ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மேக்கில் (Stuart MacGill) 4 நபர்கள் கொண்ட குழுவினரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தியவர்கள், ஸ்டூவர்ட்டை காரில் கடத்தி சென்று அடித்து உதைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவரை விடுவிக்கவும் செய்துள்ளனர். இதனையடுத்து ஸ்டூவர்ட் காவல் துறையினரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் ஸ்டூவர்ட்டின் முன்னாள் மனைவியின் சகோதரரும் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் துப்பறியும் நிபுணர்கள் இந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது, “இரண்டு நபர்கள் ஸ்டூவர்ட்டை காரில் ஏற்றி சிட்னியில் உள்ள பிரிங்கெல்லி எனும் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் துப்பாக்கி முனையில் அவர் வைக்கப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார். பின்னர், பெல்மோர் பகுதியில் அவரை விடுவித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் பணத்துக்காகவே என கூறப்படுகிறது.
Also Read : பில்கேட்ஸ் – மெலிண்டா… முறியும் 27 ஆண்டு திருமண பந்தம் – பின்னணி என்ன?
குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தியை அறிந்த தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டூவர்ட் மேக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிட்னியில் உள்ள நியூட்ரம் பே எனும் பகுதியில் `அரிஸ்டாட்டில்’ எனும் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். மறுபுறம் அவருடைய முன்னாள் மனைவியும் யங் ஸ்ட்ரீட்டில் கிரேக்க உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். 50 வயதான ஸ்டூவர்ட் மேக்கில் ஆஸ்திரேலிய அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.