கொரோனாவில் இறந்த தாய்; 2 நாட்களாகத் தவித்த குழந்தை! – பெண் போலீஸாரின் நெகிழ்ச்சி செயல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகில் பெண் ஒருவர் வீட்டில் இரண்டு நாள்களாக இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சடலத்துக்கு அருகே அவருடைய குழந்தையும் இருந்துள்ளது. கொரோனா தொற்றுநோய் தொடர்பான பயத்தால் அக்கம் பக்கத்தினர் யாரும் அவருடைய வீட்டுக்கு செல்லவில்லை. இறந்த பெண்ணின் வீட்டின் உரிமையாளர் துர்நாற்றம் வீசியதை அடுத்து இதனை கவனித்துள்ளார். இதனையடுத்து, அவர் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்திருக்கிறார்.

காவல்துறையினர் கடந்த திங்கள்கிழமை அன்று வீட்டை உடைத்து பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி அருகில் இருந்த குழந்தையை மீட்டுள்ளனர். அந்தப்பெண் கடந்த சனிக்கிழமை அன்று இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 18 மாதங்களே ஆன குழந்தை உணவு, தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்களாகத் தவித்திருக்கிறது. குழந்தையை தூக்குவதில் அருகில் இருந்தவர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். இதனால், கான்ஸ்டபிள்களான சுஷிலா கபாலே மற்றும் ரேகா வேஸ் ஆகியோர் குழந்தையை எடுத்து உணவளித்துள்ளனர்.

Also Read : ஸ்புட்னிக் வருகை, மாற்றத்துக்கு தயாரான தமிழகம், ரோகித் ஷர்மாவின் விஷ்… #TNNTop10 #TopVirals 30/04/2021

“எனக்கும் எட்டு வயதில் ஒருவர் மற்றும் ஆறு வயதில் ஒருவர் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தக் குழந்தையையும் எனது சொந்தக் குழந்தையாக நினைத்து பால் கொடுத்தேன். குழந்தை மிகவும் பசியுடன் இருந்தது.” என கான்ஸ்டபிள் சுஷிலா தெரிவித்துள்ளார்.

கான்ஸ்டபிள் ரேகா, “நாங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். மருத்துவர் குழந்தையை பரிசோதித்துவிட்டு லேசான காய்ச்சல் இருப்பதாகத் தெரிவித்தார். குழந்தைக்கு உணவளிக்கவும் கூறினார். மற்றபடி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். குழந்தைக்கு உணவளித்த பின்னர், கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என்று கூறினார். குழந்தைக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

குழந்தையின் தாய் எப்படி இறந்தார் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை என்றும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என்பது தெரியவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “பெண்ணின் கணவர் வேலைக்காக உத்தரப்பிரதேச மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அவர் திரும்பி வருவதற்காக காத்திருக்கிறோம்” எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Reference : https://www.ndtv.com/india-news/baby-starved-for-2-days-as-mother-lay-dead-no-one-helped-fearing-covid-2425451

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top