்கேயும் இறங்குமுகம்தான் மிஞ்சியது. 9 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடிய அவர் 195 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த ஓராண்டாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், இந்திய கிரிக்கெட்டுக்கு பிரியா விடை கொடுத்திருக்கிறார். `கிரிக்கெட் இல்லாமல் எனது ஒரு நாளை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை’ என்று கண்ணீருடன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
2012 ஜூனியர் உலகக் கோப்பை ஃபைனலில் உன்முக்த் சந்தோடு முக்கியமான ஃபாட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு வித்திட்ட சமித் படேல், இப்போது அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார். 2019-ல் இந்திய கிரிக்கெட்டுக்கு விடை சொன்ன அவர் அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு ஆடுவதற்கு 2022 ஆகஸ்டில் தகுதி பெறுவார். அவரைப் போலவே அமெரிக்க கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாட உன்முக்த் சந்த் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
2012 ஜூனியர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த் பற்றி பேசிய முன்னாள் பயிற்சியாளர் இயான் சேப்பல், “இவர் விராட் கோலியைப் போலவே இந்திய அணிக்கு விரைவிலேயே விளையாடுவார். அப்படி நடக்கவில்லையென்றால் ஒரே இடத்தில் தேங்கிவிடுவார்’’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
உன்முக்த் சந்த்தின் இந்த திடீர் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள் மக்களே… கமெண்டில் சொல்லுங்க!
Also Read – Chris Cairns: கொண்டாடப்பட்ட ஆல்ரவுண்டர் திவாலான நிலைக்குத் தள்ளப்பட என்ன காரணம்?