`மெடிக்கல் எமர்ஜென்சிக்காக பகிரப்பட்ட மொபைல் எண்!’ – ஆபாச படங்களை அனுப்பிய நபர்கள்

கொரோனா லாக்டௌன்ல சோஷியல் மீடியானால பல நல்ல விஷயங்களும் நடந்துருக்கு.. கெட்ட விஷயங்களும் நடந்துருக்கு. நல்ல விஷயங்கள் நடந்தா `பி ஹேப்பி’னு கடந்து போயிடலாம். ஆனால், கெட்ட விஷயங்கள் நடந்தா அதை எப்படி கடந்து போக முடியும்? சமீபத்துல அப்படி ஒரு சம்பவம் நடந்துருக்கு. அப்படி என்ன கடந்து போக முடியாத அளவுக்கு சம்பவம் நடந்துச்சுனு கேக்குறீங்களா? பாதிப்படைந்த பெண்ணே சொல்றாங்க….

ஷஸ்வதியின் குரலாக நினைச்சு படிக்க தொடங்குங்க.. “என்னோட ஃபேமிலில ஒருத்தர் கொரோனாவால பாதிக்கப்பட்டு ரொம்ப கிரிட்டிக்கலான கண்டிஷன்ல இருந்தாங்க. அவங்களுக்கு அப்போ வெண்டிலேட்டர் உதவி தேவை பட்டுச்சு. நான் இண்டர்நெட்டை ரொம்பவே நம்புறவ.. அதனால, ட்விட்டர்ல உதவி கேக்கலாம்னு முடிவு செய்து ட்வீட் ஒண்ணு பதிவிட்டேன். ஆறு மணி நேரத்துக்குள்ள வெண்டிலேட்டர் உதவி கிடச்சுது. ஆனால், இரண்டு நாள்ல உடல்நிலை இன்னும் மோசமாச்சு. அப்போ, ஏ பாஸிட்டிவ் ரத்த வகையைச் சேர்ந்த பிளாஸ்மா தேவைப்பட்டுச்சு. அந்த நேரத்துலதான் என்னுடைய மொபைல் நம்பர் சிலரோட ட்வீட் வழியா ஷேர் ஆச்சு. முதல்ல எனக்கு ஷாக்கா இருந்தாலும், சீக்கிரமா உதவி கிடைக்கும்னு ஃப்ரண்ட்ஸ் சொன்னதால, அதை நான் ஒத்துக்கிட்டேன் ஆனால், அங்கதான் எனக்கே தெரியாம ஒரு தப்பு பண்ணிருக்கேன்னு அப்புறமா தோணிச்சு.

ட்விட்டர்ல நம்பர் அதிகமா ஷேர் ஆன அடுத்த நாள்ல இருந்து நிமிஷத்துக்கு 3,4 அழைப்புகள் வர ஆரம்பிச்சுது. நிறைய பேர் உதவி செய்ய முன் வந்தாங்க. அப்படி வந்த போன்களுக்கு மத்தியில் வித்தியாசமா ஒரு அழைப்பு வந்துச்சு. அவங்ககிட்ட பேசும்போது, நீங்க பிளட் டொனேட் பண்றீங்களா?”னு கேட்டேன். அதுக்கு அவர்,இல்லை.. ஆர் யு சிங்கிள்” அப்டினு கேட்டார். எனக்கு குழப்பமா இருந்துச்சு. அழைப்பை நான் கட் பண்ணிட்டேன். கொஞ்ச நேரத்துல திரும்பவும் போன் வந்துச்சு. உங்க டிபி ரொம்ப அழகா இருக்கு” அப்டினு சொல்லி இரண்டு பேர் சிரிச்சாங்க. நான் போனை கட் பண்ணிட்டேன். திரும்பவும் கால் பண்ணி,எங்க இருக்கேன்?, என்ன பண்றேன்?, நான் சிங்கிளானு? கேட்க தொடங்குனாங்க. நான் அவங்கள பிளாக் பண்ணிட்டேன்.

மெடிக்கல் எமர்ஜென்சிக்கு நடுவுல நான் இருந்தேன். யாராவது உதவி பண்ணுவாங்களானுதான் என்னோட மைண்ட் இருந்துச்சு. வேற எதுக்கும் நான் தயாரா இல்லை. ஆனால், மறுநாள் காலைல இன்னும் நிறைய போன்கள் வர ஆரம்பிச்சுது. ஒரே நேரத்துல 7 பேர் வீடியோ கால் பண்ணியிருந்தாங்க. அடுத்த போன் வர்றதுக்கு முன்னாடி இன்னொரு போன் வந்துட்டு இருந்துச்சு. தேவையில்லாம வந்த போன் எல்லாத்தயும் பிளாக் பண்ணேன். கனவு கடந்து போன மாதிரி இருந்துச்சு. ஆனால், அதிர்ச்சி வேறொரு தளத்துல காத்திருந்துச்சு.

எப்பவும் போல நான் வாட்ஸ் அப்பை திறந்தேன். யார்னே தெரியாத நபர்கள்கிட்ட இருந்து ஆபாசமான போட்டோக்கள் எனக்கு வந்திருந்துச்சு. வெறுப்பு, கோவம், பயம், நம்பிக்கையற்ற தன்மைனு எல்லா உணர்ச்சிகளும் எனக்கு வந்துச்சு. அந்த மோசமான நிலையை என்னால சமாளிக்க முடியல. ஆனால், எனக்கு தேவையான டோனர் கிடைச்சாங்க. எனக்கு பெர்சனலா நடந்த சம்பவம் வழியா பெண்களுக்கு நான் சொல்ற அறிவுரை என்னனா, `எப்பவும் உங்க மொபைல் நம்பரை சமூக வலைதளங்களில் பகிராதிங்க.’

ஒரு போர்வைக்குள்ள இருந்துட்டு நான் சொல்ற இந்த அறிவுரை எப்பவும் கை கொடுக்காதுதான். ஆனால், இன்பாக்ஸ்களை வக்கிரமான நபர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு நம்மகிட்ட இல்லை. இப்படியான பிரச்னைகள் வரும்போதெல்லாம் பாதிக்கப்பட்டவங்க என்ன செய்யணும், செய்யக்கூடாதுனு சொல்றாங்க. தப்பு பண்றவங்கள எந்த கேள்விக்கும் உள்ளாக்க மாட்றாங்க.

ஆண்கள் பல காரணங்களுக்காக சைபர் ஃப்ளாஷ் செய்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால், வாழ்க்கையில் தான் நேசிக்கும் ஒருவருக்காக இந்த மாதிரியாக உதவிகள் கேட்கும்போது ஆண்கள் ஏன் இப்படியான செயல்களில் ஈருபடுறாங்கனு எந்த ஆராய்ச்சியும் சொல்லல. இது மிகவும் அருவருப்பானது மற்றும் மனிதநேயமற்றது. ஐந்து நாள்கள் கடந்த பிறகும் எனக்கு நடந்த சம்பவம் கனமான அனுபவத்தைக் கொடுக்குது. இதுதொடர்பான பதிவுகளை பார்த்து மும்பை காவல்துறை என்னை அழைத்து பேசியதற்காக நன்றி சொல்லிக்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கவும் நான் விரும்பல. இப்போதைக்கு மற்றவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதில் நான் கவனம் செலுத்துறேன்.” என்று vice.com பக்கத்தில் எழுதியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top